சனநாயகம் காப்பாற்றப்பட்டது???
2024 - பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. ஜூன் 4 -ஆம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பலருக்கும் வியப்பூட்டும் நிலையில் முடிவுகள் வந்தன. பா.ச.க.வின் ‘400 பாராளுமன்றத் தொகுதிகளுக்குமேல் பெறுவோம்’ என்ற பிம்பம் நொறுங்கிப் போனது. 240 தொகுதிகள் மட்டுமே எடுத்த பா.ச.க. ஆட்சி அமைக்கத் தேவையான அடிப்படை எண்ணிக்கையான 272 தொகுதிகள் கூட பெற முடியாமல் இந்திய மக்கள் கட்டுக்குள் வைத்துவிட்டார்கள். மோடிக்குக் கடிவாளம் போடப்பட்டது. அவருடைய ஆணவம் உடைக்கப்பட்டது. ஆட்சியமைக்க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. தெலுங்கு தேசம், ஐக்கிய சனதாதளம் கூட்டணியில் முடிவு செய்யும் நிலையில் உள்ளனர். ஆகவே, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் பா.ச.க.வின் கனவு ‘இந்து இராஷ்டிரம்’ நொறுங்கிப் போனது.
ஏழு கட்டத் தேர்தல்
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இணைந்து 234 தொகுதிகள் பெற்றுள்ளனர். கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகள் பெற்று எதிர்க்கட்சியாகத் தலைமையேற்க உள்ளது. இந்திய சனநாயகம் காப்பற்றப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பா.ச.க.வுக்குத் துணையாக இருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. மோடி பிரச்சாரம் செய்வதற்காகவே ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் மோடியின் பிரச்சாரம் மாறுபட்டது. இஸ்லாமியர் எதிர்ப்பில் தொடங்கி, தன்னைக் கடவுள் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு நெருக்கடி உண்டானது.
ஏமாற்றம் கண்ட பா.ச.க.
முகலாயர்கள், மட்டன், மங்கள் சூத்திரா (தாலி, மச்லி (மீன்), முஜ்ரா நடனம் என்றே பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் பா.ச.க. வுக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. மத வெறுப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய நவ்நீத் ராணா, மாதவி லதா போன்ற பா.ச.க. வேட்பாளர்களுக்குக் கிடைத்த தோல்வியும் முக்கியமானது. மோடியால் திறக்கப்பட்ட இராமர் கோயில் அமைந்திருக்கும் அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் பா.ச.க.வுக்குக் கிடைத்திருக்கும் தோல்வி, ஆன்மிகத்தை அரசியல் ஆயுதமாகக் கொள்வோருக்கு உணர்த்தப்பட்டிருக்கும் பாடம்.
ஃபைஸாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அவ்தேஷ் பிரசாத், பா.ச.க.வின் லல்லு சிங்கை வீழ்த்தியிருக்கிறார். ‘இந்தியா கூட்டணி வென்றால், இராமர் கோவிலுக்குப் பாபர் பூட்டுப் போடப்படும்; இராம்லல்லா சிலை மீண்டும் கொட்டகையின்கீழ் வைக்கப்படும்’ என்றெல்லாம் மோடி பேசினார். இராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணித்ததாகக் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளைச் சாடினார். ஆனால், அயோத்தி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பா.ச.க. கண்டுகொள்ளவில்லை. இராமர் கோவில் புனரமைப்புப் பணிகளைக் காரணம் காட்டி, அந்தப் பகுதியில் வசித்து வந்த பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பக்தர்களின் வருகையைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்ட சாலை அமைப்புப் பணிகள் உள்ளிட்டவற்றால் உள்ளூர் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது... போன்ற பல பிரச்சினைகளுக்குப் பா.ச.க.வினர் முகங்கொடுக்கவில்லை.
முஸ்லிம்களைக் குறிவைத்து வெளிப்படையாகவே பிரச்சாரத்தை முன்னெடுத்த பா.ச.க. கூடவே இந்தியா கூட்டணிக் கட்சிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிராகவும் செயல்திட்டத்தை வைத்திருப்பதாகப் பேசிவந்தது. அதை மிகக் கவனமாக எதிர்கொண்ட காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டிக் கொண்டதுடன், இந்துகளின் கணிசமான ஆதரவையும் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன.
கூட்டணிச் சவால்கள்
இந்தத் தேர்தல் முடிவுகள், மோடியின் தனிப்பட்ட செல்வாக்கைக் குறைத்திருப்பதாக எதிர்க் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், “பா.ச.க. மொத்தமாக வென்ற இடங்களைவிட எதிர்க்கட்சிகள் குறைவாகத்தான் வென்றிருக்கின்றன” எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மோடி. அதேவேளையில், கட்சிக்குள்ளும், வெளியிலும் மோடியின் செல்வாக்கு அதே நிலையில் நீடிக்கிறதா? என்பது முக்கியமான கேள்வி. மத்திய அரசின் எந்தத் துறை தொடர்பான முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்கிற நிலை இனியும் தொடருமா? என்பதும் கேள்விக்குறிதான்.
மோடி அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு ஆதரவளித்த பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே ஒடிசா, ஆந்திரப் பிரதேசத்தில் பா.ச.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் வீழ்த்தப்பட்டு, ஆட்சியை இழந்திருக்கின்றன. பா.ச.க.வின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு இக்கட்சிகள் செவிசாய்த்ததில்லை. தற்போது முன்பைவிட அதிகம் பலம் பெற்றிருக்கும் எதிர்க்கட்சிகள், இப்போது இதுபோன்ற கட்சிகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய சூழல் இல்லை. மாறாக, பா.ச.க.தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தையும் சார்ந்திருக்க வேண்டிய நிலை.
‘மாமனாரின் (என்.டி. ராமராவ்) முதுகில் குத்தியவர்’என முன்பு சந்திரபாபு நாயுடுவைப் பகிரங்கமாக விமர்சித்த மோடி, இந்தத் தேர்தலிலும் - தேர்தல் முடிவுக்குப் பின்னரும் அவருடன் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 2020 - பீகார் தேர்தலில் கூட்டணியில் இருந்த போதிலும், ஐக்கிய சனதா தளத்தின் வெற்றி வாய்ப்பைக் குறைக்க சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் துணையுடன் பா.ச.க. மேற்கொண்ட முயற்சி மறக்க முடியாதது. அதன் பிறகு பெருந்தன்மையாக முதல்வர் பதவி நிதிசுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், பா.ச.க. அவருக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்ததும் கவனிக்கத்தக்கது. ஆக, இனி நிதிஷ் குமாரை மிகுந்த கவனத்துடன் பா.ச.க. அணுக வேண்டியிருக்கும். “இனிமேல் அணி மாற மாட்டேன்; இனி பா.ச.க. கூட்டணியில்தான் இருப்பேன்” என்று (இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறி மீண்டும் பா.ச.க. பக்கம் வந்த பின்னர்) நிதிஷ் கூறியிருந்தாலும், அவர் நம்பகத்துக்குரியவரா? என்பது அரசியலில் தவிர்க்க முடியாத கேள்வி.
வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்சினையாக வளர்ந்திருக்கும் நிலையில், பா.ச.க. சார்பில் வாதிட்டவர்கள் ‘முத்ரா’ கடன் திட்டத்தையே முதன்மைப்படுத்திப் பேசினர். அது இளம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தவில்லை. ‘அக்னிபாத்’ திட்டத்தின் மூலம் இராணுவக் கனவில் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். நான்கே ஆண்டுகள்தான் இராணுவப் பணி; 25% பேர்தான் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பணியில் தொடர முடியும்; முன்னாள் இராணுவத்தினருக்கு இதற்கு முன் இயல்பாகக் கிடைத்து வந்த சலுகைகள் கிடையாது என்றெல்லாம் நிபந்தனைகளைக் கொண்ட இத்திட்டத்தின் எதிர்மறை அம்சங்களைக் காங்கிரஸ், சமாஜ்வாதி, இராஷ்ட்ரிய சனதா தளம் போன்ற கட்சிகள் பெரிய அளவில் இளம் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இனியும் அந்தத் திட்டத்தைப் பா.ச.க. கூட்டணி அரசு தொடருமா? என்னும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சி நடத்தவிருக்கும் பா.ச.க., முன்பைப்போல அவ்வளவு எளிதில் தனியார்மயமாக்கல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைத்தல் போன்ற நடவடிக்கைகளில் இறங்க முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவடைந்திருக்கும் எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, அருகில் உள்ள கூட்டணிக் கட்சிகளும் மனது வைத்தால்தான் இனி முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
‘மோடி சர்க்கார்’ மறைந்து, NDA சர்க்கார் (தேசிய சனநாயகக் கூட்டணி) வந்துள்ளது. ‘மோடி கேரண்டி’ என்பதற்குப் பதில், ‘கூட்டணி கேரண்டி’ என்று சொல்லும் நிலை உருவாகி உள்ளது. கூட்டணி அரசில் 24 மாநிலங்களில் இருந்து 72 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதில் கூட்டணிக் கட்சிகளிலிருந்து 11 அமைச்சர்கள் அடங்குவர். இக்கூட்டணி அரசு உருவானதால் ஜனநாயகம் காக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் அரசு இயங்க வேண்டியுள்ளது. ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தைக் காத்துவிட்டோம் என்ற மனநிறைவில் மக்கள் உள்ளனர்.
Comment