வாழ்க்கையைக் கொண்டாடு – 40
சகிப்பதா? சரிசெய்வதா?
‘பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஒன்றுதானே!’ எனும் ஐயம் சிலருக்கு உண்டு. இரண்டிற்கும் தனித்த வேறுபாடுகள் உள்ளன. நாம் விரும்பும் இலக்கையோ அல்லது ஒரு பொருளையோ அடைவதற்கு ஆகும் காலச் சூழலில், எதிர்வரும் இன்னல்களைச் சந்தித்து வெற்றியைப் பெறும் வரை அமைதி காத்தலே பொறுமை ஆகும். வேறுபாடு மற்றும் முரண்பாடுகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவநிலைதான் சகிப்புத் தன்மை.
வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல், பொறுமை இழந்து, தன்னிலை மறந்து எதிர்வினை ஆற்றும் சகிப்புத்தன்மை அற்ற செயல் தன்னையும், சுற்றி உள்ளோரையும் அழித்துவிடும்.
‘இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ வேண்டியதா இருக்கு’ எனும் வார்த்தையை ஏறக்குறைய பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் கேட்க முடியும். விரும்பி ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை நமக்கு அனுபவத்தையும், நல்ல புரிதலையும் தரும். வேறு வழியின்றி வேண்டா வெறுப்போடு அணுகுவது மன அழுத்தத்தையும், தீராக் கோபத்தையும் மட்டுமே தரும்.
சிறுவயதில் வலிக்கிற மாதிரி நடித்ததும், இப்போது வலிக்காதது போல நடிப்பதும் சகிப்புத் தன்மையின் படிப்படியான மாறுதல் என்று சொல்வதா? வேறு வழியில்லை, ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எனும் நிலைக்குத் தள்ளப்பட்ட உணர்வா?
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சகிப்புத்தன்மை என்ற ஒன்று இல்லையென்றால், பல்வேறு சிக்கல்கள் உருவாக முழுமுதல் காரணமாக மாறிவிடும். அதற்காக நடப்பதையெல்லாம் பார்த்துவிட்டுக் கண்டும் காணாமல் செல்வதல்ல; ஒருவரின் செயல் உங்களுக்கு எரிச்சலைத் தந்தாலும் சகித்துச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரை அன்பு செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்றுதான் பொருள்.
இந்தத் தலைப்பில் இங்குப் பேச வேண்டிய தேவையென்ன? நாம் பணிபுரியும் இடங்களில் சகிப்புத்தன்மை அற்ற செயலால் பொறுமையிழந்து, பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு, பலர் பலவிதமான மன உளைச்சலுக்கு உள்ளாவதை நாம் கண்டிருப்போம். ஏன், நாம்கூட அவ்வாறான சூழலைக் கடந்திருப்போம். இவற்றை எப்படிச் சரிசெய்வது ? சகித்துப் போவது நல்லதா? இல்லை, சரி செய்து போவது நல்லதா?
சகித்துக்கொண்டே போவது பல்வேறு மறைமுகச் சிக்கல்களைத் தந்துவிடும். ஒரு கட்டத்தில் மன அழுத்தம் ஏற்பட்டு, யாரை, எதற்காக நேசிக்க ஆரம்பித்தோமோ அவர்களை அதே காரணத்திற்காக வெறுக்கவும் ஆரம்பித்து விடுவோம். ஆதலால் ஒரு கட்டத்தில் பொறுமை எல்லை தாண்டும் சூழலில் அதைச் சரிசெய்து விடுவது நல்லது.
ஒரு நெரிசலான கூட்டத்தில் நீங்கள் இருக்கும் போது, உங்களைப் பின்னால் இருந்து ஒருவர் எதேச்சையாக மோதிவிடுகிறார். ‘சட்’டென்று கோபம் கொண்டு, நீங்கள் திரும்பிப் பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்தவர் என்றால், அந்தக் கோபம் அடங்கிவிடும், நீங்கள் மிகவும் விரும்பும் மனிதர் என்றால், கோபம் காணாமல் கூட போய்விடும். ஆனால், அவர் தெரியாத நபர் என்றால் சற்றுக் கோபம் வரும். உங்களுக்கு அறவே பிடிக்காதவர் என்றால் கோபம் தலைக்கேறி, என்ன செய்வதென்று கட்டுப்பாடு இல்லாமல் வார்த்தைகள் வெடித்து விழும். அந்தக் கூட்டத்தையும், சூழலையும் புரிந்து கொள்ளும் பட்சத்தில் உங்களுக்குள் ஒரு சகிப்புத்தன்மை இருக்கும், அது உங்களைப் பக்குவப்படுத்தும்.
‘மாடியில் இருந்து துப்பினால் குடிசைமீது விழும்; குடிசையில் இருந்து துப்பினால் மாடியே விழும்’ எனும் வாக்கியத்தின் வீரியத்தை உணர்ந்தால் சகிப்புத்தன்மையின் வீரியத்தையும் நாம் உணர முடியும். இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை மனித வளத்துறையில் உள்ளவர்கள் நன்கு அறிவர்.
பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கும், நிறுவனத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டு, நிறுவனத்தின் குறிக்கோளை அடைய வேண்டிய முயற்சிகள் எடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்றாலும், HR-க்குக் கொஞ்சம் கூடுதல் பொறுப்பு என்றுதான் சொல்லியாக வேண்டும். மனிதர்களை அவ்வளவு எளிதில் எடைபோட்டு, ஒன்றை நிறைவேற்றிவிட முடியாது. நிறையப் புரிதலும், கொஞ்சம் பொறுமையும் வேண்டும். புரிதலுக்கு முதல் படியாக இருப்பது சகிப்புத்தன்மைதான். இதைச் சரியாகக் கையாண்டால் சிறப்பான மனிதராக வலம்வர முடியும்.
முழுவதும் சகித்துக்கொண்டே செல்வது நல்லதில்லைதானே! அப்படிச் செல்லும்போது நம் மதிப்பு குறைந்து விடாதா? சகிப்புத்தன்மை ஓர் எல்லையைக் கடந்துவிட்டால் அது மிகப்பெரிய அடக்க முடியாத கோபமாக வெளிப்படும். நம் நாட்டார் வழக்காற்றியல் தெய்வங்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும், அடக்க முடியா கோபமும், அழுத்தமும் வெளிப்படும்போது, நாம் இதுவரை பார்த்திராத ஒரு முகத்தைப் பார்க்க நேரிடும். அப்படிப் பொங்கியெழும் குணத்தை, செயலைப் பயந்து வணங்கும் சூழல் ஏற்படும்.
இம்மாதிரியான சூழல் சில நிறுவனங்களில் உருவாகி பல்வேறு இழப்புகள் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு தருணம் ஏற்பட நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. ஆதலால் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்களே எனும் ஒரே காரணத்திற்காக வகை தொகை தெரியாமல் நாம் நடந்து கொண்டால் பின்விளைவுகள் பெரிதாக இருக்கும். சரியான பதத்தில் சோற்றினை இறக்குவது போல, சரியான தருணத்தில் அடையாளம் கண்டு சரிசெய்து விடுவது சாலச்சிறந்தது.
சகிப்பும், பொறுமையும் நம் பண்பையும், ஆளுமையையும் அதிகரிக்கும். இவை அதிகரிக்க அதிகரிக்க நாம் அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விடுவோம். இந்தச் சகிப்புத்தன்மை, பணிபுரியும் இடத்தில் மனிதவளத்துறையில் உள்ளவர்கள் மட்டுமே கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை அல்ல; எல்லாருக்கும், எல்லா இடத்திலும் இது பொருந்திப் போக வேண்டிய ஒன்றாகும்.
‘மாறிவிட வேண்டும், மாற்றிவிட வேண்டும்’ எனும் இரண்டையும் சரிவில்லாமல் சரியாகக் கையாளத் தெரிந்தால் கவலையில்லை.
தொடர்ந்து பயணிப்போம்....
Comment