ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்புக் கட்டுரை
அம்பேத்கரின் பன்முக ஆளுமை
அம்பேத்கர் பன்முகத்தன்மையுடைய ஆளுமையைப் (MULTI DIMENSIONAL PERSONALITY) பெற்றவராய்த் திகழ்கிறார். அனைத்து ஆளுமைகளிலும் முதிர்ச்சியும், பக்குவமும் (Matured) அடைந்தவராய் விளங்குகிறார். முதிர்ச்சியான பன்முகம் கொண்ட ஒருங்கிணைந்த ஆளுமையைப் பெற்றவராய் திகழ்கிறார். எங்கெல்லாம் பிறப்பால் உயர்வு-தாழ்வு நிலை உருவாகி, மனிதம் சிதைந்து, மாண்பிழந்த மானிடர் உள்ளாரோ அங்கெல்லாம் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். எனவே, ஓர் இனத்தின் தலைவர் என்று குறுகிய வட்டத்தில் இல்லாது, உலகில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஞானியாக ஒளி விடுகிறார்.
ஆளுமையா... அது என்ன? ஒரு மனிதரின் ஆளுமை அவரது வாழ்வின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆளுமை என்பது ஒரு மனிதரின் தனிப்பட்ட குணங்களையும் அல்லது தனித்தன்மையையும், அதனால் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிக்கிறது. ஒரு மனிதரை இன்னார் என்று அடையாளப்படுத்தி, பிறரிடமிருந்து வேறுபடுத்தும் தனித்துவம் எனலாம். ஆளுமை ஒரு மனிதனின் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் ஊடுருவி ஒளிர்வதைக் காணலாம். குறிப்பாக, வாழ்வின் இக்கட்டான சூழலில் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை ஆளுமை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருசில தலைவர்களின் ஆளுமையை, உலகம் அனைத்தும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற விரும்புகிறது. அவர்களில் அம்பேத்கர் மிக முக்கியமான தலைவராகக் கருதப்படுகிறார். இருபது நாடுகளுக்கும் மேல் அம்பேத்கர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளமை இவ்வுண்மைக்குச் சான்றாகும். இதற்குக் காரணம், அவரின் பன்முகம் கொண்ட ஆளுமையே. அந்த ஆளுமையிலே முதிர்ச்சி பெற்றவராய், சரியான பக்குவம் அடைந்தவராய் இருப்பதுதான் மிகச் சிறப்பானதும், நாம் கற்றுகொள்ள வேண்டியதும் ஆகும்.
கருத்தியல் ஆளுமை: ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற அருமையான கருத்தியலைத் தனது வாழ்வின் இலக்காகக் கொள்கிறார். “எந்த மதம் இந்த மூன்று விழுமியங்களைத் தனது இலக்காகக் கொள்கிறதோ, அந்த மதத்தையே நான் விரும்புகிறேன்” என்கிறார். ‘சுதந்திரம்’ என்ற வார்த்தை ‘liber’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வரும் ஆங்கிலச் சொல் ‘liberty’ஆகும். இதன் மூலப்பொருள் தனி மனிதனின் உரிமையையும், மாண்பையும் உறுதிப்படுத்துவதாகும். பொறுப்புணர்வுடன் கூடிய சுதந்திரத்தையே அவர் எடுத்துரைக்கிறார்.
சமத்துவம் என்று பார்க்கின்றபோது, நாம் அனைவரும் மதம், சாதி, இனம், பாலினம் என்ற பாகுபாடுகள் இன்றி, உயர்வு-தாழ்வு இன்றி சரிசமமாய் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார். சகோதரத்துவம் என்ற வார்த்தை, சமூகத்தில் ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்பும் பெரும் நோக்கத்தோடு அவரது எண்ணத்தில் இந்த விழுமியம் அமைகிறது. இந்த மூன்று முக்கிய விழுமியங்களைத் தன் வாழ்வின் இலக்காகக்கொள்கிறார். இதுவே அவரின் கருத்தியல் முதிர்ச்சியை எடுத்துரைக்கிறது.
கல்வியியல் முதிர்ச்சி : இவரது கல்வியியல் முதிர்ச்சி ‘கற்பி’ என்ற ஒரு வார்த்தையில் அடங்கிவிடுகிறது. பட்டங்களைப் பெற்று, சமூக அக்றையின்றி இருப்போரை ‘மூளை பெருத்தவர்’ என்கிறார். தான் கற்றக் கல்வியால் இந்தச் சமுதாயம் பயனடைய, தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பிறருக்குக் கற்பித்து வாழ்வோரை ‘அறிவுஜீவி’ என்கிறார். தானே ஓர் அறிவுஜீவியாகவும் வாழ்ந்து காட்டுகிறார்.
உளவியல் முதிர்ச்சி: சாதிய அமைப்பால் பல காயங்கள் அடைந்தாலும், உணர்சிவசப்பட்டவராய் இல்லாமல், அதை உளவியல் முதிர்ச்சியுடன், தான் நன்றாகக் கல்வி கற்று, இந்தியாவின் அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராய்த் திகழும் அளவிற்கு தன் ஆளுமையை உயர்த்திக்கொள்கிறார். தன்னைப் போன்ற பட்டியல் இன மக்கள் அனைவரும் உளவியல் முதிர்ச்சியுடன் வாழ்ந்திட பணிக்கிறார். இதனால் அவர் போராட்ட உணர்வு அற்றவர் என்பதல்ல; மாறாக, தன்மானத்திற்காகப் போராடி, மரித்திட பணிக்கிறார்.
‘கோயில்களில் சிங்கங்களையா பலியிடுகின்றனர்? ஆடுகளைத்தானே? எனவே, சிங்கங்களாகக் கிளர்ந்து எழுங்கள்’ என்கிறார். இதைப் ‘போராடு’ என்ற ஒரு வார்த்தையில் விளக்குகிறார். வீணாக வன்முறையை ஏற்காமல், தன்மானத்திற்காய்ப் போராடி மரிப்பதே மேல் என்று கூறி, உளவியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறாhர்.
ஆன்மிக முதிர்ச்சி: ஆன்மிகத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தேடல் இறையனுபவமாகக் கொள்கிறார். தான் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக்கொண்டவர் அல்லர்; ‘நான் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று கூறி, பல மதங்களிலும் தனது ஆன்மிகப் பாதையை ஒரு தேடலாக அமைத்துக் கொள்கிறார். கிறிஸ்தவ மதமும், இஸ்லாம் மதமும் தனது கருத்தியலுக்கு மாறுபட்டு இருப்பதை அறிகிறார்.
தனது ஆன்மிகத் தேடலில் புத்த சமயத்தை ஏற்றுக்கொள்கிறார். புத்த மதத்தை மஹாயானம்-ஹீனயானம் என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தனக்கும், தன் மக்களுக்கும் உண்மையான விடுதலையைத் தரும் புதுவித புத்தக் கொள்கையான ‘நவயானத்தை’ ஏற்றுக் கொள்கிறார். இங்குதான் அவரின் தனித்துவமான ஆளுமை முதிர்ச்சியைப் பார்க்கலாம்.
சமுதாய முதிர்ச்சி: இந்தச் சமுதாய அமைப்பு அவரைக் காயப்படுத்தினாலும், அவர் அதை எதிர்த்து மற்றவர்களோடு உறவுடன் பழகும்போது அவர்களைக் காயப்படுத்தியவர் அல்லர். சட்ட வரைவுக் குழுவின் தலைவராய்ச் சிறப்பாகச் செயல்படுகிறார். கருத்தியல் வேற்றுமைகள் பல தலைவர்களோடு இருந்தாலும், சமுதாய ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்தோடும் உரையாடி, உறவாடி தன் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருகிறார்.
கலாச்சார முதிர்ச்சி: இவருடைய நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒரு கலாச்சார முதிர்ச்சியைப் பார்க்கலாம். வறுமையில் வாடி, அவமானத்தில் நிமிர்ந்து கூட நடக்க முடியாமல் உள்ள மக்களுக்கு அவரது உடையும், நடையும், அவர் நிற்கின்ற பாவனையும் முதிர்ச்சி மிக்கதாகவும், புரட்சி மிக்கதாகவும் இருப்பது என்னை மிகவும் கவர்ந்த ஆளுமை முதிர்ச்சி என்பேன்.
அவரது சிலை அமைப்பே நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கையை எதிரொலிக்கும் சின்னமாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு அனைத்துப் பரிமாணங்களிலும் முதிர்ச்சி பெற்றவர் இம்மாமனிதர். இவர் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்வதோடு, அகில உலக மக்களுக்கும் ஆளுமையின் அடையாளமாகவும், சின்னமாகவும் விளங்குகிறார். தலைவர் என்ற நிலை மாறி, ஒரு ஞானியாக விளங்குகிறார். இவரை ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள் அடக்கி விடாமல், மனித குலத்திற்கு வழிகாட்டும் ஞானியாகக் கொண்டு அவரின் ஆளுமை முதிர்ச்சியைப் பின்பற்றுவோம்.
Comment