No icon

வாழ்வு வளம் பெற -17

நாள்கள் ஏழும், நல்லவை ஏழும்!

இந்தத் தாய்க்கு ஏழு பிள்ளைகள். மூன்று மகன்கள், நான்கு மகள்கள். ஏழு பிள்ளைகளும் தங்கள் பெற்றோர்மீது அன்புள்ளவர்கள்தாம். ஆனால், ஏழு பேரில் எவரும் பெற்றோரிடமோ, பெற்றோருக்கு அருகிலோ இல்லை. ஒருத்தி டெல்லி. ஒருவன் கொல்கொத்தா. இருவர் இருப்பது அமெரிக்காவில். ஒருத்தி ஆஸ்திரேலியாவில். மீதி இருவரில் ஒருவர் இலண்டன். இன்னொருவர் ஜெனீவா. முதுமையில் கணவரோடு தனியாக இந்தத் தாய்.

தூரத்தில் உள்ள ஏழு பிள்ளைகளையும் தன் வாழ்க்கையில் இருத்திக்கொள்ள இந்தத் தாய் ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். வாரத்தின் ஏழு நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிள்ளையோடு காணொளி மூலம் உரையாடுகிறார். ஞாயிற்றுக்கிழமை மூத்தப் பிள்ளையோடு தொடங்கி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் யாரோடு பேசுவது என்று பட்டியலிட்டு, அதனை ஃபிரிட்ஜில் ஒட்டியிருக்கிறார். எப்போதாவது இவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள் இந்தக் காகிதத்தைப் பார்த்துவிட்டு கேட்பதுண்டு: ‘ஒவ்வொரு நாளும் ஒரு பிள்ளைட்ட பேசியாகணுமா? இப்படி ஏதாவது சட்டம் போட்டிருக்காங்களா?’

தாயின் பதில் எப்போதும் இதுதான்: “எனக்கு எல்லாப் பிள்ளைங்களும் முக்கியம். ஏழு பிள்ளைங்களும் எனக்கு முக்கியம்தான். யாரையும் மறக்க முடியாது. அதனாலதான்...” இந்தத் தாயின் ஞானமும், முனைப்பும் பாராட்டிற்குரியன.

நமது வாழ்க்கை இன்னும் வளம்பெற இதற்கொத்த ஒரு பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்வாரத்தின் ஏழு நாள்களும் நம் மனத்தில் இருக்க வேண்டிய முக்கியமான காரியங்கள் ஏழு உள்ளன. இவற்றில் ஒன்றையும் மறந்துவிடாமல் நம் மனத்திலும், நம் வாழ்விலும் இருத்திக்கொள்ள இந்தத் தாய் செய்ததைப் போன்று நாமும் செய்யலாம். ஒவ்வொரு நாளையும் இந்த முக்கியமான ஏழில் ஒன்றிற்கென ஒதுக்கி, அதனோடு தொடர்புடைய செயல்களைச் செய்யலாம்.

வாரத்தின் முதல் நாளான ஞாயிறு புகழ்ச்சிக்கும், பாராட்டிற்கும் உரியது. அன்று என்ன செய்ய வேண்டும்? ஞாயிறு தொடங்கும்போதே அனைத்திற்கும் முதலான இறைவனைப் போற்றிப் புகழ்ந்து அந்த நாளைத் தொடங்கலாம்.

அதன்பின் நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும், அதற்குப் பிறகு நம் பணியகத்தில் உள்ள அனைவரையும் நினைத்துப் பார்த்து, அவர்களில் யாரை நான் பாராட்ட வேண்டும்? யாரின் நற்குணங்களை, யாரின் உழைப்பை, யார் முன்னெடுத்திருக்கும் புதிய முயற்சிகளை, யாரின் சாதனைகளை இன்று வரை அங்கீகரித்துப் பாராட்டாமல் இருந்திருக்கிறேன்? என்று நிதானமாக யோசித்து, அவர்களின் பெயரையும், நாம் பாராட்ட மறந்த காரியத்தையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு முடியுமுன் நேரிலோ, தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ இந்தக் கட மையை முடித்துவிட வேண்டும்.

திங்கள் இரக்கத்தின் நாள். காலையில் இறைவனின் அளவற்ற இரக்கத்தை, அதன் எண்ணற்ற வெளிப்பாடுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். பகலில் வேறு எதனையும் எதிர்பாராமல், இரக்கத்தினால் மட்டுமே தூண்டப்பட்டு ஓர் இரக்கச் செயலைச் செய்து முடிக்க வேண்டும்.

சிலர்மீது நாம் இரக்கம் காட்டாதிருப்பதற்குக் காரணம், நாம் அரக்கர்கள் என்பதனால் அல்ல; அவர்களின் உண்மையை, அவர்களின் நிலையை நாம் அறிந்து கொள்ளாததுதான். எனவே, வீட்டில் உள்ளோரில் தொடங்கி, நமக்குத் தெரிந்தோர் எல்லாரையும் நினைத்துப் பார்த்து, அவர்களின் மனப் போராட்டங்கள், வலி, வேதனைகள், கவலைகள், பயங்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள அவர்களோடு பேச வேண்டும். அவர்கள் சொல்வதைக் கவனமாய்க் கேட்க வேண்டும். அவர்களின் உண்மை நிலை புரிந்தால் இரக்கம் இயல்பாய்த் தோன்றும். அந்த இரக்கத்தை அவர்கள் உணரும் விதத்தில் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

செவ்வாய்க்கிழமை உதவிகளுக்கான நாள். ஒருவர் நமது உதவியைக் கேட்டு வர வேண்டும் என்று நாம் எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை. நம் மனமும், விழிகளும் திறந்திருந்தால் யாருக்கு நமது உதவி தேவை, எவ்வளவு எளிதாக நாம் அதனைச் செய்யலாம் என்பது நமக்கு எளிதில் புரிந்துவிடும். ‘யாருக்கெல்லாம் என்னால் உதவ முடியுமோ, அவர்களுக்கெல்லாம் உதவுவேன்என்கிற நிலைப்பாடு நிரந்தரமாய் இருக்க வேண்டும்.

உதவ முடியாத தருணங்கள் வாழ்வில் வரலாம். உதவி தேவைப்படும் சகமனிதருக்கு எவ்விதத்திலும் உதவ முடியாவிட்டாலும், அத்தருணங்களில் நாம் உடனிருக்கலாம்இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சிலுவை அடியில் நிற்கும் அன்னை மரியா. துடிதுடித்துச் சாகும் மகனுக்கு எவ்விதத்திலும் உதவ இயலாவிட்டாலும், உடனிருப்பேன் என்பதில் அவர் உறுதியாய் இருக்கிறார். அந்தத் தாயின் உடனிருப்பு அந்த இக்கட்டான வேளையில் மகனுக்கு எத்துணை பலம் தந்திருக்க வேண்டும்!

புதன்கிழமை நோக்கத்திற்கும், அர்த்தத்திற்கும் உரியது. குறிப்பிட்ட ஒரு செயல் என்றாலும் சரி, வாழ்வு முழுவதும் என்றாலும் சரி, அதன் நோக்கம் பற்றிய தெளிவு நமக்கிருக்கும் போதுதான், அந்தச் செயலோ, வாழ்க்கையோ அர்த்தமுள்ளதாகிறது. பேரறிஞர் நீட்சே சொன்னது போல, ஏன் என்ற கேள்விக்கு நம்மிடம் எப்போதும் பதில் இருந்தால், எப்படி என்ற கேள்விக்குப் பதில் கிடைத்து விடும்.

வியாழக்கிழமை ஏற்புக்கான, ஏற்றுக் கொள்வதற்கான நாள். நம்மிலேதான் இதுவும் தொடங்க வேண்டும். என் உடலை, தோற்றத்தை, அறிவுத் திறனை, திறமைகளை இருப்பதுபோல, ஏற்றுக் கொள்வதில் இது தொடங்க வேண்டும். பின் கணவன் அல்லது மனைவி, பிள்ளைகளை நாம் மனத்தளவில் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம் வேலையை, நம் பொருளாதார நிலையை, மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.

வெள்ளிக்கிழமை மன்னிப்பிற்கான நாள். தம்மைச் சிலுவையில் அறைந்து கொன்றோரைக் கூட இயேசு மன்னித்த நாளும் ஒரு வெள்ளிக் கிழமைதானே! அதனைப் புனித வெள்ளி என்கிறோம்.

நமக்குக் கோபமூட்டும் செயல்களை, நமக்கு வருத்தம் தரும் காரியங்களை யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார். அவர்களை மன்னிக்க மனமில்லாவிட்டால் என்ன நேர்கிறது? கோபம், வருத்தம், பழிவாங்க வேண்டும் என்ற வன்மம் ஆகியவை சேர்ந்த ஒரு நச்சுக்கலவை நம் மனத்திற்குள் இறங்கி விடுகிறது. இது நம் மனத்தை மட்டுமல்ல, உடலையும் பாதிக்கக்கூடிய ஆபத்து. மன்னிப்பதன் மூலமே இந்த நச்சுக் கலவையை மனத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்பதனால், ஆபத்தான நஞ்சுகளை நம்மிலிருந்து வெளியேற்றி, நம் உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் நாள் என்றும் நாம் வெள்ளிக்கிழமையை அழைக்கலாம். வெள்ளிக்கிழமை இரவு உறங்கப் போகுமுன் மன்னிக்காதவர்கள் என்று யாருமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை நன்றி உணர்விற்கான நாள். எனவே, மனமுவந்து இறைவனுக்கு நன்றி கூறி, அந்த நாளைத் தொடங்கலாம். பகலில் இந்த வாரத்தில் நமக்குப் பரிவு காட்டியோர், உதவிகள் செய்தோர், உடனிருந்தோர் அனைவருக்கும் மகிழ்வோடு நன்றி கூற வேண்டும். இவர்களில் முக்கியமானவர்கள் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் பலரும் மறந்து விடுகின்றனர். எனவே, நன்றி கூறுவதையும் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்.

நாள் முடியுமுன் எதற்கெல்லாம் இறைவனுக்கும், பிறருக்கும் நன்றிகூற வேண்டும் என்பதை ஓர் ஏட்டில் எழுதலாம். மனத்திற்குள்ளாகவோ, வெளியே சொல்லியோ நன்றிகூறத் தொடங்கியவுடன் ஓர் அதிசயம் நடப்பதைக் காணலாம். முடியாமல் இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவதைப் பார்க்கலாம்.

நன்றி உணர்விற்கும், மனநிறைவிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால், நன்றி உணர்வு இல்லாதவர்கள் மகிழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் இறைவனும், சக மனிதர்களும் தங்களுக்குச் செய்யும் நன்மைகளைக் கண்டுகொள்ள மறந்து, எப்போதும், எல்லாவற்றிலும் ஏதாவதொரு குறை கண்டுபிடித்து, முறையிட்டுக் கொண்டே நாள்களைக் கடத்துவார்கள். இவர்களோடு சேர்ந்திருப்பதே பெரும் சிரமமாகி விடும்.

வாரத்தின் ஏழு நாள்களும் இதனைச் செய்து பார்ப்போர் மனத்திற்குள் எத்தனை நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை எளிதில் உணர முடியும்.

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்).

Comment