போதை: கள நிலவரமும் இறையியல் தேடலும்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மாபெரும் அதிர்வலைகளை இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 66 உயிரிழப்புகளோடு பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. உடல் உறுப்புகள் பாதிப்படைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி, ‘காலத்தை எப்படி ஓட்டப் போகிறோம்?’ என்ற வேதனையோடும், அவநம்பிக்கையோடும் பலர் தவித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தை ஒழித்து, அரசே மது விற்பனையை முறைப்படுத்த முயன்றாலும் கள்ளச்சாராய ஒழிப்பு பகற்கனவாக உள்ளது. என்றோ ஒழிக்கப்பட வேண்டிய கள்ளச்சாராய விற்பனையானது அதிகாரிகளின் அலட்சியம், பணபலம், ஆள்பலம், நிர்வாகச் சீர்கேடு மற்றும் கையூட்டு போன்றவற்றால் தமிழ்நாட்டில் குடிமகன்களும், குடிமகள்களும் பெருகி வருகின்றனர்.
இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு சமூகத்தில் புரையோடி பல குடும்பங்கள் சிதைவைச் சந்தித்து வருகின்றன. ‘கூல் லிப்’ போன்ற போதையேற்றிகள் பள்ளிக்கூட மாணவர்களையும் விட்டு வைக்கவில்லை. இளையோரும் போதையேற்றி, பாதை மாறி கனவைத் தொலைத்து வருகின்றனர். இளம் வயதிலேயே ‘மொடாக்குடி’ கணவர்களை இழந்த கைம்பெண்களின் எதிர்கால வாழ்வு சூறையாடப்படுகிறது. இந்தச் சூழலில் சிக்கித் தவிக்கும் இளையத் தலைமுறையை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம்?
2022 -ஆம் ஆண்டு உலகச் சுகாதார அமைப்பு (World Health Organization) மது அருந்தும் பழக்கத்தினால் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஆறு பேர் இறக்கின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள்களை நுகரும் இளையோரின் எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 23 -ஆம் தேதி உலகக் கைம்பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட நாளில், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களின் நலச்சங்கம் மதுரையில் 16 மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தின்படி, கைம்பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிக்க மிக முக்கியக் காரணமாக, குடியினால் சீரழிந்துபோய் கணவர்கள் இறப்பதே என்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்குக் கிட்டத்தட்ட 30 பேர் குடிப்பழக்கத்தினால் இறக்கின்றனர் எனச் சில புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த 2019-20 ஆண்டில் 33,133.24 கோடி வருவாய் ஈட்டிய டாஸ்மாக் நிறுவனமானது, மார்ச் 31, 2024 நிதியாண்டு முடிவில் 45,855.67 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (Times of India) பதிவு செய்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு போதைப்பொருள் பயன்பாடு பெருமளவில் வளர்ந்து, மனித வாழ்வு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசு விற்பனை செய்யும் மது வகைகளின் விலை அதிகமாக இருப்பதால்தான் மக்கள் கள்ளச்சாராயத்தைக் குடிக்கிறார்கள் என்ற பரவலான கருத்தின் அடிப்படையில் குறைந்த விலையில் 100 மில்லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்யவும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
போதைப் பொருள் நுகர்வைப் பல சமய நூல்கள் வன்மையாகக் கண்டிக்கின்றன. “மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் சாத்தான் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டாக்கி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடுகிறான்” என இசுலாம் எடுத்துரைக்கிறது.
திருவிவிலியமும் போதை நுகர்வை ஒரு பாவச் செயல் என்றே குறிப்பிடுகிறது. திராட்சை இரசத்தைப் போதையூட்டும் நோக்கத்தில் மிதமிஞ்சிப் பயன்படுத்துவது தவறு என்பதைத் திருவிவிலியப் பகுதிகள் எடுத்துரைக்கின்றன.
இயேசு ‘விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்’ என்ற உவமையைச் சொன்னபோது, மிதமிஞ்சிக் குடித்த பணியாள் பற்றிச் சொல்லும்போது, “ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும், மயக்கமுற உண்ணவும், குடிக்கவும் தொடங்கினான் எனில், அப்பணியாளர் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து, நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்” என்று எச்சரிக்கிறார் (லூக்கா 12: 45-46). இந்தப் பகுதி போதை நுகர்வுக்கு எதிரான இயேசுவின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அவ்வாறே, “திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும்” (எபேசியர் 5:18) என்று பவுலும் எச்சரிக்கிறார்.
கானாவூர் திருமண நிகழ்வில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிப் புதுமை செய்த இயேசு, குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதாகச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.
ஒவ்வொரு புதுமையும் நிகழ்த்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உறவினர்கள், பணக்காரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் திராட்சை இரசம் அருந்திய பின்னரே ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களுக்குத் திராட்சை இரசம் வழங்கப்படும் பழக்கம் இருந்தது.
வளமையின் அடையாளமாகவும், கடவுளின் ஆசீராகவும் கொண்டாடப்பட்ட திராட்சை இரசம் (ஆமோஸ் 9: 14) ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருந்த அன்றைய சூழலில், ஒதுக்கப்பட்ட மானுடத்திற்கு திராட்சை இரசம் வழங்கி புதுமை செய்த இயேசுவின் செயல் பாராட்டப்பட வேண்டும். ஆனால், போதைப் பண்பாடு புரையோடியுள்ள இன்றைய சூழலில், இயேசு வந்தால் நிச்சயம் இந்தப் புதுமையைச் செய்யமாட்டார் என்பதே என் கருத்து.
இன்றைய சூழலில் குடும்பங்களின் அமைதியான வாழ்வைச் சீர்குலைக்கும் போதை நுகர்வுப் பண்பாட்டை வேரறுத்து மனித மாண்போடும், மதிப்போடும் வாழும் தலைமுறையை உருவாக்க நாம் என்ன செய்யலாம்?
• ஆல்கஹாலிக் அனானிமஸ் (Alcoholic Anonymous) என்ற இயக்கம் உலக அளவில் 87,000 குழுக்களாகச் செயல்படுகின்றது. இந்தக் குழுக்கள் ‘குடி’ என்னும் நோயினால் பாதை மாறியோரை நல் வழிப்படுத்தி, ‘மாற்றம் சாத்தியமே, மனித மாண்பை மீட்டெடுக்க இயலும்!’ என்ற நம்பிக்கையை விதைத்து வருகின்றன. போதையில் சிக்கியோரை மீட்டெடுத்து இந்தக் குழுக்களில் இணைப்பதும், அவர்களைத் தொடர்ந்து 90 நாள்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க வைப்பதன் வழியாகப் புதிய வாழ்வை அவர்களுக்கு நம்மால் தர இயலும்.
• சமயத் திருவிழாக்கள், பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இறப்பு வீடு போன்ற எல்லா இடங்களிலும் ஊடுருவியுள்ள இந்தப் போதைப் பண்பாட்டை வேரறுத்திட உறுதி கொள்வோம்.
• தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்காக ஒருமித்துக் குரல் கொடுத்து, போராட்டங்களை முன்னெடுத்து, சிதையும் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்.
இனி ஒரு விதி செய்வோம்! போதையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
Comment