சாட்டையைச் சுழற்றுவாரா தமிழ்நாடு முதல்வர்?
- Author முடியப்பன் --
- Thursday, 11 Jul, 2024
“ஓர் அரசியல் கட்சி, ஆளுங்கட்சியாக மாறும் போது, அக்கட்சியின் செல்வாக்கு பாதியாகக் குறைகிறது” என்றார் தி.முக.வின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணா. அது இன்றைய ஆளும் தி.மு.க. அரசிற்கு அப்படியே பொருந்திப் போவது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த மே, ஜூன் மாதங்களில் குடிமைப் பொருள் வழங்கலில் ஏற்பட்ட குளறுபடி முதல்படி. அத்தியாவசியப் பொருள்களான பருப்பு, பாமாயில் முழுவதுமாக வழங்கபடாத நிலை ஏற்பட்டது. மே மாதம் வழங்கப்படாத பொருள் ஜூன் மாதம் வழங்கப்படும் என்று அறிவிப்புத் தரப்பட்டது. பின் ஜூன் மாதமும் இதே நிலை தொடர, ஜூலை மாதத்திற்கு அறிவிப்பும், பொருள் வழங்கலும் தள்ளிப் போயுள்ளது.
உணவுத்துறை அமைச்சர் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கலில் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது; பருப்பு விலையில் விலைக்குறைப்பு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட கால தாமதம் என பழியை அதிகாரிகள்மீது தூக்கிப் போட்டார்.
2024, மே மாதம் ஒன்றிய மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் வரும் என்பதை அமைச்சர் வசதியாக மறந்து விட்டாரா? மக்களுக்கு உணவுப் பொருள் வழங்கும் தன் தலையாயப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாரா?
1989-1991-களில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசிலும் இதே நிலை வந்தது. கலைஞரின் வலதுகரமாக இருந்த ஆற்காடு வீராசாமி துறை மாற்றப்பட்டார். 2006-2011 தி.மு.க. ஆட்சியில் ‘பவர்கட் அமைச்சர்’ என்று கேலி செய்யப்பட்ட ஆற்காடு வீரா சாமியால் ஆட்சியே பறிபோனது என்பது கடந்தகால வரலாறு.
‘ஆவின் பால் கொள்முதல், ஆவின் முறைகேடு குற்றச்சாட்டுகளில் பால்வளத்துறை அமைச்சர் மாற்றப்பட்டது போல, உணவுத்துறை அமைச்சர் ஏன் மாற்றப்படவில்லை?’ என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
தேர்தலில் 100 சதவிகித வெற்றியால் மந்திரிசபை மாற்றம் என்பது பேசப்பட்டு, அது இல்லாமல் பழைய மந்திரிகளே தொடரலாம். அதிகாரிகள் மீது பழிபோடும் அமைச்சர்கள் தேவையில்லை. முதல்வர் அமைச்சர்களுக்குப் போடும் மதிப்பெண், தேர்ச்சி என்பது எங்கே போனது? அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள்தான் வாக்குக் கேட்டுத் தெருவுக்கு வர வேண்டும்.
நாம் பல கட்டுரைகளில் வலியுறுத்திச் சொல்வது போல, அரசு இயந்திரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அதிகமாகி விட்டது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல், அடிமட்ட ஊழியர்கள் வரை அரசுக்குக் கெட்டப் பெயரை வாங்கித் தர அனைத்து உள்ளடி வேலைகளையும் செய்கிறார்கள். தற்போது பத்து ஆண்டுகளாகப் பதிவாகும் தபால் வாக்குகளில் இருந்தே இதன் அடிப்படையை உணரலாம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அதற்குத் துணை போன வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மக்களுடன் தொடர்பில் உள்ள துறைகள், அதன் அதிகாரிகள்... யாரும் எதற்கும் பொறுப்பு ஏற்பதில்லை. அரசுத் துறைகளின் கவனக்குறைவால் ஏற்படும் விளைவுகள் விபரீதமாகும்போது மட்டும் பேசி மறப்பது அதிகாரிகளுக்கு வசதியாகி விடுகிறது. ஆனால், அது ஆட்சியாளர்களுக்குப் பெரும் சரிவை மெல்ல மெல்ல உருவாக்கி, தேர்தல் தோல்விக்கு வித்திடுகிறது.
முதல்வரின் துறையில் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரை பணி இறுதி நாளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, திரும்பப் பெற்றது ஓர் உதாரணம். தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவில் முதல்வரின் நம்பிக்கைமிகு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே அரசின் கொள்கைக்கு மாறான, மத்திய அரசின் கல்விக் கொள்கை போல் உருவாக்க அழுத்தம் கொடுத்தார் என முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் பொது வெளியில் குற்றச்சாட்டை முன்னெடுத்தார்.
எனக்குத் தெரிந்து ஒரு மாவட்ட அரசு அதிகாரி பொறுப்பேற்று ஆறு மாதமாகியும் அத்தியாவசிய நடைமுறைக் கோப்புகளைத் தவிர எதிலும் கையொப்பம் இடுவதில்லை. பகல் முழுவதும் ஆய்வு எனச் சென்றுவிட்டு, மாலை வேளைகளில் அலுவலகப் பணியாளர்கள் வீடு சென்ற பின் அலுவலகத்திற்கு வந்து கேட்பார்: ‘நான் கோப்புகளில் கையெழுத்திட கோப்பு விவரம் சொல்ல யாரும் இல்லையே.’ இவரது மேலதிகாரி ஓய்வுபெற அந்தப் பொறுப்பும் கூடுதல் பொறுப்பாக இவரிடம் உள்ளது. இவரைக் கோப்புகளில் கையெழுத்திட எந்த அழுத்தங்கள் வந்தாலும், ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடுவார். இதை நான் சொல்லவில்லை. இவருக்குக் கீழ் அடுத்த நிலை அலுவலர் நம்மிடம் குறைபட்டுச் சொல்லியவைதான் இவை. இது குறித்து அப்பகுதி சட்ட சபை உறுப்பினரிடம் பேசினால், அவர் ‘அமைச்சரிடம் பேசுங்கள்’ என மடை மாற்றி விடுவார்.
அடிக்கடி பொதுவிழாக்களில் அந்த அதிகாரியைச் சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர் கடுமையாகக் கண்டிக்காவிடினும், கனிவாகக் கூட வேலை செய்ய அறிவுறுத்தவில்லை. இவ்வாறாக தி.மு.க. அரசின் அரசு இயந்திரம் தாறுமாறாக, தறிக்கெட்டுப் பின்னோக்கி சுழல்கிறது.
12 மணி நேர வேலைச் சட்டத்தால் தமிழ்நாடு அரசு முதன் முதலில் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியைச் சந்தித்தது. மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு என மக்களின் முணுமுணுப்பை மாண்புமிகு அமைச்சர்கள் உணர மறுக்கிறார்கள். முழு பணிகளையும் முடிக்காமல், நகரப் பேருந்துகளை இணைப்பு வழி செய்யாமல், எந்தெந்தப் பேருந்துகள், அந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் என முறைப்படுத்தாமல், பண்டிகை காலத்தில் மக்களை அலைக்கழித்த அமைச்சர், இன்றும் பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகமாக டாஸ்மாக்கில் பெறுவதைக் கட்டுப்படுத்த முடியாத அமைச்சர், உரிய காலத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டிற்குக் காப்பீடு செய்யாத அமைச்சர் என ஒவ்வொரு துறை அமைச்சரும் அரசைப் பலவீனப்படுத்துகிறார்கள்.
சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலம்போல் தனிநபர் துதி பாடலை அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை மிகைப்படுத்தி இருக்கிறார்கள். 2024 மக்களவை பதவி ஏற்பின்போது, தமிழ்நாடு தி.மு.க. உறுப்பினர்கள் போட்ட முழக்கங்களைப் பார்த்து நாடு முழுவதும் உள்ள மக்கள் நகைக்கிறார்கள். சட்டசபை நேரடி ஒளிபரப்பில் மாண்புமிகு உறுப்பினர்கள் எந்தத் துறைக்குக் கேள்வி கேட்பது எனத் தெரியாமல், துறை மாற்றி கேள்வி கேட்டது வியப்பானது. பல நேரங்களில், சபாநாயகரும், துறை அமைச்சர்கள் திருத்தியதும் நடந்தேறியது.
சபாநாயகரைக் கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்து, ‘மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்ற அமைச்சர் ஓர் அதிசயம். அவை முன்னவரும், மூத்த அமைச்சரும் ஜக்கி வாசுதேவன் வெள்ளிங்கிரி மலை ஆக்கிரமிப்புக் குறித்த துறை அமைச்சரின் பதிலுக்கு வம்பு வளர்த்தது. எதிர்க்கட்சி அ.தி.மு.க. இல்லாத நிலைக்கு மாற்றாக அமைந்தது.
மாண்புமிகு முதல்வர் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பவர். அதிரடி நடவடிக்கைகள் எடுக்காமல் எதிலும் நல்லது, கெட்டது பார்ப்பவர். அவரது நற்குணமே அமைச்சர்கள், அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணராமல் இருப்பதற்குக் காரணமாக மாறி இருக்கிறது. முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை இழப்பதற்கு, இது தடமாக மாறிவிடும். மாண்புமிகு முதல்வர் சாட்டையைச் சுழற்ற வேண்டும்; அதிரடி காட்ட வேண்டும்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வது என்றால், ‘நீங்கள் நடத்துவது ......... மடம் அல்ல; நீங்கள் நடத்துவது தி.மு.க. கட்சி. நீங்கள் நடத்துவது தி.மு.க. ஆட்சி.’
மக்கள் பணி செய்யாத அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருந்த மறுப்பவர்களை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். இல்லையெனில் அது உங்களுக்கு 2026-இல் நடந்துவிடும்.
Comment