No icon

உள்ளார்ந்த மாற்றம்

தனக்கு ஒத்துப் போகாத சூழல் வரும்போது, மாற்றத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு. இயந்திரம் இதைப் பற்றிய சுய அறிவற்ற, எது உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளதோ அதனடிப்படையில் செயல்படுகிறது. ஆனால், மனிதர்கள் தமக்கு விருப்பமில்லாததை மாற்ற முயல்கின்ற சுயசிந்தனையுடையவர்கள். மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடு தனிநபர் எதிர்பார்க்கும் வசதியைப் பொறுத்தது. இது ஆன்மிகம், அரசியல், சமூகம் என எல்லாத் தளங்களுக்கும் பொதுவானது. ‘மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பது, இயல்பாகப் பயன்படுத்தும் முதுமொழியானாலும், இக்கூற்றினை ஆழ்ந்து ஆராய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

முதலாவதாக, மதங்கள் தங்களுக்கெனத் தனித் தனி ஆன்மிகக் கோட்பாடுகளை வகுத்துப் பின்பற்றி வருகின்றன. இந்த மதத்திற்கு இதுதான், இவ்வளவுதான் ஆன்மிகம் என்று வரையறுக்க இயலாது. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெற்ற இறையனுபவத்தைப் பொறுத்து ஆன்மிகச் செயல்பாடுகள் மாறுபடுகின்றன.

ஆன்மிக அனுபவத்திற்கும், கடவுளுக்கும், மனிதனுக்கும், இயற்கைக்கும் தொடர்புண்டு. ஆனால், பிரிவினை உருவாக்கும் மதங்களில் கடவுளும் இல்லை; ஆன்மிகமும் இல்லை; மனிதமும் இல்லை; மாற்றத்திற்கான வாய்ப்பும் இல்லை. மதங்களுக்குள் கடவுளை அடைத்து வைத்துத் துன்புறுத்தும் மனிதர்கள் இங்கு மலிந்து விட்டனர். அடக்குமுறையும், ஆதிக்கவெறியும் மட்டுமே இம்மதக் கோட்பாடுகளின் வெளிப்பாடாக அமைகின்றன.

கோயில்கள் கட்டி, ஆடம்பரச் செலவுகள் செய்து, விழாக்கள் கொண்டாடுவது ஆன்மிகச் செயல்பாடுகள் ஆகாது. அவை வெறும் வெளிவேடங்கள் மட்டுமே. நாடே அழிவின் விளிம்பில் நிற்க, இங்கு இவ்வளவு செலவினங்கள் தேவைதானா? இச்செயலுக்கு மகிழும் கடவுளும் உண்டோ

மனிதனை மனிதத்தோடு நடத்துவதும், அயலாரை அன்பு செய்வதுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவை. அன்பே மதங்களுக்கும், ஆன்மிகத்திற்கும் அடிப்படை. அன்பால் அவனியையே மாற்ற இயலும் என்பதே அனைத்துக் கொள்கைகளுக்கும் அடிப்படையாக விளங்க வேண்டும். அரசியலைச் சாக்கடை என்பார் உண்டு. சேவை செய்யும் தளமாகப் பயன்படுத்தி மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர்களும் உண்டு. இன்று காணப்படுகின்ற அரசியல், குழப்பங்களை மட்டுமே மக்களிடையே உருவாக்குகின்றது. அரசியல் வியாபாரத்தளமாகி பல நாள்கள் ஆகிவிட்டன. மாறி மாறி புனைந்துரைப்பதும், செய்ததைச் சொல்லி பெருமை காட்டுவதும் இன்றைய அரசியலாகி விட்டன.

அரசியல், மக்களுக்காக இடைவிடாது இயங்கும் இயந்திரம். அதன் ஒரே வேலை, மக்கள் நலம் மட்டுமே. இன்று பசுவுக்கும், பகவானுக்கும்தான் அரசால் நன்மை உண்டாகியிருக்கிறது. மக்கள் பணத்தை வாங்கி, மக்களுக்கே கொடுப்பதா உதவிஇதைக் காணும்போதுஇதுக்குப் பருத்தி மூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாமேஎன்று தோன்றுகிறது. இதை அறிந்தும், பேச்சுரிமை பறிபோனது போல் மக்கள் வாழ்கின்றனர். உரிமைகள் வழங்கி மக்களை வழிநடத்த வேண்டிய அரசு, உரிமைகளைப் பறித்து மக்கள் மேல் ஏறி நடக்கின்றது.

சமூகம் என்பது மிக அருமையான, இயக்கமுள்ள சக்கரம். இங்கு எல்லாவிதமான மனிதரும் கலந்திருப்பர். சமூகம் என்பதைப் பிரித்து பொருள் காண எண்ணியபோது, (சமம்+அகம் = சமூகம்) வேறுபாடற்ற உள்ளம் கொண்டவர்கள் என்னும் இனிய பொருள் கிட்டியது. ஆனால், சனாதனம், மனு சாஸ்திரம் என மேற்கோள்காட்டி, வேறுபாடுகளைத் திணித்து, மக்களிடையே மிருகத்தனத்தைப் பாய்ச்சுகின்றனர். ஓட்டுக்காக மதத்தின் பெயரைப் பகடைக் காயாக உருட்டுகின்றனர். இருப்பினும், சாதிக் கொடியைத் தூக்கிப் பிளவுகளில் சிக்க வைக்கின்றனர். ‘வேற்றுமையில் ஒற்றுமைஎன்னும் புனித வாக்கியம், ‘இனி வேற்றுமை மட்டுமே; ஒற்றுமை இல்லைஎன்றச் சூழலுக்கு வந்து நிற்கிறது. சூழல் அறிந்து, சாதி, மத அடிப்படையில்தான் வேட்பாளர்களையும் நிறுத்துகின்றனர்.

கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய் வாழ்ந்த காலங்கள் போதும். கல்விக்கூடம் எதிர்கால வழிமரபினரைப் பிணைத்து நட்புற வாடச் செய்கிறது. எனவேதான், கல்விக்குள்ளும் தலையிடுகின்றனர் இந்தத் தரித்திரம் பிடித்தவர்கள். கல்வியில் சமத்துவத்தை முதன்மையாக்க வேண்டும். விழித்துக்கொள்ள வேண்டும். மனிதம் பேணும் மனிதர்கள் முன்னின்று வழிநடத்த வர வேண்டும். மக்களும் அவர்களைக் கண்டறிந்து இடம் அமர்த்த வேண்டும்.

மக்கள் மனங்களில் மாற்றம் வர வேண்டும். அது அனைவரிலும் சகோதரத்துவம் என்னும் உள்ளார்ந்த மாற்றமாக வெளிப்பட வேண்டும். உள்ளார்ந்த மாற்றம் பெற வழி தேடியவர்களாய் வெளியேறுவோம்.

Comment