நாடாளுமன்றத் தேர்தல் 2024
கிறித்தவச் சமூகத்திற்கு ஒரு திறந்த மடல்
அன்பார்ந்த குருக்களே, துறவிகளே, அன்பிற்கினிய இறை மக்களே,
இந்திய நாடு பல்வேறு சிறப்புத் தன்மைகள் கொண்டது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என் பது நமது அரசியல் அமைப்பின் தாரக மந்திரம். இங்கே எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் ‘எல்லாரும் இந்தியத் தாயின் பிள்ளைகள்; உடன்பிறவாச் சகோதர சகோதரிகள்; அனைவருக்கும் சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சகோதரத்துவ உரிமை சொந்தம்’ என்று புதிய இந்திய மக்களாட்சி, குடியரசு மலர்ந்தது.
இன்றைய நிலைமையைச் சிறிது ஆய்வு செய்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்திய நாட்டில் மூன்றாவது பெரிய சமயமாகக் கிறிஸ்தவம் இருக்கிறது. சுமார் 2.3 விழுக்காடு மக்கள் கிறிஸ்துவை, கிறிஸ்தவ மதிப்பீடுகளை, இறையாட்சிக் கனவை ஏற்றுச் செயல்படுபவர்கள். கிறிஸ்தவர்கள் இம்மண்ணின் பூர்வீகக் குடிகள். தம் வாழ்வாலும், உழைப்பாலும் குறிப்பாக கல்வி, மருத்துவம், சமூகத் தொண்டு இவற்றால் இந்நாட்டைச் சிறப்பாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருப்பவர்கள். இந்திய வரலாற்றில் ஆழமாக வேர் பிடித்து, கிறிஸ்தவ அன்பை, இரக்கத்தை, பல்வேறு பணிகள் வழியாக, இம்மண்ணில் ஏழை எளியவர்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், அனாதைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தார் என அடித்தட்டு மக்களின் நலனுக்காய் எப்போதும் தம்மை அர்ப்பணித்து, ஆற்றலோடு செயல்படும் மக்கள்தாம் கிறிஸ்தவர்களாகிய நாம்.
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களாக நாம் ஆற்ற வேண்டிய சனநாயகக் கடமை உண்டு என்பதை நாம் நன்கு அறிவோம். நாம் எந்தவோர் அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர்; இறைவார்த்தையும், நற்செய்தி மதிப்பீடுகளும் காட்டும் வழியில், நாட்டு நலன் கருதி கட்சி அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டின் இன்றைய சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சாரச் சூழலைப் பற்றிச் சில உண்மைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதிப்பீடுகள்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை மதிப்பீடுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சமயச் சார்பின்மை, சனநாயகம், பன்முகத்தன்மை போன்றவற்றின் மீது இந்தியா என்ற நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், நேதாஜி போன்ற நம் முன்னோர் பல்வேறு தியாகங்களைச் செய்து, அனைவரும் இணைந்து வாழும் சூழலை உருவாக்கினர். பிளவுகள், பிரிவினைகள் தகர்த்து, பன்முகத் தன்மையை மதித்து, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காத்தனர். ஆனால், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்துவிட்ட சூழலில், இந்த அரசியல் அமைப்புச் சட்ட அடிப் டை மதிப்பீடுகளைத் தகர்த்து, இன்றோ இந்தியாவைக் கட்டியெழுப்பச் சில சக்திகள் முயன்று தங்கள் பலத்தை நிரூபிக்கின்றன. இதனை இத்தேர்தலில் நாம் எதிர்கொள்வதே நமது முதன்மைச் சவாலாக இருக்கிறது.
சிறுபான்மையினராக நாம் சந்திக்கும் சவால்கள்
1. இந்நாட்டின் பன்முகத் தன்மையை மறுத்து, ஒற்றைக் கலாச்சாரத் தேசியமாக இந்தியாவைக் கட்டமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. நாம் வாழும் இந்திய நாடு மதம், இனம், மொழி, கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் எனப் பல அடிப்படைகளில் பன்முகத்தன்மை கொண்டது. இதில்தான் சிறுபான்மையினரான நமது உரிமைகள், மனித மாண்பு, சமத்துவ உரிமை ஆகியவை மதிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, இப்போது இப்பன்முகத்தன்மையைச் சிதைத்து ‘ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்’ என்ற பெரும்பான்மை மதவாத கருத்தியலை இன்றைய ஒன்றிய அரசு நம்மீது திணிக்கின்றது. மேலும், ஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்ற பாசிசச் சித்தாந்தங்களோடு இந்திய நாட்டின் மக்களாட்சித் தத்துவத்தின் உயிர் நாடியைச் சிதைக்கிறது.
2. மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களைத் திட்டமிட்டே ஒன்றிய அரசும், அது சார்ந்து இருக்கிற ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் நம்மீது திணிக்கின்றன. ‘கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்களது அடிப்படை உரிமைகளான வழிபாட்டு உரிமை, வழிபாட்டுத் தலங்கள், சமய நிகழ்வுகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 2023-ஆம் ஆண்டில் மட்டும் 720-க்கும் மேற்பட்ட மதவெறித் தாக்குதல்கள் கிறிஸ்தவர்களாகிய நம்மீது நடத்தப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து, கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் என்ற பெயரில் நமது சமயச் சுதந்திரம் தடை செய்யப்படுகிறது. ‘ஒருவர் தனது மதத்தை ஏற்றுக்கொள்ளவும், வழிபடவும், பரப்பவும் உரிமை உண்டு’ என்னும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 25-இல் குறிப்பிடப்படுவதைத் தடை செய்து, நமது அடிப்படை உரிமையான கிறிஸ்துவை அறிவதற்கும், அறிவிப்பதற்கும் வழிகள் மூடப்படுகின்றன. 2021 முதல் 2023 வரை இந்தியாவில் ஆயர்கள், குருக்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர் என 833 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. ‘பொது சிவில் சட்டம்’ என்ற பெயரில் நம்மீது வகுப்புவாத சட்டத்தைத் திணிக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
3. சனநாயகக் குடியரசில் அடிப்படை சுதந்திரங்களும், கருத்துரிமையும் உயிர்மூச்சாகக் கருதப்படுகின்றன. பாராளுமன்றத்திலும் நாடு முழுவதும் கருத்துரிமை பறிக்கப்படுகின்றது. சிறுபான்மையினர் பொதுவெளியில் கருத்துச் சுதந்திரத்தை இழந்து வருகின்றோம். இறந்து போன அருள்தந்தை ஸ்டேன்சாமி போன்றோர்கள் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். சனநாயகத்தின் நான்காவது தூண் எனக் கருதப்படுகின்ற ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட் டில் சென்றுவிட்டன. அரசின் மக்கள் விரோதப் போக்கின் நடவடிக்கைக்கு அவை துணை போகின்றன. நியாயமான ஊடகங்கள் பல்வேறு வகைகளில் மிரட்டப்படுகின்றன. இதைவிடக் கொடுமை என்னவென்றால், மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் அரசாலேயே குழப்பமான சூழல்கள் உருவாக்கப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டு, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கண்மூடித்தனமாக நிறைவேற்றப்படுகின்றன. இதனால் நமது அடிப்படை வாழ்வாதாரங்களான நிலம், நீர், கடல், காடுகள், மலைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு, நமது வாழ்விடங்களிலேயே நாம் அகதிகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
4. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரப் பகிர்வை முன்வைக்கிறது. ஆனால், மாநில அதிகாரங்கள் முற்றிலும் பறிக்கப்பட்டு, ஒன்றியத்தில் ஒற்றை ஆட்சி முறையை உருவாக்க இன்றைய அரசு முயற்சிக்கின்றது. நமது மாநிலம் உள்பட தென் மாநிலங்கள் வரிப்பகிர்வில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு நமக்கு உரிமையாகச் சேர வேண்டிய நிவாரணத் தொகையைக்கூடத் தராமல், நமது மாநில உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றன. மேலும், தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி ஏழை மக்களின், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கின்றன.
5. கடந்த பத்தாண்டுகளில் நமது நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை பன்மடங்காகப் பெருகியுள்ளது. இதில் பெரும்பாலும் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்னர் என்பதைப் புள்ளி விவரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட் டங்களால் உழைக்கும் தொழிலாளர்கள் இன்று உரிமைகள் இழந்து, குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் கூலிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தல் என இளைஞர்களின் வேலைக்கான உரிமை பறிபோகின்றது. பல ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை நிறைவேற்றாமல் இருப்பது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள், பெண்களின் அரசுப் பணி என்ற கனவைச் சிதைக்கிறது. தலித் கிறிஸ்தவர்களின் உரிமையைத் தொடர்ந்து மறுக்கும் அரசு, உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுகின்றது.
6. அத்தியாவசியப் பொருள்களின் அதிக விலையேற்றம் ஏழைகளை விழிபிதுங்கச் செய்கிறது. காடு, கடல், கனிமம், நீர்வளம், நிலவளம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு, நாம் தொடர்ந்து ஏழைகளாக மாற்றப்படுகின்றோம். நமது உயிர் வாழும் உரிமை பறிக்கப்படுகிறது. பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் பல நூறு மடங்கு பெருகியுள்ளன. சிறுபான்மைச் சமூகங்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பழங்குடியின மக்கள் போன்றோர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா என நம்மீது தொடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இப்படி இன்றைய ஒன்றிய அரசின் மக்களாட்சி விரோதச் செயல்களைப் பட்டியலிட்டால் கணக்கில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது.
நமது சனநாயகக் கடமை
இத்தகைய சூழலில், நாம் 2024 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறோம். இது வழக்கமான தேர்தல் அன்று; மாறாக, நம் நாடு, அரசியல் அமைப்புச் சட்டம், அரசமைப்பு போன்றவற்றை முற்றிலும் புரட்டிப்போட்டு, ஒரு மதவாத ஆட்சியை நிறுவக்கூடிய நோக்கில் நடைபெறுகின்ற தேர்தல். இரு மாறுபட்ட சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறும் ஒரு தேர்தல். நாம் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் நம்புகின்ற சுதந்திரம், சனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம், பன்முகப்பட்ட தன்மை, கூட்டாட்சி, மாநில மக்களின் உரிமை, கல்வி, சமய உரிமைகள், வாழ்வுரிமைகள் அனைத்தும் ஒருபுறம்; ஒரு மதம், ஒரு கட்சி, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்று சமத்துவம் மறுக்கப்படுகின்ற, சகோதரத்துவத்துக்குச் சாவுமணி அடிக்கின்ற, சுதந்திரங்கள் பறிக்கப்படுகின்ற, உயர் சாதி ஆதிக்கம் நிறைந்த கருத்தியல் மறுபுறம். எனவே, நமது சரியான பார்வை, தெளிவான புரிதல், ஒன்றுபட்டு நிற்க வேண்டியத் தன்மை இன்றைய காலத்தின் கட்டாயமும், கடவுளின் அழைப்பும் என்பதை நாம் உணர வேண்டும்.
● இச்சூழலில் இம்மண்ணையும், மக்களையும் நேசிக்கும் கிறிஸ்தவர்கள், இந்திய அரசியல் சாசனம், அதன் விழுமியங்கள், அதனடிப்படையில் அமையும் அரசமைப்பு இவற்றைக் கட்டிக் காக்கும் நோக்கில், நாம் இத்தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிப்பதை உறுதி செய்வோம். ‘என் வாக்கு, என் உரிமை’ என்பதை அனைவரும் பதிவு செய்வோம்.
● இந்த நாடு சமயச் சார்பற்ற, மக்களாட்சி, குடியரசாக இருக்கும் வரையில்தான் நாம் குடிமக்களாக இருக்க முடியும். எனவே, இதனை அழிக்க நினைக்கும் சர்வாதிகாரச் சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் வாக்களிப்போம்.
● மதச்சார்புள்ள கட்சிகளுக்கும், அவற்றை நேரடியாக ஆதரிக்கும் அல்லது மறைமுகமாகச் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகளுக்கும், நமது ஓட்டுகளைப் பிரித்து நாம் வெற்றிபெறச் செய்ய விரும்பும் வேட்பாளர்களின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் கட்சிகளை முழுமையாக நிராகரிப்போம்.
● நற்செய்தி மதிப்பீடுகளின் அடிப்படையில் காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறிந்து, இத்தேர்தலில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சனநாயகம், சமூக நீதி, சிறுபான்மையினர் நலன் இவற்றைப் பாதுகாக்கும் கட்சிகளை இனம் கண்டு, அவற்றை ஆதரிப்போம்.
● அனைத்து மக்களின் மதநம்பிக்கையையும், மனித உரிமைகளையும் உறுதி செய்யும் விதத்தில், இம்மண்ணின் ‘சமயச் சார்பின்மையைக்’ காத்திட இத்தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம்.
● இந்நாட்டில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள், மாண்பு இவற்றைக் காப்பாற்ற சமயச் சார்பற்ற, சனநாயக சக்திகளுடன், விளிம்பு நிலை மக்களுடன், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள், தொழிலாளர்கள் என இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாக்களிப்போம்.
● வரலாற்றில் விடுதலையின் நாயகனாய்த் திகழும் நம் இறைவன் இன்றைய சூழலில் நம்மையும், நம் நாட்டையும், மக்களையும் ஞானத்தோடு வழிநடத்துவாராக!
இயேசுவில் அன்புடன்
+ ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை
Comment