No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 34

தடைகளைத் தாண்டி...

ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, என்னதான் செய்ய?’ எனும் பெருமூச்சோடு வாழும் நிலை இருக்கும்.

பிரச்சினைகளும், சிக்கல்களும் யாருக்குத்தான் இல்லை. என்ன வந்தாலும், அவற்றை ஓர் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, வாழ்க்கை எனக்கு என்ன தரக் காத்திருக்கிறது என்பதை நோக்கி ஆர்வத்தோடு ஓடிக்கொண்டே இருப்பவர்களையும் நாம் பார்த்திருப்போம். இதில் நாம் எந்த வகை என்பதை அடையாளம் காண்பதில்தான் சில மறைமுகச் சிக்கல்கள் இருக்கும்.

‘நான் எல்லாத்தையும் நல்லாத்தான் செய்றேன், எனக்கு அடுத்து இருப்பவர்களால்தான் இவ்வளவு பிரச்சினையும்’,

‘எனக்குக் கட்டமே சரியில்ல; அதனாலதான் இவ்வளவு பிரச்சினைகளும் வரிசை கட்டி இருக்கு’,

‘நான் எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு, என்னோட போதாத காலம், இங்க வந்து குப்பை கொட்ட வேண்டியதாயிருச்சு’, 

‘இது மட்டும் எனக்குக் கிடைச்சிருந்தா, நான் எங்கேயோ போயிருப்பேன்’ என்று இதுபோல பல சாக்குபோக்குகள் சொல்லி மனத்தை ஏதோ ஒரு வகையில் ஆறுதல் படுத்துபவர்களும் உள்ளனர்.

உளவியல் அடிப்படையில் பார்க்கும்போது, பொறுப்புணர்வு இல்லாத எவரும் எக்காலத்திலும் முன்னேற்றம் காண முடியாது எனத் தெரிகிறது. அப்படியென்றால், எனக்கு வரும் பிரச்சினைக்கு எல்லாம் நான் மட்டும்தான் காரணமா?

‘ஆம்’ என்பது மட்டும்தான் இதற்கான பதிலாக அமையும். நமக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு எப்போது முழுப் பொறுப்பு எடுக்கிறோமோ, அப்போதே நமக்கான தடைகள் நீங்கி, வலி நீங்கி, வழி பிறப்பதற்கான தெளிவு கிடைக்கும். இல்லையெனில், அந்தச் சிக்கல் அப்போதைக்கு மறைந்து போனாலும், பின்னால் வருகின்ற சிக்கல்களை எதிர்கொள்ளும் மனநிலை மங்கிவிடும்.

‘என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை; என்னுடைய திறமை யாருக்குமே தெரியவில்லை’ என்று குறை சொல்பவர்களுக்கு மத்தியில், ‘எந்தத் தடைகள் வந்தாலும் அதைப் புரிந்து, அவற்றினை எதிர்கொள்ளக்கூடிய திறனை வளர்த்து, முழுமூச்சோடு இறங்கி வெற்றி காண்பேன்’ எனும் தீர்க்கமான உணர்வோடு செயலாற்றும் பலரை நாம் கண்கூடாகப் பார்த்திருப்போம். அவர்கள்தான் நமக்கான உந்துசக்தி. அவர்கள் முன்னெடுக்கும் செயலாற்றலை அப்படியே உள்வாங்கி நாம் செயல்படுத்தும்போது, நாமும் அசைக்க முடியாத மனிதராக வலம் வருவோம்.

நம் திறமைகளைப் புரிந்துகொண்டு, நமக்கான வழிகளை உருவாக்கி, நம்மை நாம் விரும்புகிற உயரத்திற்குக் கொண்டு போகும் அளவிற்கு யாரும் நமக்காக வரமாட்டார்கள். வாழ்க்கையின் ஓட்டத்தில் சந்திக்கின்ற மனிதர்கள், சிந்திக்க வைக்கின்ற செயல்கள் மூலம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். இதை உணரும் போதுதான், நம்மை நமக்குப் புரிய வைக்க முடியும்; அதன்மூலம் உலகிற்கு நம்மைப் புரியவைக்க முடியும்.

ஒருசிலருக்கு எத்தனையோ திறமைகள் இருப்பினும், அதை முறையாகப் பயன்படுத்தி முன்னேறும் வாய்ப்பு இல்லாமல் தடுமாறுவார்கள். அவர்களுக்கு எங்கோ ஒரு சிறு உதவி அல்லது சிறு வெளிச்சம் தென்பட்டாலும், அதைச் ‘சிக்’கெனப் பிடித்து, முன்னேறும் ஆற்றல் கொண்டவர்கள் நமக்கான முன்னோடிகள். அந்த வரிசையில் நாம் எப்போது சேரப் போகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. எல்லா நிறுவனங்களிலும், திறமையை வெளிப்படுத்தும் தளம் இருந்தாலும், சில பல தடைகள் சிலரால் ஏற்படுத்தப்படும். அந்த நேரத்தில் பொறுமை மட்டுமே நம்மைப் பாதுகாத்து, உயர் நிலைக்கு இட்டுச் செல்லும். எல்லாவற்றையும் எதிர்த்து நிற்காமல், எதிர்கொள்ளும் ஆற்றலை நாம் வளப்படுத்திக் கொள்வோம். அதுதான் நம் உயர்விற்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

ஒன்றை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்; பயன்படுத்தாத திறமை அதன் திறனை இழந்துகொண்டே இருக்கும். ஆதலால், எதிர்வரும் தடைகளை எதிர்கொள்வோம். அது தரும் படிப்பினைகளை ஏற்றுக்கொண்டு வளம் காண்பதே நம் முழுமுதல் நோக்கமாக இருக்கட்டும். நீங்கள் செல்லும் வேகத்தை விட, நீங்கள் செல்லும் திசை மிக முக்கியமானது!

தொடர்ந்து பயணிப்போம்...

Comment