கண்டனையோ...
கேட்டனையோ...
- Author ஜார்ஜி --
- Thursday, 23 May, 2024
தமிழ்நாட்டிற்கு இரண்டு போப்பாண்டவர்கள் தேவை
வட கிழக்கு இந்தியாவின் பழங்குடியினரிடையே முப்பது வருடங்களுக்கு அதிகமாகப் பணியாற்றிய அனுபவமுள்ள நிலேஷ் பர்மார் என்ற இயேசு சபை அருள்பணியாளர் எழுதி, மும்பை, பவுலைன் பதிப்பகம் வெளியிட்டுள்ள, ‘20 Things Catholics Wish Protestants Knew’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை அண்மையில் வாசித்துப் பயனுற்றேன். கத்தோலிக்கத் திரு அவை குறித்து பிற அவையினர் எழுப்பும் சில சங்கடமான கேள்விகளுக்கு நிலேஷ், திருவிவிலியம் மற்றும் ஆவணங்களின் பின்புலத்தில், முறையான தரவுகளுடன், நிதானமாகப் பதில் அளிக்கின்றார்.
நேரடி மொழியில், கேள்வி-பதில் வடிவத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், புனிதர்கள் வணக்கம், இறந்தவர்களுக்காகச் செபிப்பது, வழுவா வரம், சிலை வழிபாடு, குழந்தைகள் திருமுழுக்கு... என்று மொத்தம் இருபது கத்தோலிக்கத் தலைப்புகள் தொடப்பட்டுள்ளன.
பிற அவையினர் மட்டுமல்ல, ஆங்கிலம் தெரிந்த எல்லாக் கத்தோலிக்கர்களும் இதை வாசிக்க வேண்டும் என்பது என் பரிந்துரை (புத்தகம் வாங்க: paulinebctrichy@gmail.com; 9750278943).
இதில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகள், கத்தோலிக்க அருள்பணியாளரான எனக்கே புதியவை.
20 Things Catholics Wish Protestants Knew – விலிருந்து உருவப்பட்ட சில சுவாரசியத் தகவல்கள்:
• ‘கத்தோலிக்கம்’ என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் புனித அந்தியோக்கு நகர் இஞ்ஞாசியார். கி.பி. 110-ஆம் ஆண்டில் ஸ்மிர்னா நகர் மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதற்கு ‘உலகளாவிய’ என்று பொருள். பேச்சு வழக்கில் இந்தச் சொல்லுக்கு ‘All are welcome’ அதாவது ‘எல்லாரும் வரவேற்கப்படுகிறீர்கள்’ என்ற பொருளும் இருக்கிறதாம்! (இது நடைமுறையில் இருக்கிறதா? என்று நாம் கேட்டுக்கொள்ளலாம்).
• நம் கோவில்களில் வழக்கமாகக் காணப்படுவது இரண்டு சமமான கரங்களும், சிறிய தலைப்பகுதியும், நீள உடலும் கொண்ட இலத்தீன் சிலுவை. இதுபோன்று 22 வகை சிலுவைகள் உலகில் இருக்கின்றனவாம். கிரேக்கச் சிலுவை, புனித அந்தோணியார் சிலுவை, செல்டிக் சிலுவை, மால்ட்டீஸ் சிலுவை, எருசலேம் சிலுவை... தோற்றத்திலும், அளவிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட இச்சிலுவைகள் அந்தந்தப் பண்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன (‘எனக்கு வந்து சிலுவையாய் பொறந்திருக்கு’ என்று அம்மாக்கள் புலம்பும் நடமாடும் சிலுவைகள் இந்தக் கணக்கில் வாரா).
• துவக்கத்தில், குழுவாகப் பாவ அறிக்கை செய்யும் வடிவத்தில்தான் ஒப்புரவு அருளடையாளம் இருந்திருக்கிறது. 7-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் அருள்பணியாளரிடம் தனிப்பட்ட பாவ அறிக்கை செய்யும் வடிவம் பெற்றதாம் (இந்தச் சமூக ஊடகக் காலத்தில் குழு அறிக்கை செய்தால், அடுத்த நாளே அது எல்லாம் ஃபேஸ்புக்கில் இருக்கும்).
• எபிரேய மொழியில், வாரத்தில் ‘சாபாத்’ என்ற ஓய்வுநாளுக்கு மட்டும்தான் பெயர் இருக்கிறது. அது நம் சனிக்கிழமை. மற்ற எல்லா நாள்களையும் அவர்கள் எண் கொண்டுதான் அழைக்கிறார்கள். அதாவது முதல் நாள் என்றால் ஞாயிறு, இரண்டாம் நாள் என்றால் திங்கள்... இப்படி (இதில் யாருக்கும் பிடிக்காத நாள் இரண்டாம் நாள்தான்).
• கத்தோலிக்கத் திரு அவையில் ‘beer’-க்கு ஒரு பாதுகாவலர் இருக்கிறார் - புனித அகுஸ்தினார். ‘Wine’-க்குப் பாதுகாவலர் புனித உர்பான். அதிகம் மது அருந்துவதால் வரும் தலைச்சுற்றலுக்கு - புனித பிபியானா. மது அடிமைகளுக்குப் புனித மோனிக்கா (உங்கள் பாதுகாவலர் யார்?).
• கி.பி. 400-க்கு முன் திரு அவையில் எல்லா ஆயர்களும் ‘போப்’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். பிறகுதான் போப் என்ற பட்டம் உரோமையின் ஆயருக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டது (தமிழ்நாட்டில் இன்றைய தேதிக்கு இரண்டு போப்பாண்டவர்கள் தேவை).
நமக்குத் தெரிந்திராத, அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பல முக்கியச் செய்திகளைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தை ஃபாதர் நிலேஷ் பர்மார் ‘20 Things Catholics Wish They Knew’ என்று தலைப்பிட்டிருந்தால் கூட பொருத்தமாகவே இருந்திருக்கும்.
ஒரு மறைமாவட்டத்திற்கு ஆயர் அறிவிக்கப்படுவது பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. பல வருடங்களாகக் காலியாக இருந்த சில தமிழ்நாட்டு மறைமாவட்டங்கள் அண்மையில்தான் நிரப்பப்பட்டன. அப்படியிருக்க, பல வருடக் காத்திருப்புக்குப் பின், வத்திக்கானால் ஆயராக அறிவிக்கப்படும் ஒரு நபர், பதவி ஏற்புக்கு முன்னாலேயே, பதவி துறப்பு செய்தால் எப்படி இருக்கும்?
அண்மைக் காலத்தில் இது போன்ற சம்பவம் ஐந்து முறை நிகழ்ந்துள்ளது:
• Fr. மைக்கேல் J. முல்லாய்: Rapid City என்கிற அமெரிக்க மறைமாவட்டத்தின் அருள்பணியாளர். மினசோட்டா மாநிலத்தில் Duluth என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக ஜூன் 19, 2020 அன்று அறிவிக்கப்பட்டார். அந்த வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அவர் டூலுத் ஆயராகப் பொறுப்பேற்பதாகத் திட்டம். ஆனால், செப்டம்பர் 7-ஆம் தேதி அவர் பதவி விலகினார். காரணம், அவர்மேல் வைக்கப்பட்ட பாலியல் புகார்.
• Fr. ஐவன் ப்ரையன்ட்: பிரான்ஸ் நாட்டின் Rennes என்ற மறைமாவட்டத்தின் ஆயராக அக்டோபர் 7, 2022 அன்று அறிவிக்கப்பட்டார். அடுத்த மாதம் 16-ஆம் தேதி பதவி விலகினார். காரணம், உடல்நலம் சம்பந்தப்பட்டது. ‘Burnout’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அதிகப்படியான வேலைப்பளுவினால் ஏற்படும் உடல் மற்றும் மன அயற்சி. அண்மை மருத்துவப் பரிசோதனையில் அதன் தீவிரம் அதிகமாகியிருப்பது தெரியவர, புதிதாக மேலும் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டு அப்பணிக்கு நீதி செய்ய முடியாது என்று சொல்லி ஆயர் பதவியை நிராகரித்தார்.
• Fr. ஹோசே மரியா பலீனா: அர்ஜென்டினா நாட்டு மார்டெல் ப்ளாட்டா என்ற மறைமாவட்டத்திற்கு ஆயராக நவம்பர் 21, 2023 அன்று அறிவிக்கப்பட்டார். 22 நாள்கள் கழித்து டிசம்பர் 13 அன்று பதவி விலகினார். காரணம், இங்கும் உடல்நிலை சம்பந்தப்பட்டதே. விழித்திரை விலகலுக்காக (retinal detachment) ஓர் அறுவை சிகிச்சை செய்யப் போக, அதன்பின் ஏற்பட்ட பொதுவான உடல் பலவீனம், தளர்ச்சி காரணமாக ஆயர் பதவியை ஏற்க முடியாது என்று தலைவணங்கி விடைபெற்றார்.
• ஆயர் குஸ்தாவோ மனுவேல்: பலீனா பதவி விலகிய பின், ஓர் அவசர ஏற்பாடாக, சான் குவான் என்ற உயர் மறைமாவட்டத்தின் உதவி ஆயராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மனுவேலைத் தேற்றிக்கொண்டு வந்து, மார்டெல் ப்ளாட்டா மறைமாவட்டத்தின் ஆயராக டிசம்பர் 13, 2023 அன்று அறிவித்தார்கள். ஜனவரி 20, 2024 அன்று அவர் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு மூன்றே நாள்களுக்கு முன் ஜனவரி 17-ஆம் தேதி காரணம் எதுவும் குறிப்பிடாமல் அவர் பதவி விலகினார். ஆனால், அவர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகச் சான் குவான் மறைமாவட்ட நிறுவனத்தில் பணி செய்த ஒரு பெண் அளித்த புகாரின் காரணமாகத்தான் ஆயர் மனுவேல் பதவி விலகினார் என்று அர்ஜென்டினா நாட்டு ஊடகங்களில் சொல்லப்பட்டன.
• Fr. கிறிஸ்டோபர் வொயிட்ஹெட்: இங்கிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் என்கிற மறைமாவட்டத்தின் ஆயராக டிசம்பர் 15, 2023 அன்று அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 22, 2024 அன்று அவருடைய ஆயர் அருள்பொழிவு நடந்திருக்க வேண்டும். பிப்ரவரி 1-ஆம் தேதி ‘அது நடக்காது’ என்று அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்தது. காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
ஒரு புதிய, தகுதி வாய்ந்த ஆயரை நியமிப்பது வத்திக்கானுக்குச் சவால் மிகுந்த வேலையாக மாறியுள்ளது.
உலகம் முழுவதும் 5,340 ஆயர்கள் இருக்கிறார்கள் என்று ஓர் அண்மைக் கணக்கெடுப்புக் கூறுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திலும், 50 அல்லது 60 புதிய ஆயர்களை, வத்திக்கானின் ஆயர்கள் பேராயம் தேடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 4,00,000 அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள். அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேவேளையில், ஆயர் பொறுப்பை ஏற்க மறுக்கும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகமாகி வருகின்றதாம்! பத்து பேர்களைக் கேட்டால், அதில் மூன்று பேர் மறுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. நவீன காலத்தில் கடினமாகி வரும் மறைமாவட்ட நிர்வாகம், 60-வயதுகளில் இயல்பாக ஏற்படும் உடல் பிரச்சினைகள், சமூக ஊடகங்களில் உடனுக்குடன் வெளியாகி ஊதிப் பெரிதாக்கப்படும் குற்றச்சாட்டுகள், வதந்திகள் எனப் பல காரணங்களால் அருள்பணியாளர்கள் ஆயர் பொறுப்பை ஏற்கத் தயங்குகிறார்கள் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழல் இன்னும் உருவாகாமல் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
மேதகு தாமசப்பா அந்தோனிசாமி அவர்கள் சிக்மகளூர் மறைமாவட்டத்தின் ஆயராக அறிவிக்கப்பட்டபோது நான் செயின்ட் பீட்டர்ஸ் குருமடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எங்களுக்கு ‘மிசியாலஜி’ பேராசிரியர். மிக எளிமையான ஓர் அருள்பணியாளர். மெல்லிய நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடைய அறிவிப்பைக் கரம் தட்டி வரவேற்றோம்.
ஏற்புரையில் ஆயர் தாமசப்பா அந்தோனிசாமி, “நான் சிறுவனாக இருந்தபோது ஓர் அருள்பணியாளர் எங்கள் பள்ளிக்கு வந்து, ‘யார் யாரெல்லாம் சாமியாராக விரும்புகிறீர்கள்? கையைத் தூக்குங்கள்’ என்றார். நிறையப் பேர் ஒரு கையைத் தூக்கினார்கள். நான் இரண்டு கைகளையும் தூக்கினேன். ‘ஏன் தம்பி, நீ மட்டும் இரண்டு கைகளையும் தூக்கியிருக்க?’ என்று அவர் கேட்டார். நான், ‘ஏனென்றால், நான் சாமியாராக மட்டும் இல்லை, ஆயராகவும் விரும்புகிறேன்’ என்று சொன்னேன். அது இன்று நிகழ்ந்துள்ளது” என்று சொன்னார்.
விருதுவாக்கு, ‘கோட் ஆஃப் ஆர்ம்ஸ்’ என்று எல்லாம் தயார் செய்து, சவாலை ஏற்று பணிபுரிய, இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு, நிறைய தமிழ்நாட்டு அருள்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். டெல்லி அழைக்க வேண்டும்!
அமெரிக்காவின் ரோட் ஐலன்ட் மாநிலம், ப்ராவிடன்ஸ் மறைமாவட்டத்தின் ஆயர் இராபர்ட் முல்வீ ஒரு முறை உரோம் நகரில் மதர் தெரசாவைச் சந்திக்க நேர்ந்தது.
ஆயர் இராபர்ட் அன்னையிடம், “எனக்குச் சில நல்ல அறிவுரைகள் சொல்லுங்கள்” என்று கேட்டார். அதற்குத் தெரசா சிரித்துக்கொண்டு, “ஒன்றே ஒன்று தான், Don’t get in God’s way” என்று சொன்னாராம்: “கடவுளின் வழியில் குறுக்கே நிற்காதீர்கள்!”
ஆயர்கள், தேர்வு-ஆயர்கள், ஆயராகத் தயார் நிலையில் இருப்பவர்கள், பரிசீலனையில் இருப்பவர்கள், ஆசைப்படுபவர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், அருள்சகோதரிகள், பொது நிலையினர் என எல்லாருக்குமே பொருந்தக்கூடிய ஓர் அறிவுரை இது.
Let us not get in God’s way!
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்).
Comment