No icon

செயற்கை நுண்ணறிவும், இதயத்தின் ஞானமும்!

2 - முழுமையான மானிடத் தொடர்பாடலை நோக்கி...

வாய்ப்பும், ஆபத்தும்

இத்தகைய ஞானத்தை இயந்திரங்களிடம் தேட முடியாது. ‘செயற்கை நுண்ணறிவு’ என்ற பெயர் இப்போது ‘இயந்திரங்களினால் அறிதல்’ என்ற புதிய பெயரில் அறிவியல் இலக்கியங்களிலும், வழக்கிலும் பயன்பாட்டில் உள்ளது. ‘நுண்ணறிவு’ என்ற சொல்லின் பயன்பாடு நம்மைத் தவறாக வழிநடத்தும் வாய்ப்பு உள்ளது. தகவல்களைச் சேகரிக்கவும், அவற்றைச் சேமித்து வைக்கவும், அவற்றைத் தொடர்புபடுத்தவும் மனிதரைவிட இயந்திரங்கள் அதிக எல்லையில்லாத ஆற்றல் கொண்டிருந்தாலும், மனிதர் மட்டுமே அவற்றை அர்த்தமுள்ளதாக்க முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இத்தகைய இயந்திரங்களை மனிதர்களைப் போன்று இருக்கச் செய்தல் இன்று முக்கியப் பணியல்ல. மனிதர் முழுமையான தன்னாட்சி உரிமை கொண்டவர்கள். தம் நம்பிக்கையின் அடிப்படையில் சமூக உறவுகளிலிருந்து விடுபட்டவர்கள் என்றும், மனிதர் எல்லாரும் படைக்கப்பட்டவர்கள் என்ற நிலையை மறந்து, வாழும் மாயை நிலையிலிருந்தும் மனிதரை எழுப்பிவிட வேண்டியுள்ளது.

மனிதர் தாம் தன்னிறைவு கொண்டவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து, தம்மிடமுள்ள இந்தத் தற்காப்பற்ற நிலையை ஏதாவது ஒரு வழியில் மேற்கொள்ளவும் எப்போதும் முயன்று வந்துள்ளனர். முற்காலத்தில் கலைப் பொருள்களையும், அதற்குப் பின் ஆயுதங்களையும், பின்னர் பேசப்பட்ட வார்த்தைகளையும், அதற்குப் பின் இயந்திரம் சார்ந்த ஊடகங்களையும் இதற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறே மனித மூளைக்குச் சிந்திக்க உதவி புரியும் ஆற்றல் வாய்ந்த அதிநவீன எந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர். எனினும், இந்தக் கருவிகள் எல்லாமே ‘நான் கடவுளைப் போல் ஆக வேண்டும்; கடவுள் இல்லாமல் நான் இருக்க முடியும்’ (தொடக்க நூல் 3) என்ற தொடக்கக் காலச் சோதனைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. அதாவது, கடவுளிடமிருந்து பெறப்பட்டு, பிறரோடு பகிர்ந்து மகிழ வேண்டிய ஒன்றை, நாம் நம் சொந்த முயற்சியாலே உருவாக்கிப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகும்.

நமது இதயத்தின் விருப்பத்திற்கேற்ப நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நமக்கு ஒரு வாய்ப்பாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ அமைகின்றன. பிறருடன் தொடர்பில் இருப்பதற்கும், பிறருடன் ஒன்றித்து வாழவும் படைக்கப்பட்ட நமது உடல்கூட வன்முறைக்கு ஒரு வழியாகும் வாய்ப்புள்ளது. அவ்வாறே மானுடத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப நீட்சியும் அன்புப்பணி செய்யவும் உதவும் அல்லது விரோத ஆதிக்கத்திற்கும் வழிவகுக்கும். இவ்வாறே செயற்கை நுண்ணறிவுத் திறனும் அறியாமையைப் போக்கும் சிறந்த கருவியாகவும், பல மக்களிடையேயும், தலைமுறையினரிடையேயும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் கருவியாகவும் அமையலாம். எடுத்துக்காட்டாக, ஒரே மொழியை அறிந்திடாத பல மக்கள், முற்காலத்தில் எழுதப்பட்ட அளவிட முடியாத அறிவுக் களஞ்சியங்களைப் பெற்றுக் கொள்ளவும் செயற்கை நுண்ணறிவு துணை புரியும். ஆயினும், அதேவேளையில் அவை ‘அறிவாற்றல் மாசுபாட்டின்’ ஊற்றாகவும் அமையலாம். ஓர் உண்மையைப் பாதியாகவோ அல்லது முற்றிலும் திரித்தோ விவரிப்புகளை நம்புவதற்குரிய வழிகளில் இவை உண்மை எனவும் ஒளிபரப்பப்படும்போது இத்தீமை நிகழ்கிறது. போலியான செய்திகளைத் தவறாகப் பரப்பும் முறை நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.

இன்றும் நம்பத்தகுந்த, மிகவும் ஒத்து இருக்கக் கூடிய, ஆனால் தவறான அமைகைகளைக் கொண்டு ‘ஆழமான போலிகளை’ உருவாக்குதல் நிகழ்ந்து வருகின்றன. நானும் இச்செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு குரல் செய்திகளில் ஒரு மனிதரின் குரலைப் பயன்படுத்தி அவர் சொல்லாத ஒன்றை அவர் சொன்னதாகச் செய்தி பரப்புதலும் நடைபெற்று வருகிறது. பாவனை தொழில்நுட்பம் சில துறைகளில் சிறிதளவு பயன்படலாம். எனினும், அதுவே உண்மைக்குப் புறம்பானதாகவும், பிறரிடம் நமக்குள்ள உறவுகளை முறிப்பதாகவும் அமையும்போது அது மிகவும் தவறானதாகவும், விபரீத விளைவுகளை உருவாக்குவதாகவும் அமைகிறது.

சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவின் முதல் அலை பாய்ந்தபோது அதன் இருமுகப் போக்குத் தன்மையை நாம் அனுபவித்தோம். அதில் சில சாத்தியக் கூறுகளையும் கண்டோம். அதே வேளையில், அதன் நோயுற்ற தன்மையையும் கண்டுணர்ந்தோம். செயற்கை நுண்ணறிவின் இரண்டாம் அலையில் அது மிகப்பெரும் படைப்பாற்றல் கொண்டெழுந்தது. இது ஓர் ஏற்றமிகு மாற்றமாகக் கருதப்பட்டது.

இவ்வேளையில், ஆற்றல்மிகு கருவிகள் தவறான கரங்களால் உபயோகிக்கப்பட்டால் குழப்பமிகு சூழ்நிலைகள் உருவாகும். நாம் அனைவரும் இவற்றை அறிந்துணரவும், பாராட்டவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதை உணர்வது மிக அவசியம்.

மனித அறிவின் மற்ற செயல்பாடுகள், திறமைகள், ஆற்றல்கள் போலவே அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் நடுநிலையானவையல்ல. எனவே, இவற்றின் பயன்பாட்டைக் குறித்து மிகவும் வருமுன் காக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியுள்ளது.

அறநெறி வழிமுறைகளுக்கு உட்பட்டுச் செயற்கை நுண்ணறிவு செயல்பட்டால் தீமையான பாகுபாடுகளை உருவாக்கும் சமூக அநீதிகளைத் தோற்றுவிக்கும், தவறாகப் பயன்படுத்தப்படும் செயல்பாடுகளை முன்னரே தவிர்க்கலாம். இதனால், செயற்கை நுண்ணறிவின் விளைவுகளாகிய பன்மைத்தன்மைக் குறைதல், பொது எண்ணத்தைத் துருவப்படுத்துதல், சிறு குழுச் சிந்தனைகளை உருவாக்குதல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

பன்னாட்டு சமூகத்திற்கு நான் அறைகூவல் விடுக்கின்றேன். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது, அதை மேம்படுத்துவது குறித்து எல்லாரையும் கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு வடிவங்களில் பன்னாட்டு ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் உருவாக்கப்பட வேண்டும். அதேவேளையில், மனிதர்களின் சூழ்நிலைகளில் ஒழுங்குமுறைகளை ஏற்படுத்துவது மட்டுமே போதாது.                                

(தொடரும்)

Comment