No icon

தனியே...

தன்னந்தனியே...

ஸ்டெல்லா புரூஸ் என்ற தமிழ் எழுத்தாளரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு பெயர் இவரின் இயற்பெயராக இருக்க முடியாது என்பதனை எளிதில் ஊகித்திருப்பீர்கள். 1941 -இல் விருதுநகரில் பிறந்த ராம்மோகன் தன் படைப்புகளுக்காகத் தேர்ந்துகொண்ட புனைப் பெயர்தான் ஸ்டெல்லா புரூஸ். திரைப்படங்களில் பணியாற்றும் நோக்கத்தில் 1965 -இல் விருதுநகரை விட்டு, சென்னைக்கு இடம்பெயர்ந்த இந்த எழுத்தாளருக்குத் திரைப்படங்களில் பெரும் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், அவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கின. ‘ஒரு முறைதான் பூக்கும்மற்றும்அது ஒரு நிலாக்காலம்இரண்டும் இவரது நாவல்களில் புகழ் பெற்றவை.

1987 -இல் இவருக்கு வயது 48 -ஆன போது ஹேமா எனும் ஹேமாம்புஜம் என்ற 32 வயதான, தன் மீது அபிமானம் கொண்ட தன் வாசகியைத் திருமணம் செய்து கொண்டார். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இவர்களின் திருமண வாழ்வில் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. திருமணம் நிகழ்ந்து இருபது ஆண்டுகள் கடந்த பின் சிறுநீரகப் பாதிப்பால் ஹேமா இறந்தார். அன்பு மனைவி தன்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு இறந்த துயரத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்தத் துயரமே அவரைக் கொன்றது.

மனைவி இறந்து ஆறு மாதங்கள் கழித்து, கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு, 2008 மார்ச் முதல் நாளன்று எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார். இறுதிக் கடிதத்தில் என்ன சொன்னார்? “நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மிகமான, இலக்கியத்தன்மை கொண்ட ஒரு காவியம். தனிமைச் சிறை என்னைக் கடுமையாக நெரிக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை. எனவே, மரணத்தின் கதவுகளைத் திறந்து நான் ஹேமாவிடம் செல்கிறேன்என்று எழுதியிருந்தார்.

ஆல் லோன்லி பீப்பிள்’ (All the Lonely People) எனும் ஓர் ஆங்கில நூல் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. சாம் கார் (Sam Carr) எனும் உளவியல் அறிஞர் தனிமையில் வாடும் பலரிடம் மேற்கொண்ட உரையாடல்களின் அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். நாமே விரும்பித் தேடும் தனிமையை ஆங்கிலத்தில்சாலிட்டியூட்’ (Solitude) என்கின்றனர். இது நம்மை வாட்டி வதைக்கும்லோன்லினஸ்’ (Loneliness) எனும் எதிர்மறை உணர்வு. எங்கோ ஒருசிலரைத் தாக்கும் வேதனை அல்ல தனிமை. சென்ற ஆண்டில் இங்கிலாந்து மக்களில் 37 இலட்சம் பேர் தாங்கள் தனிமை உணர்வால், நிம்மதி இழந்து தவிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்.

இதன் தீவிரத்தை உணர்ந்த காலஞ்சென்ற ஜோ காக்ஸ் எனும் இங்கிலாந்தின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர், தனிமையின் பாதிப்பைக் கண்டறியும் பொருட்டு அதனை ஆய்வு செய்ய ஓர் ஆணையத்தை ஏற்படுத்தினார். அக்குழுவினர் 2017 -ஆம் ஆண்டின் இறுதியில் தங்களது அறிக்கையைச் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, தனிமை உணர்வால் தாக்கப்படும் நபர்கள் எல்லா நாடுகளிலும் இருப்பதை நாம் அறிவோம். நாமே அவ்வப்போது இதன் தாக்கத்திற்குப் பலியாகி இருக்கலாம்.

இதற்கு என்ன காரணங்கள்?

அறிஞர்கள் சொல்லும் காரணங்களில் முதலாவது தனித்து விடப்படுவதுதான். ஸ்டெல்லா புரூஸைப் போன்று பல்லாண்டுகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, அன்போடு வாழ்ந்த இணையரில் ஒருவரைச் சாவு வந்து பறித்துக் கொள்ளும்போது, மற்றவர் தனித்து விடப்படுகிறார். இத்தனை காலமும் உறுதுணையாய் இருந்த வாழ்க்கைத் துணை இல்லாத உலகம் இவர்களுக்கு இருள் சூழ்ந்ததாக மாறிப்போகிறது. துணையின்றித் தனியாக வாழ வேண்டியிருக்கும் வாழ்க்கை கசந்து போகிறது.

துணையை இழக்கும் சோகம்  மிகப் பலருக்கு முதுமையில் நிகழ்வதால், முதுமை கொண்டு வரும் துயரங்களில் தனிமையும் சேர்ந்து கொள்கிறது. துணையில்லாத தனிமையில் தங்களால் வாழவே இயலாது என்று நினைக்கும் இணையர்கள் இருக்கிறார்கள். சுற்றியுள்ள பலருக்கு இது நிகழ்ந்தாலும், தங்களுக்கு நிகழக்கூடாது என்று பிரார்த்திக்கிறார்கள்.

அந்தக் கிரேக்கப் புராணக் கதையில் நாம் காணும் வயது முதிர்ந்த அந்த இணையர்கள் கிரேக்கக் கடவுளர்களின் தலைவரான ஜூபிடரிடம் கேட்ட வரம் என்ன? “இத்தனை ஆண்டுகள் ஒருவருக்கொருவர் அன்புத் துணையாய் வாழ்ந்து விட்டோம். இருவரில் ஒருவர் இறந்து, மற்றவர் மட்டும் தனித்திருக்கும் நிலை எங்களுக்கு வேண்டாம் என்று நினைக்கிறோம். எனவே, நாங்கள் இருவரும் ஒரே நாளில் ஒரே கணத்தில் இவ்வுலகை விட்டுப் போகும் வரம் வேண்டும்என்கிறார் மூதாட்டி.

முதுமை கொண்டு வரும் சுமைகளோடு சமீப காலத்தில் இன்னொரு சோகமும் சேர்ந்திருப்பது நமக்குத் தெரியும். ‘அல்ஸைமர்ஸ்’ (Alzheimer’s) எனப்படும் நினைவிழப்பு நோயினால் பாதிக்கப்பட்டோர் உறவுகளோடு இருக்கிறார்களா? இல்லையா? உயிரிருக்கிறது, உடலிருக்கிறது... ஆனால், நினைவில்லை என்றால் அவர்கள் நிகழ்காலத்தவர்களா? அல்லது கடந்த காலத்தவர்களா?

இப்படி முதுமை கொண்டு வரும் தனிமையின் தீவிரத்தைக் குறைத்து, ஆறுதலை அதிகரிக்கும் மிக நல்ல முயற்சி ஒன்று ஈராண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் முழு ஆதரவோடும், ஆசியோடும் அவருக்கு நெருக்கமான ஷந்தானு நாயுடு எனும் இளைஞர்குட் ஃபெல்லோஸ் இன்டியா’ (Good Fellows India) எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளார். தனிமையில் வாழும் முதியோரையும், அவர்கள் மீது அக்கறை கொண்ட இளையோரையும் இணைக்கும் அழகான, அருமையான அமைப்பு இது. இந்த இளையோர் முதியோரை அடிக்கடிச் சந்தித்து தோழமையும் நட்பும், உதவிகளும் தருகின்றனர். இரு வெவ்வேறு தலைமுறையினரை இனிதாய் இணைக்கும் முயற்சி இது.

உறவுகளைப் பிரிப்பது சாவு மட்டுமல்ல என்பதை நாம் அறிவோம். மூன்றாம் நபர் ஒருவருக்காக வாழ்க்கைத் துணையைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போவோர் இருக்கிறார்கள். விரும்பாத, ஏற்காத மணமுறிவு ஏற்படுத்தும் தனிமை உணர்வும் ஏறத்தாழ சாவு விளைவிக்கும் துயருக்கு நிகரானது. சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்படுவது, நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்படுவது அல்லது ஏமாற்றப்படுவது அல்லது மறக்கப்படுவது போன்ற சோக அனுபவங்களும் தனிமை இருளைத் தோற்றுவிக்கின்றன. ‘பழகிப் புரிந்த உயிர்கள் பல / விலகிப் பிரிந்து போயின / நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் / நினைவுகளாய் ஆயினஎன்று மனம் அழுவது இதனால்தான். இந்த வரிகள் வரும்இயேசுவே என் இறைவாஎனும் எனது பாடலை நீங்கள் யூடியூபில் கேட்கலாம்.

தன்னை அன்பு செய்யாத ஓர் ஆணுக்கு மனைவியாகும் பெண்ணின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன் தகுதிகள், நற்குணங்கள், உழைப்பு, தியாகங்கள் அத்தனையையும் அங்கீகரிக்க மறுக்கும் ஒரு குடும்பத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் பெண்ணின் நிலையும் அதற்கொத்ததுதான். இத்தகைய ஒரு பெண்ணைத்தான் கவியரசர் கண்ணதாசர் இப்படிப் பாட வைத்தார்:

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா / நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா / இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!”

பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் சில சூழல்களில் தனிமை உணர்வு தாக்கக்கூடும். மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும் அன்றாடம் தான் படும் பாடுகளை மனைவியோ, பிள்ளைகளோ ஒரு நாளும் அங்கீகரித்துப் பாராட்டுவதில்லை, நன்றி சொல்வதில்லை என்றால், அந்த நிலையும் தனிமை இருள்தான். அதில் விரக்தியும், வெறுமையும் கலந்துள்ளன. ‘யாருக்காக உழைத்து, உழைத்து ஓய்ந்து தேய்கிறேனோ, அவர்கள் ஒருநாளும் பார்க்காத இருளில் நான் மட்டும் தனித்திருக்கிறேன்எனச் சொல்ல வைக்கும் உணர்வு இது.

மிக மிகச் சில விதிவிலக்குகளைத் தவிர, என் துறவு சபையினரோ, குழுமத்தினரோ என் படைப்புகளை வாசித்துப் பாராட்டி அங்கீகரிக்காத தனிமை இருளை எப்படி மேற்கொள்கிறேன் தெரியுமா? அருள்சகோதரிகள், குருக்கள், பொதுநிலையினரில் சிலர் என் ஒவ்வொரு படைப்பையும் மனதாரப் பாராட்டும் ஒளிக் கீற்றுகளை உள்ளே வரவழைப்பதன் மூலம்தான்.

தற்காலிகமான தனிமை உணர்வு மற்றொரு வகை. புதிய இடம், புதிய சூழல், அறியாத மொழி, தெரியாத மனிதர்கள் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. பழகப் பழக இந்தத் தனிமை குறைந்து, மெல்ல மறைகிறது. இப்படி எதுவுமே இல்லை என்றாலும் கூட, நாம் வாழும் வரை அவ்வப்போது நம்மைத் தாக்கும் தனிமை உணர்விலிருந்து தப்ப யாராலும் இயலாது என்பதே அறிஞர்கள் பலர் வலியுறுத்திச் சொல்லும் உண்மைமனித வாழ்வுக்குரிய ஓர் இயல்பு இது. நிரந்தரத் துணை என்று யாருமின்றிப் பயணம் போகும் பயணிகள் நம்மோடு தனிமையும் சேர்ந்து பயணிக்கிறது - வீடு போய்ச் சேரும் வரை.

தனிமையின் தாக்கத்தை எப்படிச் சமாளிப்பது?

உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருக்கிறேன்என்று நமக்கு உறுதி சொன்னவரின் சொற்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்வது - ‘அவர் என்னோடு இருக்கும் வரை நான் தனியாக இல்லைஎன்று நமக்கு நாமே சொல்லிக் கொள்வது - தங்களது அன்பால், நட்பால், தோழமையால் நம்மோடு சிறிது காலம் பயணிக்கும் அன்புறவுகளைப் பேணிப் பத்திரப்படுத்திக் கொள்வது - மனித வாழ்வு ஒரு கொடை என்றால், அதனோடு சேர்ந்து வரும் தனிமையும் தவிர்க்க முடியாத ஒன்று என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதுபோன்றவை தனிமை உணர்வின் தாக்கத்தைச் சமாளிக்க நமக்கு உதவலாம்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தியாகவோ, குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்.)

Comment