03 – செயற்கை நுண்ணறிவும், இதயத்தின் ஞானமும்
முழுமையான மானிடத் தொடர்பாடலை நோக்கி...
மானுடம் வளர்த்தல்
நாம் எல்லாரும் மனித மாண்பில் வளரவும், இணைந்த மானுடமாக வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் பல இனம், பல மொழி, பல கலாச்சாரங்களோடு பன்முகத்தன்மை கொண்டு பின்னிப் பிணைந்த சமுதாயமாக ஓர் ஏற்றமிகு மாற்றம் பெறுவதே நமக்கு முன்னால் நிற்கும் பெரும் சவாலாகும். எனவே, தொடர்பாடலுக்கும், அறிவைப் பெறுதலுக்குமாகிய இப்புதிய கருவிகளை மேம்படுத்துதல் மற்றும் அவற்றைப் பயன்படுத்துதல் பற்றிய அறிவுப்பூர்வமான ஆய்வில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம்.
இப்புதிய கருவிகள் நன்மைக்கான மிகப்பெரும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் அதே வேளையில், எல்லாவற்றையும் சுருக்கக் கணக்கீடுகளாக மாற்றக்கூடிய சவாலைக் கொண்டுள்ளதால், தனி மனிதரை வெறும் தகவல்களாகவும், மனிதரின் சிந்திக்கும் ஆற்றலைத் தொழில்நுட்பச் செயல்முறையாகவும், மனித அனுபவங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளாகவும், பொது நன்மைத்தனத்தை ஒருசிலரின் இலாபமாகவும், தனி மனிதரின் தனித்தன்மை, வாழ்வு, வரலாறு ஆகியவற்றை மறுப்பதாகவும், அவற்றைக் குறைக்கும் பேராபத்தும் இங்கு உள்ளன. உண்மையின் உறுதியான ஆதாரம் பரபரப்பான புள்ளியியல் தகவல்களுக்குள் மறைந்து போகும் நிலையும் உண்டாகும்.
எண்ணிமப் புரட்சி மிகச்சிறந்த தன்னுரிமையைத் தோற்றுவிக்க இயலும் எனினும், இது நம்மையும், எல்லாவற்றையும் எதிரொலி அறைகளுக்குள் சிறைப்படுத்துவதாயின் மேற்கூறியது நடைபெறாது. இச்சூழலில், தகவலின் பன்மைத்தன்மை அதிகரிப்பதற்குப் பதிலாகக் குழப்பம் என்னும் சேற்றுக்குள் அலைந்து திரியும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். வியாபாரச் சந்தைகளும், அதிகார வர்க்கத்தினரும் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவர். சிறுகுழுச் சிந்தனையை உருவாக்கவும், சரிபார்க்கப்படாத தகவல்களைச் சேகரிக்கவும், அவற்றைச் சரிபார்க்காமல் கோர்வையாக்க அனுமதிப்பதும் நமது கடமைப் புறக்கணிப்பு ஆகும். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதார்த்த மெய்மையை அதிகப்படியான தகவல்கள் என்று தொழில் நுட்பத்தால் பிரதிநிதித்துவப்படுத்துதல், எந்திரங்களின் தொழில்நுட்பச் செயல்பாடுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், இதனால் பொருள்களின் உண்மைத்தன்மை மிகவும் இழக்கப்படுகிறது. மனிதரிடையேயான தொடர்பாடல் தடை செய்யப்படுகிறது. இது மனித இனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
உண்மையில் பிறரோடு வாழும் முறையில் உறவு கொள்வதிலிருந்து தகவல்களைப் பிரிக்க முடியாது. ஒருவரின் உறவுகள் அவரது உடல் மற்றும் சுற்றிலும் உள்ள எதார்த்த உலகையும் உள்ளடக்கி உள்ளது. இந்த உறவுகள் வெறும் தகவல்களால் மட்டும் ஆனவையல்ல; அதில் மனிதனின் அனுபவங்கள், முகமுகமான பார்வைகள், முக பாவனைகள், இரக்கம், பகிர்தல் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியுள்ளன.
இங்கே போர்களைப் பற்றியச் செய்தி அறிக்கைகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். அதேவேளையில், தவறான தகவல்களால் நடைபெற்ற இணைப் போர்கள் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். போர் முனையிலிருந்து போர்கள் பற்றியத் தகவல்களைச் சேகரித்து, அவர்கள் கண்டதை நாம் காணும்படியும், தம் கடமையைச் செய்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதையும், கொல்லப்பட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன். ஏனெனில், போர்க்களத்தில் துன்புற்றக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் இவர்களைப் பற்றிய நேரடித் தகவல்கள்தான் நாம் போரின் அபத்தத்தை உணரச் செய்கின்றன.
நிகழ்விடங்களுக்குச் சென்று செயல்படும் இதழியல் செயல்பாடுகளை ஊக்குவித்து அவற்றுக்குத் தடை செய்யாதபோது செயற்கை நுண்ணறிவு தொடர்பாடல் துறைக்குப் பெரிதும் உதவலாம்; அதேவேளையில், தொடர்பாடல் தொழில் முறைக்கு மதிப்பளித்து, ஒவ்வொரு தொடர்பாடல் துறையின் செயல்பாட்டையும், ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்படத் தூண்டியும், எல்லாரும் தொடர்பாடலில் தனக்குரியப் பங்கைச் சிறப்புடன் ஆற்றத் தூண்டுமாயின் செயற்கை நுண்ணறிவு பயனுள்ளதாகவே இருக்கும்.
(தொடரும்)
Comment