No icon

செயற்கை நுண்ணறிவு

இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை

இன்றைய இந்திய சூழலில் திரு அவையின் பணிகள்என்ற பொருளில் 2024 -ஆம் ஆண்டு ஜனவரி 30 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையின் பொதுக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்கள் மற்றும் சவால்கள் பற்றிப் பேசப்பட்டன. எண்ணிமத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கடவுளின் கொடை என்று திரு அவை ஏற்றுக்கொள்கிறது. ‘எண்ணிம உலகில் குடிமக்களாக மாறுவோம்என்று திருத்தந்தை தனது 2024-ஆம் ஆண்டு உலகத் தொடர்பு நாளுக்கான செய்தியில் அழைப்பு விடுக்கிறார்.

செயற்கை  நுண்ணறிவு உடல் நலம் பேணல், விவசாயம், கல்வி, பொறியியல், பொழுதுபோக்கு, வணிகம், பொருளாதாரம் மற்றும் ஆய்வுத்துறைகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தவறாகவும் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. தவறானவர்களின் கைகள் இவற்றைப் பயன்படுத்தும்போது தொழில்நுட்பங்கள் வெறுப்பைப் பரப்பவும், வன்முறை, நியாயமற்ற முறையில் கையாளுதல், மதவெறி போன்றவற்றிற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படலாம்.

எண்ணிமத் தளங்களில் மனிதத் தகவல்களைச் சேகரித்தல் மிகவும் ஆபத்தானது. குடும்பங்கள் மற்றும் தனிமனிதரின் தனியுரிமையை மதிக்காமல் தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே, செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் இதனை வளர்த்தல், பயன்படுத்தப்படுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எல்லாப் பங்குதாரர்களையும் அரசு முறைப்படுத்தி, இதனால் நல்ல செயல்பாடுகளைப் பெருக்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுதல் தவிர்க்கப்படவும் இந்திய அரசை இந்திய ஆயர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளோடு வாழும் மனிதர்கள் வெறும் மீத்தரவு (Metadata) என்ற நிலைக்கும், படிமுறைத் தீர்வுகளால் (Algorithms) வரையறுக்கப்படும் நிலைக்கும் உட்படுத்தப்படக்கூடாது என்று ஆயர் பேரவை வலியுறுத்துகிறது. இதற்கான ஆயர் பேரவையின் பரிந்துரைகள்:

எண்ணிம மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்தவும், அவற்றின் தவறான பயன்பாட்டிற்கும், தவறாகக் கையாளப்படுதலைத் தவிர்க்கவும் குழந்தைகள், இளையோர், குடும்பங்கள், துறவியர், அருள்பணியாளர் உள்ளிட்ட அனைத்துத் திரு அவை உறுப்பினருக்கும், அந்தந்த மறைமாவட்டச் சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள் நன்கு திட்டமிடப்பட்ட பயிற்சிகளை வழங்க வேண்டும். எண்ணிம உலகில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ செயற்கை நுண்ணறிவு அறநெறிமுறைகளுக்கேற்பப் பயன்படுத்தப்படுவதை வலியுறுத்துகிறோம்.

நமது மறைமாவட்ட மற்றும் மண்டல சமூகத் தொடர்பு பணிக்குழுக்களும், இளையோர் பணிக்குழுக்களும் இணைந்து பயனுள்ள நம்பிக்கை உருவாக்கத்திற்கும், நற்செய்தியைப் படைப்பாற்றலோடு அறிவிக்கவும் நமக்குக் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவில் திறமை பெற்ற இளையோர் இதற்கு உதவும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

செயற்கை நுண்ணறிவின் புரட்சியால் விளையும் நற்பயன்களையும், வாய்ப்புகளையும் நமது இளையோர் நன்கு பயன்படுத்திக்கொள்ள மறை மாவட்டங்கள், துறவற சபைகள் நமது இளையோருக்கு நன்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

முழுமனித வளர்ச்சி என்பது நீதி, சமத்துவம், உண்மை, தன்னுரிமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும், பொது நன்மைக்காக ஒருங்கிணைந்து பாடுபடுவதே இதற்கான வழி என்பதையும் இந்தியக் கத்தோலிக்கத் திரு அவை உறுதியாக வலியுறுத்துகிறது. இந்த இலக்கை அடைய செயற்கை நுண்ணறிவு ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டு, மனிதர் ஒவ்வொருவரின் மாண்பும், புனிதத்தன்மையும், அவர்களது பன்மையில் ஒருமைத்தன்மையும் காக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது.

Comment