No icon

இயேசு மிகுந்த அக்கறையுள்ள நல்லாயன்!        

அன்பர்களே! இயேசுவின் வாழ்விலும், பணியிலும் தனித்துவமானவை என்று நான் கருதும் சில விழுமியங்கள், மதிப்பீடுகள், பண்புகளின் பின்புலத்தில் நாமனைவரும் எவ்வாறு நம் பணி வாழ்வை, கிறிஸ்தவ அழைத்தலை அர்த்தப்படுத்த முடியும் என்பதைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இது அறிவுரையோ, அறவுரையோ அல்ல; நம் வாழ்வின் எதார்த்தங்களை இயேசுவின் வாழ்வியலோடு பொருத்திப் பார்க்கும் ஓர் எளிய முயற்சி.

1)            ஆண்டவர் இயேசுவுக்கும், தந்தை கடவுளுக்குமிருந்த தனித்துவமான உறவை முதலில் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். கடவுளோடு இயேசு கொண்டிருந்த ஆழமான, வர்ணனைகளைக் கடந்த உறவுதான் அவரது பணி வாழ்வின் அடித்தளம் என்று கூறினால் அது மிகையாகாது. தாம் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்பதையும், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தமது நோக்கம் என்பதையும், அதுவே தமது உணவும், பானமும் என்பதையும் இயேசு பல்வேறு நற்செய்திப் பகுதிகளில், குறிப்பாக யோவான் நற்செய்தியில் (யோவா 4:34) தெளிவாகக் குறிப்பிடுகின்றார். “என் விருப்பத்தை நாடாமல், என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்” (யோவா 5:30) என்று வெளிப்படையாக அறிக்கை யிடுகின்றார்.

கடவுளின் அன்பார்ந்த மகனாகவும், உண்மையுள்ள ஊழியராகவும் இயேசு தம்மை அடையாளப்படுத்துகின்றார். “என் அன்பார்ந்த மகன் நீயே! உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” (மத் 17:5) என்று இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது தந்தை கடவுள் அறிக்கையிட்டு இந்தத் தனித்துவமான உறவை உறுதி செய்கிறார்.

கடவுளிடம் இயேசு கொண்டிருந்த நெருக்கம்தான் அவர் இறையாட்சிப் பணி செய்வதற்கும், மக்கள் பணியில் தம்மைக் கரைத்துக் கொள்வதற்கும் சக்தியைக் கொடுத்தது என்பது தெளிவாக விளங்குகிறது.

பகலெல்லாம் உண்பதற்குக் கூட ஓய்வில்லாமல் மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த இயேசு, இரவு வேளைகளில் தனிமையில் தம் தந்தையோடு உறவாடுகின்றார்; உரையாடுகின்றார் (லூக் 5:16) என்று லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் இந்த தனித்துவமான உறவைப் பக்குவமாய்ப் படம் பிடித்துக் காட்டுகின்றார். இயேசுவின் செப வாழ்வு நற்செய்தி ஏடுகளில் சிறப்பான இடம் வகிக்கின்றது என்பதை நாம் உணர அழைக்கப்படுகின்றோம்.

இறை அழைத்தலை ஏற்கும் ஒருவர், தன்னை அழைத்திருக்கும் கிறிஸ்து வோடு எவ்வளவு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அவருடைய பணி வாழ்வின் பொருளையும், பயனையும், நம்பகத் தன்மையையும் நாம் கணிக்க முடியும். அருள்பணியாளர்கள், துறவறத்தார், ஆயர்களின் வாழ்வு கிறிஸ்துவை மையப்படுத்திய வாழ்வாக இருக்க வேண்டும் என்பதைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல்வேறு தருணங்களில் வலியுறுத்துவதை நாமறிவோம்.  இயேசுவின் பாதச்சுவடுகளில் பயணம் மேற்கொள்ள விரும்பும் எவரும் இயேசுவோடு நெருங்கி, இணைந்து, ஒன்றித்து வாழ்ந்தால் மட்டுமே மிகுந்த கனி தர முடியும், “ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” (யோவா 15:5) எனும் இயேசுவின் வார்த்தைகள் நம் பாதைக்கு ஒளியூட்டும் விளக்காய் அமைய வேண்டும்.

நமது மேய்ப்புப் பணியில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள், முட்டுக்கட்டைகள், எதிர்ப்புகள், ஏளனங்கள் அனைத்தையும் தாண்டி, மக்களை வாழ்வின் பாதையிலே வழிநடத்த வேண்டுமென்றால், கிறிஸ்து தரும் சக்தி மட்டுமே நம்மைத் தாங்கிப் பிடிக்கும் அரணாய் அமைந்திடும். மேய்ப்பர், தான் மட்டும் இயேசுவோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதில் திருப்தி அடைந்துவிட முடியாது. மக்களையும் இயேசுவுடனான உறவு ஒன்றிப்பிற்கு வழிநடத்திச் செல்லுதல் அவசியம். அகில உலகத் திரு அவையின் ஆயராக நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பணியை அற்புதமாய்ச் செய்வதை நாம் காண்கிறோம்.

‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ எனும் தமது திருத்தூது ஊக்கவுரை எண் 3-இல் அவர் தரும் அழைப்பைக் கேளுங்கள். “I invite all Christians, everywhere, at this very moment, to a renewed personal encounter with Jesus Christ, or at least an openness to letting him encounter them; I ask all of you to do this unfailingly each day.” (EG.3) “இயேசு கிறிஸ்துவுடனான தனிப்பட்டச் சந்திப்புக்கு வழிவகுக்க அல்லது குறைந்தபட்சமாக அவர் நம்மைச் சந்திப்பதற்கான திறந்த மனநிலையை உருவாக்கிக் கொள்ள, எல்லா இடங்களிலுமுள்ள, அனைத்துக் கிறிஸ்தவர்களையும் இத்தருணமே அழைக்கின்றேன்.” இது ஒவ்வொரு மேய்ப்பரின் சிறப்பான கடமையென நான் கருதுகின்றேன்.

2) இயேசுவின் பணி வாழ்வில் தனித்து நிற்கும் மற்றொரு கூறு (அம்சம்), அவரது பணித் தெளிவும், பணி அர்ப்பணமும் என்று கூறலாம். தந்தை தமக்களித்த பணி என்ன என்பதிலும், அப்பணியை யாரோடு இணைந்து நிறைவேற்ற வேண்டுமென்பதிலும், தம் இலக்கு மக்கள் யார் என்பதிலும் இயேசு மிகத் தெளிவாக இருந்தார் என்பதற்கு நற்செய்தி ஏடுகள் சான்று பகர்கின்றன. “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1:15) எனும் இறையாட்சிப் பணிக்கான அறைகூவலோடு தம் பணி வாழ்வைத் தொடங்குகிறார் இயேசு.

அன்பு, நீதி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் போன்ற விழுமியங்களின் அடித்தளத்தில் புதியதொரு சமுதாயம் படைப்பது அவரது இலட்சியக் கனவு. இப்புதிய சமுதாயத்தின் நாயகர்களாக ஏழைகளும், விளிம்புநிலை மக்களும் ஆற்றலூட்டப்பட வேண்டும் என்பது அவரது பணி இலக்கு. இந்தப் பணித்தெளிவையும், அவரது பணித்திட்டத்தையும் அழுத்தமாய்ப் படம்பிடித்துக் காட்டுகிறது. மெசியாவின் பணி இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் இயேசு தவிடுபொடியாக்கினார்.

“இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!” (யோவா 1:29) என அவரை அறிமுகம் செய்து வைத்து, திரு முழுக்காட்டிய திருமுழுக்கு யோவான் கூட ஆளனுப்பி “வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” (லூக் 7:19) என்று வினவுகின்றார். இயேசு மறுமொழியாக, “நீங்கள் கண்டவற்றையும், கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்” (லூக் 7:21-23) என்று அவரின் பணித்தெளிவை உணர்த்துவதாக நான் கருதுகிறேன்.

படை பலமும், பண பலமும், அரசியல் செல்வாக்கும் இயேசுவின் வாழ்விலும், பணியிலும் எந்நாளும் இடம்பிடித்ததில்லை. அர்ப்பணமும், தற்கையளிப்புமே அவரது தனிச்சிறப்பு. புனித பவுலடியார் குறிப் பிடுவதுபோல தம்மைத் தாழ்த்திக் கொண்டதால், தம்மை இழக்கத் துணிந்ததால் மனித இனம் வாழ்வும், விடுதலையும், மீட்பும் பெற்றுக்கொண்டது என்பது நாம் சிந்தனையில் கொள்ள வேண்டிய மறை பொருள். தன்னைக் கொடுத்து நம்மை வாழ வைப்பவரின் அர்ப்பணமே இன்று நம் அழைப்பாகின்றது.  அழைத்தலில் மேய்ப்புப் பணியேற்கும் எவருக்கும் இயேசுவின் பணித்தெளிவும், பணி அர்ப்பணமும் இன்றியமையாத பண்புகளாகும். இயேசு மையப்படுத்திய இறையாட்சிப் பணியே இன்று நம் பணியாகின்றது என்பதை உணர்ந்திடுவோம். 

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம், திரு அவை என்னும் கோட்பாட்டு விளக்கம் எண் 5-இல் (Lumen Gentium) திரு அவை இறையாட்சிப் பணியைத் தம் தலையாயப் பணியாக ஏற்றுக்கொண்டுள்ளதை அழுத்தமாய்க் குறிப்பிடுகிறது. “The Church, equipped with the gifts of its Founder and faithfully guarding His precepts of charity, humility and self-sacrifice, receives the mission to proclaim and to spread among all peoples the kingdom of Christ and of God.” (LG.5). “தன் நிறுவுநரின் கொடைகளால் அணி செய்யப்பட்டு, அன்பு, தாழ்ச்சி, தன்னல மறுப்பு என்னும் அவருடைய விதிமுறைகளை உண்மையாகப் பின்பற்றும் திரு அவையானது, அனைத்து மக்கள் மத்தியில் கிறிஸ்து மற்றும் இறைவனின் ஆட்சியை அறிக்கை செய்து, உலகில் அதனை நிறுவும் பணியினைப் பெற்றுக் கொள்கிறது.” 

இறையாட்சியெனும் புதிய சமுதாயத்தைத் தன் மறைத்தளத்தில் எவ்வாறு மலரச் செய்வதென ஒவ்வொரு மேய்ப்பரும் சிந்தித்துத் திட்டமிட்டுச் செயல்பட அழைக்கப்படுகின்றார். சமத்துவச் சமுதாயம் படைப்பதற்கான சாத்தியக் கூறுகளைச் சக அருள்பணியாளர்களோடும், துறவறத்தாரோடும், இறைமக்களோடும் சேர்ந்து சிந்தித்து, தெளிவான செயல் திட்டங்களை வகுத்து, அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகின்றபோது, இயேசுவின் இறையாட்சிக் கனவு நனவாகும்.

இறையாட்சியின்  இந்த ஒருங்கிணைந்த பயணத்தில் எவற்றையெல்லாம் முதன்மைப்படுத்த வேண்டும்? எந்த மக்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்? என்ற தெளிவை உருவாக்குதல் தவிர்க்க முடியாதது. ஏழைகளை முன்னிறுத்தும் ஆண்டவர் இயேசுவின் பாங்கு (Preferential option for the poor and the marginalized) நமதாகட்டும் என்பதே எனது பரிந்துரை.

3) ஆண்டவர் இயேசு மக்கள்மீது கொண்டிருந்த அலாதியான அன்பும், பரிவும், அக்கறையும், மனித நேயமும் அவரது பணி வாழ்வின் தனித்துவம் என்பதை ஆல்பர்ட் நோலன் போன்ற பல இறையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். மற்ற சமயத் தலைவர்களெல்லாம் மக்களை எட்டி நின்று வேடிக்கை பார்த்தவர்கள். இயேசு மட்டுமே மக்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று, அவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டு அவர்களை வாழ வைத்தவர்.

மத்தேயு நற்செய்தி 9-ஆம் பிரிவு 36-ஆம் இறைவசனம் பரிவுள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. “திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார். அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.” சாதாரண மக்கள், சாமானிய மக்கள், வறுமையிலும், துன்பத்திலும் வாடிக் கிடந்த மக்களுக்கு ஓர் அக்கறையுள்ள ஆயராக இயேசு தம்மை அடையாளப்படுத்துகின்றார்.

நற்செய்தி உவமையில், உண்மையான ஆயருக்கும், கூலிக்கு மேய்ப்பவருக்கும் உள்ள வேறுபாட்டை இயேசு தெளிவாக முன்வைக்கின்றார். யோவான் 10:13-இல் “கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப் பற்றிக் கவலை இல்லை” (அல்லது) அக்கறையில்லை என்று தெளிவுபடுத்துகின்றார். இறைவாக்கினர் எசேக்கியேல், இறைவன் தம் அன்பை, அக்கறையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றார் என்று விவரிக்கின்றார். காணாமல் போனதைத் தேடுவதும், அலைந்து திரிவதைத் திரும்பக் கொண்டு வருவதும், காயப்பட்டதற்குக் கட்டுப் போடுவதும், நலிந்தவற்றைத் திடப்படுத்துவதும் (எசேக் 34:16) அக்கறையுள்ள நல்லாயனின் பணி. அன்பர்களே, அக்கறை என்பது ஒரு மேய்ப்பரின் அடையாளமாக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

இன்று நமது திரு அவையிலும், சமுதாயத்திலும் எத்தனை பேர் காயப்படுத்தப்படுகின்றார்கள்? இகழ்ச்சிக்குள்ளாக்கப்படுகின்றார்கள்? எத்தனை பேர் சமுதாயத்தில் பல்வேறு காரணங்களால் பந்தாடப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றார்கள்? இவர்களுக்கும், இன்னும் பிற மக்களுக்கும் பரிவுள்ள, அக்கறையுள்ள ஆயர்களாய் இருப்பது ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், கிறிஸ்தவத் தலைவர்கள் நம் அனைவரின் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

மத்தேயு 9:36-இன் ஆங்கில வாசகம் “When Jesus saw the crowds he had compassion for them, because they were harassed and helpless like sheep without shepherd”என்று குறிப்பிடுகின்றது. அன்பர்களே, Compassion - பரிவு என்பது வெறும் உணர்வு அன்று; அது ஒருநிலைப்பாடு! துன்புறுவோர் சார்பாக எடுக்கின்ற நிலைப்பாடு என்று சொல்வது பொருத்தமாகும். துன்புறுவோர் இருக்கும் இடத்திற்கு இறங்கிச் சென்று, அவர்களைத் தூக்கிவிடும் நிலைப்பாடுதான் Compassion என்று நான் நம்புகிறேன். இந்த அன்பும், பரிவும், அக்கறையும், மனிதநேயமும் நம் எல்லாருடைய வாழ்விலும் அவசியம் என்றாலும், ஒரு மேய்ப்பரின் பணி வாழ்வில் இது மிக மிக இன்றியமையாதது.

ஆகவே, மேய்ப்பர் தம் மந்தையோடு அன்பும், அக்கறையும், மரியாதையும் கலந்த நல்லுறவை வளர்த்துக் கொண்டு, மிகுந்த கனி தரும் இறையாட்சிப் பணி செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.

இறுதியாக, ஆடுகளுக்காகத் தம் உயிரையே கையளிக்கும் நல்லாயன் கிறிஸ்துவைப்போல நாம் நேசிக்கும் நம் மக்களுக்காக, அவர்களின் நலனுக்காக எதையும் இழக்கத் துணியும் பரந்த உள்ளத்தை, தியாகம் நிறை நெஞ்சத்தை நாமனைவரும் பெற்றிட நல்லாயன் கிறிஸ்துவிடம் உருக்கமாய் மன்றாடுவோம்.

அவ்வாறே, சமூக-அரசியல் தளங்களிலும் நம்மை வழிநடத்தும் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தன்னலம் தேடாது, பொதுநலன் பேணக்கூடியவர்களாகவும், தம் மக்களைப் பாகுபாடு இன்றி நேசிக்கக் கூடியவர்களாகவும், உண்மை, நீதி, நேர்மை வழியில் மக்களை வழிநடத்துபவர்களாகவும், தம் மக்கள்மீது பரிவுள்ளமும், மிகுந்த அக்கறையும் கொண்டவர்களாகவும், மந்தையின் நலனையும், நாட்டின் வளத்தையும் காக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இத்தகைய மதிப்பீடுகளைக் கொண்ட ஆளுமைகளை நல்ல தலைவர்களாக, மேய்ப்பர்களாக, வழிகாட்டிகளாக நாம் தேர்ந்தெடுக்க முயல்வோம். கிறிஸ்து நம்மைத் தேர்ந்து கொண்டது போல, இத்தேர்தலில் முழுமையாகச் சிந்தித்து வாக்களித்து நாமும் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுப்போம்!

                                                                                                            

Comment