No icon

வாய்ச்சொல் வீரர்

‘நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே, இவர் வாய்ச்சொல்லில் வீரரடி’ என்ற பாரதியின் பாடல் மோடி அவர்களின் பத்தாண்டு கால வாழ்க்கையைத் தோலுரித்துக் காட்டுகின்றது.

2014-தேர்தல் பரப்புரையின் போது கவர்ச்சியான திட்டங்களைச் சொல்லிக்காட்டி, ஆசை வார்த்தைகளை அள்ளிக்கொட்டி, அறியாத சனங்களின் வாக்குகளைப் பெற்று அரியாசனத்தில் அமர்ந்த மோடி, நாட்டு மக்களுக்காக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல் ‘அல்வா’ கொடுத்ததுதான் மக்கள் கண்ட பலன்.

ஒரு நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒன்றிய அரசின் அமைச்சர், தன்னுடைய சொல்லையும், செயலையும் மக்களை ஏமாற்றுவதற்காகவே பயன்படுத்தி இருக்கிறார் என்றால்,

‘கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே புரிஞ்சு போகும்;

இவர் ஒரு பொய்ப் பிறவி; இவர் ஒரு புதுப் பிறவி;

அம்மாடித் திட்டமிட்டு நடிப்பவரோ’ என்ற பாடல் வரிகள் மோடியின் உண்மை முகத்தினைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

‘பண மதிப்பிழப்பு’ என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தினரின், ஏழை விவசாயிகளின், கூலித் தொழிலாளிகளின் பணத்தைப் பறித்ததோடு, அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி, பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் எரித்தார்.

‘ஜி.எஸ்.டி.’ என்ற பெயரில் அநியாய வரிவசூல் செய்து, மத்தியக் கணக்கிற்குக் கொண்டு வந்து, பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து, பா.ச.க. அல்லாத மாநிலங்களுக்குக் கிள்ளிக் கொடுத்தார்.

2014-இல் 400 ரூபாய்க்கும் குறைவாக இருந்த எரிவாயுவை ஆயிரம் ரூபாய்க்கும் மேலாக விற்று, சாமானியர்களின் வாழ்க்கையைச் சக்கையாய்ப் பிழிந்தார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அளித்து 2014-இல் 105 ரூபாய்க்குக் கொண்டு சென்று கார்ப்பரேட்டுகளின் வாழ்க்கைக்குத் துணை போன பெருமை மோடியையே சேரும். தேர்தல் இலாபத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.

‘நீட்’ நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுக்குக் கண்ணில் மண்ணைத் தூவினதோடு மட்டுமில்லாமல், பல மாணவ- மாணவியரின் உயிரையும் பறித்தார். தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தி(து) இராஜ்யத்தை ஏற்படுத்தத் துடிக்கிறார். இரு மொழிக் கொள்கையை மாற்றி, மும்மொழிக் கொள்கையை முன்னெடுக்கத் துடிக்கிறார். புதிய கல்விக் கொள்கையைக் காவிக் கொள்கையாக மாற்ற நடிக்கிறார்.

பத்தாண்டு கால ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் எதையும் புதிதாக ஆரம்பிக்காமல், ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்பது போல அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.

கொரோனா தொற்றின் ஆரம்பக் காலத்தில் மக்கள் அவரவர்கள் சொந்த ஊர் செல்ல வாய்ப்பு அளிக்காமல், இரவு 12 மணி முதல் ‘ஊரடங்கு’ என்று சுதந்திரப் பிரகடனம் செய்து மக்களை நகர விடாமல் வாட்டி வதைத்துப் பட்டினிச் சாவை ஏற்படுத்தினார்.

‘இது ஏழைகளுக்கான அரசு’ என்று கூறும் மோடி, ஏழைகளின் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்ற காரணம் காட்டி உள்ளதையும் பறித்து, ஏறக்குறைய 21 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு என்று நிரூபணம் செய்துள்ளது.

இந்தியாவை அம்பானியிடமும், அதானியிடமும் அடகு வைத்து, மக்களைச் சந்தியில் நிற்க வைத்துள்ளார். கறுப்புப் பணத்தை எடுத்து ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூபாய் 15 இலட்சம் போடுவேன் என்று சொன்னவர், அதானி, அம்பானி, மல்லையா போன்றவர்களுக்குப் பல இலட்சம் கோடிக் கடன்களை ‘வாராக்கடன்’ என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேசன், ஒரே தேர்தல், ஒரே அதிபர் என்று இந்தியாவை அறிவிக்க இருக்கிறார் மோடி. அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, உலகம் சுற்றி மக்களின் வரிப்பணத்தை வாயில் போட்டுள்ளார்.

மாதா மாதம் ‘மன் கி பாத்’ என்ற உரை நிகழ்த்தி வாய்மைக்கும், ஆட்சிக்கும் வாய்க்கரிசி போட்டுள்ளார். பெண்கள் நலனைப் பற்றிப் பேசும் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, வீதியில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததையும், மணிப்பூர்  பற்றி எரிந்ததையும் கண்டுகொள்ளாமல் மறைமுகத் தூண்டுகோலாய் இருந்துள்ளார்.

பாராளுமன்றக் கூட்டத்திற்கு வருகை தராமல், வெளிநாடு சுற்றுவதையும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் மழுப்புவதையும் வழக்கமாக்கிக் கொண்டவர் பிரதமர் மோடி ஒருவரே.

மதத்தின்  பெயரால் கலவரங்களைத் தூண்டி விட்டு மக்களைத் துண்டாடி, இந்துத்துவாவைக் கொண்டாடி மகிழ்கிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை ஏவிவிட்டு, அடாவடி அரசியல் நடத்தி எதிர்க்கட்சித் தலைவர்களையும், ஆட்சியாளர்களையும் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்.

‘அமலாக்கத் துறை சோதனை’ என்ற பெயரில் மிரட்டி, தேர்தல் பத்திரம் மூலம் ஏறக்குறைய 5000 கோடிகளைத் தனது கட்சிக்குத் தேர்தல் நிதியாக வசூலித்துள்ளார் மோடி. தமிழ்நாட்டிற்கு அடாவடி ஆளுநரை அனுப்பி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கிறார்.

‘தமிழ்மொழி உயர்ந்த மொழி’ என்று உலக நாடுகளில் வீம்புக்காக வீர வசனம் பேசிவரும் மோடி, சென்னை மக்கள் ‘மிக்சாம்’ புயலில் மிதக்கும்பொழுதும், தென் மாவட்டங்களில் ஒரே நாள் மழையால் ஆழ்கடலாக மாறி பல உயிர்கள் பலியாகி, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபொழுதும் தமிழ் நாட்டை எட்டிப் பார்க்காதவர், தற்பொழுது தேர்தல் நேரத்தில் அடிக்கடி வந்து எட்டிப் பார்க்கிறார்.

தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாகச் சல்லிக்காசு கொடுக்காதவர், மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாட்டிற்கு வாரமொரு முறை வந்து பொய்ப்புராணம் பாடுகிறார். மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் துவங்கியிருக்கையில், மதுரை எய்ம்ஸ் மட்டும் மண்ணாகிப் போனது மோடியால்தான்.

இந்து மதத்திற்காகவும், இராமர் கோவிலுக்காகவும், சமஸ்கிருதத்திற்காகவும், பசு பாதுகாப்பிற்காகவும், கோமியத்திற்காகவும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஒதுக்கியவர், மக்களின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய்கூட ஒதுக்கவில்லை.  தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் வரம்பு மீறி தாக்கப்படுவதும், துப்பாக்கி சூடு நிகழ்த்தப்படுவதும் மோடியின் ஆட்சியில்தான் அதிகரித்துள்ளன.

எனவே, மக்களே! யாருக்கு உங்கள் வாக்கு? சிந்திப்போம்.புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட, போரிடும் வகுப்புவாதத்தை வேரோடு சாய்ப்போம்.

Comment