No icon

திரு அவையின் புதிய பணி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத தேர்தல். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்போன்ற ஒற்றைவாதக் கூச்சல்கள் ஒருபுறம் ஓங்கி ஒலிக்க, மறுபுறமோ தேர்தல் கமிஷன் உள்ளிட்ட சனநாயகத் தூண்கள் அனைத்தும் ஆளும் கட்சியின் கைப் பாவையாக மாறி நிற்க, தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி என்கிற வழக்கமான நிலையைத் தாண்டி, இந்திய சனநாயகத்தைக் காக்க வேண்டும் என்கிற அக்கறையில் குடிமைச் சமூகங்கள் (civil societies) பல இந்தத் தேர்தலில் நேரடியாக இறங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

குறிப்பாக, பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையிலானபாரத் ஜோடோ அபியான்’ (இந்திய ஒற்றுமை இயக்கம்) நாடு தழுவிய அளவிலும், நாட்டைக் காப்போம், பொதுமக்கள் மேடை, மக்கள் இயக்கங்கள் போன்ற அமைப்புகள் தமிழ்நாடு அளவிலும் பல குடிமைச் சமூகங்களை ஒன்றிணைத்துத் தேர்தல் களத்தில் இறங்கி சனநாயகத்தைக் காக்க நேரடியாகப் பிரச்சாரம் செய்தன. அதற்கான பலன்களைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருக்கிறதுஇப்படித் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்திய குடிமைச் சமூகங்களின் பங்களிப்பு இனி எப்படி அமைய வேண்டும் என்றும் தொடர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

பொதுவாக, ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வாக்கு அளிப்பது மட் டுமே தமது சனநாயகக் கடமையாகக் கருதி, வாக்களித்த பின் கையறு நிலையில் இருக்கும் மக்கள் ஒருபுறமும், வாக்கு வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த மக்களைப் பொருட்டாகக் கருதாமல், அதற்கு மாறாகக் கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கைப்பாவையாக அவர்களின் ஆதாயத்திற்காக ஆளாய்ப் பறக்கும் ஆளும் கட்சிகளை மறுபுறம் பார்ப்பதுமே நமது சனநாயகமாக இருக்கிறது. அதாவது, வாக்கு வாங்கும்வரை மக்கள் நலன் பேசும் கட்சிகளைஆட்சிக்கு வந்த பின் அறமோ, சனநாயகமோ சிறிதும் இன்றி சில, பல வித்தைகளைக் கையாண்டு, அக்கட்சிகளைத் தங்கள் சுயநலனுக்காகச் செயல்பட வைக்க கார்ப்பரேட் முதலாளிகளால் முடிகிறது. அதைப்போலவே மக்கள் நலன் பேசி ஆட்சியைப் பிடித்த அரசியல் கட்சிகளை அறவழியில் சனநாயக ரீதியில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மக்களுக்காகத் தொடர்ந்து செயல்பட வைக்க அந்தந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட மக்கள் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட குடிமைச் சமூக அமைப்புகள் அதேபோன்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் பண பலத்தால் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தர முடிகிறது என்றால், குடிமைச் சமூக அமைப்புகளிடம் இருக்கும் பணபலத்தை விட பெரிய பலமான மக்கள் பலத்தால் இதை ஏன் செய்ய முடியாது? இன்றைய சூழலில் குறிப்பாக, குடிமைச் சமூக அமைப்புகள் தங்கள் பலத்தை அறியாததாலும், தங்களுக்குள் ஒருவித ஒன்றிணைந்த செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதாலும் ஒருசில கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக ஒட்டுமொத்த நாடும் காவு கொடுக்கப்பட்டு வருகிறது. சனநாயகத்திற்கே ஆபத்தான நிலை ஏற்பட, இத்தேர்தலில் குடிமைச் சமூக அமைப்புகளின் குறுக்கீடு கவனிக்கத்தக்க அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அரசியல் மாற்றங்களின் பலன்கள் தொடர்ந்து மக்களுக்குக் கிடைக்க இந்த அமைப்புகளின் தொடர் செயல்பாடுகள் அவசியமாகிறது.

ஆகவே, நாடளவில் அல்லது மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட குடிமைச் சமூக அமைப்புகளும், மாவட்ட அளவில் அல்லது தொகுதி அடிப்படையில் ஒன்றிணைந்த குடிமைச் சமூக அமைப்புகளும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும். நாட்டில் உள்ள பல குடிமைச்  சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு சமூகமே கத்தோலிக்கத் திரு அவை. ஆகவே, இன்றைய இந்திய திருநாட்டின் சரியான வளர்ச்சிக்காக - மற்றக் குடிமைச் சமூகங்களுக்கு வழிகாட்டும் விதமாகத் திரு அவை யாவரையும் ஒன்றிணைத்து, மானுட விழுமியங்கள் நிலைநிறுத்தப்பட முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் அடிப்படைச் சட்டங்களான சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சார்பின்மை, சுதந்திரம் ஆகியவற்றைச் சனநாயக நெறியில் செயலாக்க இதுபோன்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திட வேண்டும்.

ஆகவே,

நடந்து முடிந்த தேர்தலில் மீறப்பட்ட சனநாயக நெறிமுறைகளை மீண்டும் நிலைநாட்ட சட்ட வழியிலும், சனநாயக வழியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தும் தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஒன்றிணைந்த குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்புகள் இவற்றில் அதிகக் கவனம் செலுத்தி ஆதரவு சக்திகளை, அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து, எதார்த்தத்தை வெளிக்கொணர்ந்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

தேர்தல் காலத்தில் வெற்றிபெற்ற அரசியல் கட்சிகள்  கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் (Election manifesto) செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு என்பது, தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது, தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

குடிமைச் சமூக அமைப்புகள் அந்தந்த பகுதிகளில் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார  மேம்பாட்டுக்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அதற்கான தொடர் உரையாடல்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்தி, தங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, மக்கள் பிரதிநிதிகள் பார்வைக்குக் கொண்டு சென்று அவற்றைத் தீர்ப்பது போன்ற வினையூக்கிச் (catalyst) செயல்பாடுகளில் குடிமைச் சமூக அமைப்புகள் ஒரு பாலமாக நின்றிட வேண்டும்.

இறுதியாக, இத்தகைய ஆக்கப்பூர்வமான அடுத்தடுத்த தொடர் செயல்பாடுகள் மட்டுமே சனநாயகத்தைப் பாதுகாக்கவும், மக்களாட்சி மலர்ந்து தொடர்ந்து மிளிரவும் வழிவகுக்கும்.

இத்தகைய செயல்பாடுகளில் திரு அவை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சனநாயக விடியலுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதே இன்றைய காலத்திற்கேற்ற மக்கள் பணியாக அமையும் என்பதே எமது நம்பிக்கை.

Comment