10 நிமிடப் பயணம்
பெங்களூரு மெட்ரோ இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். கதவருகில் சாய்ந்து நின்று கொண்டு பயணிப்பது என் வழக்கமாக இருந்தது. அன்றும் அப்படியே பயணித்தேன். அருகில் ஒரு குழந்தை ஒன்று, முதல் இரண்டு வயதிருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்தது. நானும் சிரித்தேன். எங்களுக்கு இடையே இருந்த கண்ணாடியின்மீது தன் ஒற்றை விரலை வைத்தது. கண்ணாடியின் மறுபக்கமிருந்து நானும் என் ஒற்றை விரலை வைத்தேன். சில வினாடிகள் இந்த விளையாட்டுத் தொடர்ந்தது. பின் கண்ணாடிக்கிடையே இருந்த இடைவெளியில் தன் விரலை நீட்டியது, நான் அதன் விரலை என் விரலால் தொட்டேன். ‘திடுக்’கென ஒரு சிரிப்பு. விரலை என்னிடமிருந்து நீக்கிக் கொண்டது. இன்னும் சில வினாடிகள் இந்த விளையாட்டுத் தொடர்ந்தது.
சற்றே சுயநினைவுக்கு வந்தேன். அட! குழந்தையாகவே மாறிவிட்டேனே! சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? யார் என்ன நினைத்தால் என்ன? இந்த நொடியில் நான் நானாக இருக்கிறேன்.
குழந்தையுடன் என் விளையாட்டுத் தொடர்ந்தது. சற்று நேரத்தில் குழந்தை எதிர் திசையிலிருந்த தன் சித்தியை அழைத்தது. அவரும் குழந்தையை நோக்கி நகர்ந்தார். சற்றே விலகி, குழந்தையின் சித்திக்கு வழி தந்தேன். குழந்தையின் கவனம் சித்தியின் மீது திரும்பியது. சற்று நேரத்தில் ‘அண்ணா...’ என ஒரு குரல். ஆம், குழந்தையுடையதுதான்; என்னைத்தான் அழைத்தது. மீண்டும் தொடர்ந்தது எங்கள் விளையாட்டு. இப்போது விரல்களால் அல்ல; முகப்பாவனையால்.
மீண்டும் குழந்தையின் கவனம் சித்திமீது! நான் இறங்க வேண்டிய இடமும் நெருங்கியது. நான் கதவை நெருங்கினேன். சில வினாடிகளில் ‘அண்ணா...’ என்று குழந்தையின் குரல். நம்மைத்தான் குழந்தை அழைக்கிறதோ என ஆவலாய்த் திரும்பிப் பார்த்தேன். என்னை அழைக்கவில்லை. வேறு யாருக்கோ அந்த அழைப்பு. இவ்வளவு நேரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என உள்ளம் கூறியது. ஆனால், குழந்தையின் உறவினர்கள் தவறாக நினைத்தால் என்ன செய்வது? என நான் அமைதியாக இருந்துவிட்டேன்.
மீண்டும் குழந்தையின் குரல் ‘அண்ணா...’ மீண்டும் திரும்பினேன். ‘அண்ணா, அங்கு நிற்கிறான்...’ என என்னை நோக்கி கரம் நீட்டினார் குழந்தையின் பாட்டி, ஆம், குழந்தை நான் என எண்ணித் தவறாக வேறு யாரோ ஒருவரை அழைத்துக் கொண்டிருந்திருக்கிறது. குழந்தை புன்னகையோடு என்னைப் பார்த்தது. ‘அண்ணா இறங்கப் போகிறான்’ எனப் பாட்டி கூறினார். குழந்தையின் முகம் சற்றே வாடியது. நானும் கையசைத்து விட்டு, இரயிலில் இருந்து இறங்கினேன். இவை யாவும் பத்து நிமிடங்களில் நடந்தேறியிருந்தன.
இந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகியும் இந்த நிகழ்வு என் சிந்தனையில் தொடர்ந்து அலையாக வந்து கொண்டே இருந்தது. இந்த நிகழ்வு ஏதோ ஒன்றை எனக்குக் கற்றுத்தர விழைகிறது என என் உள்ளம் உணர்த்தியது. ஆம், எனது இந்தக் குறுகியப் பயணம் வாழ்வெனும் நெடியப் பயணத்தின் முக்கிய அங்கமான உறவைப் பற்றி விவரிக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன்.
அந்தக் குழந்தைக்கும், எனக்குமான சந்திப்பு போல், பல உறவுகளின் சந்திப்புகள் எதார்த்தமாய், எதிர்பாராமல் நடக்கின்றன. ஆனால், ஆழமான தாக்கத்தைத் தந்துவிட்டுச் செல்கின்றன. இருவர் சந்திப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. ஆனால், உறவில் பிணைப்பிருந்தது எங்கள் சந்திப்பில்! என் வயதை மறந்து, சுற்றத்தை மறந்து, என்னையும் அந்தக் குழந்தையைப் போல் கபடற்று மாற்றியிருந்தது அந்தச் சந்திப்பு. உண்மை உறவுகளின் இலக்கணமும் அதுதானே! ‘சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’ என எழுந்த கேள்வி பல உறவுகளைக் கொலை செய்துள்ளனவே! நல்ல வேளை, அந்தக் கேள்வியை என்னால் துணிவோடு எதிர்கொள்ள முடிந்தது. ஆம், நான் நானாகவே இருந்தேன். பிறரின் குரூரப் பார்வையால் என் சுயத்தை முகத்திரையிட்டு நான் மறைத்துக் கொள்ளவில்லை. பிறருக்காக என்னை மாற்றாமல் குழந்தையிடம், குழந்தையாகவே பழகினேன்.
வாழ்வில் நாம் சந்திக்கும் உறவுகளுக்கு, நாம் மட்டும் முக்கியமான உறவுகளாக இருக்க முடியாது. எங்கள் விளையாட்டிற்கிடையில் குழந்தை தன் சித்தியை அழைத்தது. குழந்தைக்கு என்னைவிட அதன் சித்திதான் முக்கியம் என உணர்ந்து, நான் ஒதுங்கி நின்றேன். ஒருவருக்கு நான்தான் முக்கியம் என நாம் நம்மையே முக்கியமாக்கும்போது, பல நேரங்களில் ஏமாற்றமே நம் வெகுமதியாகிவிடுகிறது. ‘யாருக்கு யார் முக்கியம்?’ என்பது சூழலுக்கு ஏற்ப மாறலாம். திருமணமாகும் வரை பெற்றோர்; திருமணத்திற்குப் பின் வாழ்க்கைத் துணை; குழந்தை பிறந்த பின் குழந்தை; முதிர்ந்த வயதில் பேரக்குழந்தைகள்... என ஒவ்வொரு சூழலிலும் மனிதனின் அன்பின் மையம் மாறிக்கொண்டே இருப்பது நாம் அனுபவிக்கும் அன்றாட இயல்புதானே!
என்னதான் நம் அன்பின் மையம் நம் வளர்ச்சிக்கேற்ப மாறினாலும், நம் வாழ்வில் சந்தித்த இந்த உறவுகள்மீது நாம் வைத்த அன்பு நிலையானது. என்னுடன் பழகத் துவங்கிய குழந்தை தன் சித்தியை மறக்கவில்லை. தன் சித்தியுடன் விளையாடிய குழந்தை, என்னுடன் மீண்டும் விளையாடத் தவறவில்லை. இந்த எதார்த்தத்தை உணராத நாம், பிறரில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்துகொள்ளவும் தயாரில்லை; நம்மில் ஏற்படும் மாற்றத்தை ஏற்கவும் தயாரில்லை.
உறவுகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு தானாக அமைந்து விடுவதில்லை. எங்கள் பயணத்தில் அது குழந்தையின் முன்னெடுப்பு. நான் தொடர் வண்டியிலிருந்து இறங்கத் தயாராகும் போது, அந்தக் குழந்தையிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என எண்ணினாலும், குழந்தையின் உறவினர்கள் என்ன நினைப்பார்கள் என அமைதியாய் செல்லத் தயாராகிவிட்டேன். ஆனால், அந்தக் குழந்தை ‘அண்ணா....’ என அழைத்த குரலால் அக்குழந்தையிடம் கூறிவிட்டுச் செல்ல முடிந்தது. பல நேரங்களில் ‘நான் ஏன் பேச வேண்டும்?’ எனப் பல உறவுகள் இன்னும் ஏக்கத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
உறவுகளின் தொடக்கம் எதார்த்தமாய் அமைந்துவிடலாம். ஆனால், எந்தத் திடமான உறவும் தானாக வளர்ந்துவிடுவதில்லை. அதற்கு இருவரில் யாரேனும் ஒருவர் அல்லது இருவரின் முன்னெடுப்புகள் காரணமாய் அமைந்திருக்கும். இருவரும் முன்னெடுக்கும் உறவுகள் எடுத்துக் காட்டுகளாய்த் திகழ்கின்றன. நம் உறவுகள் சரியாய் அமைந்திட, பல நேரங்களில் வழிகாட்டுதல் இன்றியமையாததாகின்றது. யாரோ ஒருவரை, நான் என நினைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தது. எந்தப் பதிலும் இல்லை. குழந்தையின் பாட்டி என்னை அடையாளம் காட்டவே, அக்குழந்தை என்னைக் கண்டு கொண்டது. நாம் தேடி அலையும் உறவுகளும் பல நேரங்களில் இப்படி அமைவது நிதர்சனம். சரியான நபர் நம் உறவாய் அமையாவிடில், நம் வாழ்வின் நம்பிக்கை அசைந்து போவது சாத்தியமே. நாம் குழப்பமான மனநிலையில் இருக்கும்போது பிறரின் சரியான குறுக்கீடு நம் குழப்பத்தைத் தெளிவுபடுத்தும் காரணியாகிறது. இங்கு யாருடைய குறிக்கீடு என்பது முக்கியம். அந்தக் குழந்தையின் சூழலில் பாட்டி குழந்தையின் நம்பிக்கைக்குரியவர், அந்தச் சூழலைப் பாகுபாடின்றி அணுகக்கூடியவர்.
எந்த உறவிலும் நாம் என்ன பெறுகின்றோம்? அல்லது என்ன கொடுக்கின்றோம்? என்பது முக்கியமல்ல; நாம் என்னவாக இருக்கின்றோம்? என்பதே முக்கியம். அந்தக் குழந்தையும் எனக்கு ஏதும் கொடுக்கவில்லை, நானும் ஏதும் கொடுக்கவில்லை. ஆனாலும், நான் இரயிலை விட்டகலும்போது குழந்தையின் முகம் வாடியிருந்தது. என்னுள் அந்தக் குழந்தையிடமிருந்து விடைபெற்றுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.
எந்த உறவிலும் பொருள்கள் மையமாவதில்லை, மாறாக, இருப்பு மையமாகிறது. ஒருவரின் தேவையின்போது நான் அவருடன் இருந்தேனா? என்பது மட்டுமே ஓர் உறவின் தொடர்ச்சிக்கு அடித்தளமாகின்றது. உறவு பல நேரங்களில் எதார்த்தமாய் எதிர்பாராமல் துவங்குகிறது. பிறரின் எண்ணங்களால் பாதிக்கப்படாதவை தன்னை மட்டும் மையப் படுத்துவதில்லை. இருவராலும் வளர்க்கப்பட வேண்டியது, தானாக வளர்ந்துவிடுவதில்லை; முறையான வழிகாட்டுதலால் தெளிவடைகிறது. பெறுவதோ, கொடுப்பதோ அல்ல; இருப்பது! அந்தக் குழந்தையுடனான பத்து நிமிடப் பயணம், உறவின் பொருளை எனக்கு விளக்கியது. நாம் ஒவ்வொரு வரும் இதே போன்ற ஒரு குழந்தையுடன் கூடிய பத்து நிமிட இரயில் பயணத்தைச் சுவைத்திட வாழ்த்துகிறேன்.
Comment