பட்ஜெட் எனும் பம்மாத்து
ஐம்பது நாள்களுக்குள் தேசிய சனநாயகக் கூட்டணி என்ற பிம்பம் மறைந்து விட்டது. பா.ச.க. தன் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் கற்ற அதிரடி அரசியலைத் தொடங்கி விட்டனர். முதல் பந்திலிருந்து அடித்து ஆடும் அதிரடி ஆட்டம் இங்கு ஆரம்பம். எந்த அரசின் நிதி அறிக்கையும் குறை-நிறை எனக் கலந்து காணப்படும். ஆனால், 2024-2025 -ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையோ அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால், அத்தனையும் சொத்தை என்பதாய் உள்ளது. 2024 -ஆம் ஆண்டில் வரப்போகும் நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஒரு ஜனரஞ்சக பட்ஜெட் என்ற கணிப்பும் தவறியது.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி “எ.எ. பட்ஜெட்” என்றார். நிதிநிலை அறிக்கையை முழுவதும் ஆய்ந்தபின் அது “எபி பட்ஜெட்” எனக் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பா.ச.க.வின் சிறுபான்மை அரசிற்கு முட்டுக் கொடுக்கும் பீகார் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு முறையே 26 ஆயிரம் கோடி மற்றும் 15 ஆயிரம் கோடி வாரி வழங்கப்பட்டது. ஆந்திரம் தவிர்த்த தென்னிந்திய மாநிலங்களும், ‘இந்தியா’ கூட்டணி ஆளும் மாநிலங்களும் முற்றிலும் புறந்தள்ளப்பட்டன.
நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வலுவான எதிர்வாதம் வைத்தனர். புது தில்லியின் தெருக்களில் இறங்கி மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் போராடினர். தமிழ்நாடு மக்கள், “வரி வாங்கத் தெரியுது, நிதி கொடுக்கத் தெரியாதா?” என்று வீதி முனைகளில் முழக்கமிட்டார்கள். தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி தவிர்த்த எதிர்க்கட்சிகள் கண்டனங்களைப் பதிந்தார்கள். இரவோடு இரவாக ஒன்றிய அரசின் மந்திரி பதவிக்காகக் கூட்டணி மாறிய ‘மாம்பழம்’ அன்புமணி சொல்கிறார்: “தமிழ்நாட்டிலிருந்து 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தால், நாம் கேட்டது கிடைத்திருக்கும்.” அதற்குப் பதிலடி கொடுத்த அ.தி.மு.க.வினர் “நாங்கள் தூக்க வேண்டிய நேரத்தில் கேட்காமலே, மக்களவை-மாநிலங்களவையில் பா.ச.க.வைக் கண் மூடி, கை தூக்கி ஆதரித்தோம். கடந்த பத்தாண்டுகளாகப் பா.ச.க. தமிழ்நாட்டிற்கு என்ன தந்தது?” என எதிர்வாதம் வைத்தனர். அன்புமணியின் பேச்சு குடியாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதும், மக்களின் வாக்களிக்கும் உரிமைக்குத் தரப்பட்ட மறைமுக அச்சுறுத்தல் என்பதும் கண்கூடு.
தமிழ்நாடு அரசு பேரிடர் நிதியாக 37 ஆயிரம் கோடி கேட்டது. ஒன்றிய நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் இரண்டு ஒன்றிய அரசின் குழுக்கள் என வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டும் எந்த நிதியும் தமிழ்நாட்டிற்குத் தரவில்லை. ஆனால், பீகாருக்கு வெள்ளத் தடுப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு தொகையைச் சொல்லுங்கள் என்றால், எவருக்கும் சொல்லத் தெரியவில்லை.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்குத் தொடர்ந்து கடிதங்கள், பாராளுமன்றம், மேலவை, நிதி அமைச்சர், முதல்வர் என எல்லா நிலைகளிலும் வலியுறுத்தப்பட்டும் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒற்றைச் செங்கல்லில் இருந்த மதுரை எய்ம்ஸ் சுற்றுச் சுவரோடு நிற்கிறது. மதுரை, கோவை மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இல்லை. வட மாநிலங்களில் சிறு நகரங்களுக்குக் கூட மெட்ரோ என்பது மாற்றாந்தாய் மனப்பான்மையின் உச்சம்.
தமிழ்நாடு அரசிற்கு ஒன்றிய அரசு அள்ளிக் கொடுக்காவிடினும், கிள்ளிக் கூட கொடுக்கவில்லை என்பதே கொடுமை! இது குறித்துப் பேசிய புது தில்லி மூத்த பத்திரிகையாளர் மாதவன் “இது ஏலச்சீட்டு அரசியல்” என்று விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் “இது மக்களைக் காப்பாற்ற போடப்பட்ட பட்ஜெட் அல்ல; தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள போட்ட பட்ஜெட்” என்றார். இக்கருத்தைத் தமிழ்நாட்டின் 80% மக்கள் ஆதரிப்பதாக ஒரு பிரபலத் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டது. தமிழ்நாடு முதல்வர் தன் எதிர்ப்பைப் பதிவு செய்ய, மத்திய அரசின் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் என, பத்து மாநில முதல்வர்கள் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
‘இந்தியா’ கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரும் ‘எனக்கு ஐந்து நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின் மைக் ஆப் செய்யப்பட்டது’ என்றார். மேலும், மற்றவர்களுக்கு அதிக நேரம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். ‘நிதி ஆயோக்’ தலைவர் பிரதமர் அக்கூட் டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதே மிளிரும் செய்தி.
நிதிநிலை அறிக்கை குறித்த எதிர்ப்புகள் தொடர்ந்து வலுக்க, நாம் நிதிநிலை அறிக்கை எனும் அந்தச் சொத்தை அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்ப்போம்.
ஒன்றிய அரசின் வரி வருவாய் 32 இலட்சம் கோடி. செலவு 48 இலட்சம் கோடி. பற்றாக்குறைக் கடன்கள் எனில் முன்பே உள்ள 155 இலட்சம் கோடி கடன் மற்றும் வட்டி குறித்த ஆக்கப்பூர்வத் திட்டமிடுதல் அரசிடம் இல்லை. பாரதிய சனதாவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் அவசரகால நிதி முழுவதும் துடைத்து எடுக்கப்பட்டது. இவர்களால் ‘இராஜ்யம் பூஜ்யம்’ என்ற பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து விட்டது. நிதிநிலை அறிக்கையோ, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிக் கவலைப்படவில்லை.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மற்றும் ஊதியம் பெறும் மக்கள் வருமான வரி செலுத்தும் வருவாய் தொகை உச்சவரம்பு அதிகப்படுத்தப்படும் என எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை. மக்களின் வீட்டுக் கடன், சேமிப்பு, உடல்நலக் காப்பீடுகள் ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் முதல் வகை வருமான வரி கணக்கீட்டு முறை முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளது. எந்த வகை தேச நலன், தனிமனித நலன் பேணாத முழு வருவாய்க்கு உள்பட்ட இரண்டாம் வகை வருமான வரிக் கணக்கீட்டு முறை மெல்ல நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஒன்றிய அரசிற்கு மிகவும் பிடித்த ‘EWS’ இடஒதுக்கீடு முறையில் ரூபாய் 8 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் பெறுபவர்கள் ஏழைகளாம்! அத்தொகை அளவிற்கு வருமான வரி செலுத்தும் ஊதியத்திற்கு, வருமான வரிவிலக்கு வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
‘கோவிட்’ பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான இரயில் கட்டணச் சலுகை வயது 60-லிருந்து 70-க்கு உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகவே மிஞ்சியது. 2011 -ஆம் ஆண்டிற்குப் பிறகு 2021 -இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். நடத்தப்படவில்லை. இதனால் 10 கோடி முதல் 12 கோடி வரையிலான மக்கள் உணவு பாதுகாப்புச் சட்டப்படி, இலவச உணவிற்கான தானியங்கள் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குச் சித்தாந்த ரீதியில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் எதிர்ப்பு, முரண்பாடு உள்ளது. அதைத்தான் பா.ச.க. தன் ஆட்சியில் பிரதிபலிக்கிறது.
ஒன்றிய அரசு தன் வரி வருவாயில் 52 சதவிகிதத்தைத் தன் செலவுகளுக்கும், திட்டங்களுக்கும் வைத்துக்கொண்டு 42 சதவிகிதத்தை மாநில அரசுத் திட்டங்களுக்குப் பிரித்து வழங்குகிறது. மத்திய அரசு அதில் பாரபட்சம் காட்டுகிறது என்பதே பெருங்குற்றச்சாட்டு. மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார்:
“மத்திய அரசு பணவீக்கம் குறித்துக் கவலைப்படவில்லை. அது குறித்து எந்தக் கணக்கீட்டு முறையை மேற்கொள்கிறது? இந்த நிதி அறிக்கையைப் பார்த்தால், நிதி அமைச்சருக்குப் பணவீக்கம் பற்றி 10 வரிகள்தான் தெரியும் எனத் தெரிகிறது” என்று வெடித்தார். இராகுல் காந்தியோ “சொந்தமான ஒரு விமானம் கூட இல்லாத நாட்டிற்கு, 50 புதிய விமான நிலையங்கள் எதற்கு? அவை நாளை அம்பானி, அதானிக்குத் தானம் தரவா?” என்று கேட்டார். பா.ச.க.வின் சுப்பிரமணியன்சுவாமியோ “நிதி அமைச்சருக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்” என ஒரு போடு போட்டார்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விவசாயத்தைப் புறக்கணித்து உள்ளது. குறைந்தபட்ச விவசாய விளைபொருள்களுக்கான ஆதார விலை பெற எந்தத் திட்டமும் இல்லை. கிராமங்களில் விவசாயக் கூலிகளுக்கு ஆதரவான 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஆண்டுதோறும் குறைக்கப்படுகிறது. நெசவுத் தொழில் அழிந்து விட்டது. நிதிநிலை அறிக்கை தினத்தன்று நீட்டிய தொலைக்காட்சி மைக் முன், கொங்கு மண்டல தொழில்முனைவோர், ‘ஒன்றிய பட்ஜெட்டில் எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை’ எனத் தெரிவித்தனர். இவர்கள் பத்தாண்டுகளாக மோடி அரசிற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தவர்கள். பக்தர்களாக மோடி மந்திரம் சொன்னவர்கள். இன்று பழைய நினைவில் காலை இரண்டு மணி நேரம், ஓடாத தங்கள் தொழில் நிறுவனங்களுக்குச் சென்று கண்ணீரோடு காண்பவர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்களும் அழிந்து விட்டன.
மாநில அரசுகளை அதிகாரம் இழக்க வைத்து, சுய சார்பு மங்க வைத்து, ‘ஒரே நாடு, ஒரே தலைவர்’ என்ற முன்னெடுப்புக்கு இந்த நிதிநிலை நகர்த்துகிறது. இனி மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் போல மாறும் அபாயம் துவங்கி விட்டது. தேசத்தின் விளிம்பு நிலை மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வுரிமை மீட்டுருவாக்கம் செய்யப்படவில்லை.
மக்கள் நலனைப் புறக்கணித்த ஒன்றிய அரசை, மக்களும் வாக்குச் சீட்டு வழி புறக்கணிப்பர். இதுதான் இந்திய சனநாயகம்!
Comment