No icon

ஹிட்லர் 2.0

பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியத் திருநாடு எல்லா மதத்தினரையும் சரிசமமாக நடத்துகிறது. ஒவ்வொரு குடிமகனையும் சரிசமமாக நடத்தவே அண்ணல் காந்தியடிகளும், ‘அரசியல் சட்டமாமேதை’ திரு. அம்பேத்கரும் விரும்பிதான் அரசியல் சட்ட சாசனத்திற்கு உரு கொடுத்தனர்.

தற்போதுள்ள பா.ச.க. அரசு இந்த அரசியல் சட்ட முன் வடிவை எப்படியெல்லாம் சிதைத்து, தனது சுய இலாபத்திற்காக மாற்றி அமைக்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ‘வரி’ வசூல் செய்யும் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டியதே தவிர, அதில் அம்பானி / அதானி குழுமம் கொழுத்த இலாபம் அடைவது, மேலும், மேலும் தமது நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கல்ல.

நம் நாட்டின் சுப்பனும், குப்பனும் ‘டூத் பேஸ்ட்’ வாங்கினால்கூட GST வரி கட்டிதான் பொருளை வாங்கி நுகர்வு செய்கிறான். சாதாரணமாக ஒரு TVS 50 வாகனம் ரூ. 54,500/- அடக்கவிலை என்றால், On Road வரும்போது தற்போது ரூ. 78,850/- பணம் செலுத்திதான் வண்டியை வெளியே எடுக்க (ஷோரூமிலிருந்து) வேண்டியுள்ளது; இதில், GST 28% அதாவது ரூ. 10,000/- ரூபாய்க்கு ரூ. 2800/-; 50,000/- ரூபாய்க்கு 14,000/- கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இப்படிக் கசக்கிப் பிழிந்து வாங்கப்படும் வரிப்பணம், இந்தியாவின் வளர்ச்சி, சமூக நலத் திட்டங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதைக் காட்டிலும், 16 இலட்சம் கோடி ரூபாய் ‘வராக் கடன்’ தொகை Write off  செய்து இருக்கிறார்கள் - அதானிக்கும், அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக.

குப்பனும், சுப்பனும் விவசாயக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் (பருவ மழை தவறும் போது), பரிதாப நிலை எட்டும்பொழுது டிராக்டர்கள் ஜப்தி, நிலத்தை ஜப்தி செய்வது போன்ற ஈவு இரக்கமற்ற நடவடிக்கைகளில் கடன் கொடுக்கும் வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் தம் இன்னுயிரை விட்டு, அவர்தம் குடும்பத்திற்கு ஆற்றவியலாத் துயரத்தை விட்டுச் சென்றுள்ளனர். இவையெல்லாம் மோடிக்குத் தெரியாமலில்லை. கோவணத்துடன் விவசாயிகள் டில்லியில் போராடியபோது நேரம் ஒதுக்காத மோடி, சினிமா நடிகைகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியது வெட்கக்கேடான செயல்.

இஸ்லாமியர்களை - வங்கதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வந்த ‘வந்தேறிகள்’; இவர்களுக்குக் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்து பெண்களின் தாலியைப் பிடுங்கி, அந்தத் தங்கத்தை இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடும். அதிகக் குழந்தை பெற்றுக்கொள்வதால் 150 கோடி மக்கள்தொகை ஆகிவிட்டது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி மதம் கொண்ட யானை பிளிறுவது போல, நாகரிகமற்றுப் பேசிய செயலை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்துப் பதிவு செய்திருக்கின்றன. தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளன. தேர்தல் கமிஷனில் முறையிட்டு என்ன பலன்? தேர்தல் கமிஷன் உயர்நிலை பதவி வகிக்கும் அதிகாரிகள் மோடியின் மகுடிக்கு ஆடும் நல்ல பாம்புகளே தவிர, சுயமாக டி.என். சேஷன் போல தைரியமாக நடவடிக்கை எடுக்கத் தவறினவர்கள்.

நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் காசர்கோடு எனும் இடத்தில் V.V. Pad – (EVM Machine) (ஓட்டு இயந்திரம்) மெசினில் நடந்த பரீட்சார்த்த முயற்சியில், 1000 ஓட்டுகள் பதிவானால் 1200 ஓட்டுகள் எனக் காட்டுகிறது. பா.ச.க.விற்கு ஓர் ஓட்டுப் போட்டால், இரண்டு ஓட்டுகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

நாம் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது வாக்காளர் பட்டியல் பார்த்து ‘டிக்’ அடிப்பார்கள், அதன்பின் மற்றொருவர் ‘மை’ வைக்கும்போது இன்னுமொரு லிஸ்டில் ஓட்டு செலுத்துவதற்கான அனுமதிச் சீட்டு வழங்குவார்கள். ஓட்டு அளித்த பின் அதிலிருந்து Print out ஆன வாக்குப் பதிவுகள் மாலை முடிந்த பிறகு வெளியே வரும். இவை மூன்றும் Tally ஆக வேண்டும். காசர்கோட்டில் இம்மூன்றும் Tally ஆகவில்லை. சோதனை முயற்சி செய்து பார்த்தபோது அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் தேர்தல் அதிகாரிகள். இந்த விசயத்தை அப்படியே இருட்டிப்புச் செய்துவிட்டனர். ‘வாக்கு சதவிகிதம் குறைந்துவிடும், மக்கள் வாக்குச்சாவடிக்கு வாக்கு அளிக்க வரமாட்டார்கள்’ என்று அப்படியே மறைத்துவிட்டனர். ஒருசில செய்தி ஊடகங்களே இந்தத் தேர்தல் முறைக்கேட்டினைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தின.

பொதுமக்களை இப்படியெல்லாம் ஏமாற்றிச் சுலபமாகப் பிரதமர் அரியணையில் ஏறி அமர்ந்து கொள்ளலாம் என்று முயற்சிக்கும் மோடி அவர்களே, ‘காலம்’ எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. காலச்சக்கரம் சுழலும். அப்போது நமது பக்கத்து நாடான இலங்கை தேசத்தில் இராஜபட்சே என்கிற கொடுங்கோலன் இருந்தானே, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கொண்டானே! அதே நிலைமை உமக்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? மறந்துவிடாதீர்கள் ஜாக்கிரதை!

இந்து மகளிர் தாலியைப் பற்றிக் கவலைப்படும் மோடி, தனது துணைவியார் யசோதை அவர்களின் தாலிக்கு முதலில் ஒரு பதிலைச் சொல்லியாக வேண்டுமல்லவா! இஸ்லாமியர்கள் வந்தேறிகள் என்றால், ‘பாரத ரத்னா’ விருதை நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டே பெற்ற அத்வானி, பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவிற்குக் குடிமாற்றம் செய்து கொண்டவர்தானே! ‘அமைதிப் படை’ படத்தின் அமாவாசை கதாபாத்திரம் போல, அத்வானியை ஓரங்கட்டிவிட்டு, ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு பத்தாண்டு காலம் உலகம் சுற்றும் உல்லாசப் பறவையாக வலம் வரும் உங்களுக்கு அடித்தட்டு மக்களின் பசி, பட்டினி பற்றி என்ன தெரியும்?

மணிப்பூர் கலவரம் நடந்தபோது ஒருமுறை கூட செல்லத் துணிவில்லாத நீங்கள், தமிழ்நாட்டிற்கு ஆறு, ஏழு முறை தொடர்ச்சியாக வந்தீர்களே ஏன்? அப்பொழுது வாக்குகள்தான் உங்களுக்குக் குறி என்றால், வாக்களிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

இந்தப் பத்தாண்டு காலம் நாட்டின் தனிநபர் வருமானம் எவ்வளவு உயர்ந்துள்ளது? GST சதவிகிதம் குறைந்துள்ளதே... இவற்றைப் பற்றி உங்கள் மனத்தில் துளியாவது சிந்தித்திருக்கிறீர்களா?

தமிழ்நாட்டின் ‘டாலர்’ சிட்டியான திருப்பூர் தற்போது ‘டல்’ சிட்டியாக மாறுவதற்கு உங்களின் தவறான இறக்குமதி / ஏற்றுமதி கொள்கையினால் வங்கதேசம் / சீனா போன்ற அண்டை நாடுகள் (வரி இல்லாக் கொள்கையினால்) பயனடைந்துள்ளன. அதேசமயம் GST 18% வரியினால் 48,000/- மேல் திருப்பூர் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

இந்தியாவை மற்றோர் இலங்கைத் தேசமாக மாற்றிவிடாதீர்கள் மோடி அவர்களே! ஹிட்லரின் மறு அவதாரமாக மாறிவிடாதீர்கள்!

Comment