No icon

பிளவுபடாத அன்பின் பிரகடனம்

 “ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை அணிந்துகொள்வோமாக” உரோ 13:12).

திருவிவிலியத்தில் கடவுளின் படைக்கலன்கள் என்பது இறைவனின் மீட்பைக் குறிக்கும் அடையாளம். அது அவரது வல்லமையையும் ஆற்றலையும் எப்பொழுதெல்லாம் அவர் பயன்படுத்துவாரோ, அப்பொழுதெல்லாம் அது செயலாக்கம் பெறும். அந்த ஆற்றல் உண்மையைச் சிரமேற்கொண்டு, நேர்மையைத் தனது அடித்தளமாகவும், அமைதியை விருப்பமாகவும், நம்பிக்கையைத் தன் ஆன்ம உணர்வாகவும், இறைவார்த்தையைத் தனக்கு எல்லாமுமாகவும் கொண்டு பயணிக்கும். இதுவே கடவுளின் அடையாளமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவே திருத்தூதர்களுக்குக் கவசமாகவும் இருக்க வேண்டுமென்று இறைவன் இயேசு விரும்புகிறார். அவர்களின் வாரிசாகப் பின்தொடர்ந்து வரும் ஆயர்களும் புனிதத்தின் அடையாளமாக மூவொரு கடவுளிடமிருந்து பெற்று தம் பணியைத் தொடர்கிறார்கள்.

இயேசு திருத்தூதர்களுக்குக் கொடுத்த முக்கியப் பணியாக நாம் வாசிப்பது, “விண்ணரசு நெருங்கி வந்து விட்டது எனப் பறைசாற்றுங்கள்; நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்” (மத்தேயு 10:7-8). அவ்வழியில் வரும் நம் புதிய ஆயரும் தனது ஆயர் பணியின் அடையாளமான ‘அவரது இரக்கமிகு பேரன்புக்குச் சான்று பகர’ என்ற விருதுவாக்கோடு தன் ஆயர் பணியைத் தொடங்குகிறார்.  அதில் தன் இறை அனுபவத்தையும், உலக அறிவையும் முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதலில் தன்னைத் திருத்தந்தையின் வாரிசாகத் தொடங்குகிறார். அவரது வெண்கொற்றக் குடையின் கீழ் திருத்தூதர்களின் வாரிசாக, குருத்துவத்தின் முழுமையைப் பெறுபவராக உணர்கிறார். இதில் அவரது, இயேசுவின் தலைமையின் கீழ் மேய்ப்புப் பணியாற்றும் பணிவு வெளிப்படுகிறது. திருச்சிலுவை, கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மையமாகவும், இயேசுவின் அன்பு, தியாகம், பணிவு, இறை விருப்பம் நிறைவுபெறுதல், எல்லாவற்றையும் மீட்பின் பாதையில் தூய ஆவியாரின் துணையோடு உண்மையை நோக்கி வழிநடத்துதல் என்பதைக் குறிக்கும். இயேசுவின் திரு உருவம் அவரின் அன்பையும், இரக்கத்தையும், பிளவுபடாத பணியையும், எல்லாரையும் அரவணைக்கும் இறைவார்த்தையையும் பிரதிபலிக்கின்றது. இயேசுவின் பின்புறம் காணப்படும் சிவப்பு நிற மேகங்கள் இயேசு அரசர், வெற்றி வீரர், அமைதியின் பேரரசர் (பிலிப்பியர் 4-7) என்பதைத் துல்லியமாகக் குறிக்கிறது. இயேசுவின் திரு இருதயமும், அன்னை மரியாவின் மாசற்ற இருதயமும் என்றும் தஞ்சை மறைமாவட்டத்தைக் குன்றா அன்புடன், குறைவுபடாத ஆசிருடன் காக்கும் கவசமாக இருக்கிறது. அண்டி வந்தோரை அரவணைக்கும் வேளைநகர் ஆரோக்கியத் தாய் ஆட்சிசெய்து, அருள்பாலிக்கும் மறைமாவட்டமாக இம்மறைமாவட்டம் திகழ்கிறது. இந்த மறைமாவட்டத்தின் பணியையும் பண்பையும் பிரதிபலிக்கும் தாயின் திருத்தலமாக, இங்கு மட்டும்தான் அன்னை மரியா குழந்தை இயேசுவோடு காட்சி தந்து, நம் அனைவரையும் குழந்தைகளாகப் பாவிக்கும் மேன்மை வெளிப்படுகிறது.

இத்தகைய ஆன்மிக ஆழமும், சமுதாய விழிப்புணர்வும் எல்லாருக்கும் எல்லாமுமாக விளங்கும் திருவிவிலிய மதிப்பீட்டையும் தஞ்சை மறைமாவட்ட இறைமக்கள் பெற்றிருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறார்கள் என்பதை மனித உருவங்கள் அடையாளமாக வெளிப்படுத்துகின்றன. அதிலும் முதன்மையாக, பெண்கள் இறைவனிடம் இன்னும் நெருக்கமாக இருந்து மதிக்கப்படுவதை இது குறிக்கிறது.

கீழ்க்காணும் பசுமையான நெற்கதிர்கள் மண்ணின் கலாச்சாரத்தையும், மக்களின் உழைப்பையும் வெளிப்படுத்துகின்றன. தஞ்சை மறைமாவட்டம் வெறும் செழிப்பான நெற்களஞ்சியமாக மட்டும் இல்லாமல், ஆயர் அவர்களின் அன்பும், பணிவும், செபமும், வாழ்வும் இந்தச் செழுமைக்காக உழைக்கும் எளிமையான விவசாயிகள், பணியாளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், தங்களது உண்மையான முகவரியைத் தொலைத்துவிட்டு, காலங்காலமாய் அதை மீட்டெடுக்கப் போராடுகிறவர்கள், எல்லாருக்கும் பிளவுபடாமல் கிடைக்கும் என்ற நம்பிக்கை, புதிய ஆயர் அவர்களது வாழ்க்கைத் தத்துவமாக, பிளவுபடாத அன்பின் பிரகடனமாக இதில் அவர் வெளிப்படுத்துகிறார் என்பது எல்லாரும் பெற்ற பேறாகக் கருதி மகிழ்கிறார்கள்.

புதிய ஆயரின் பணி சிறக்க வாழ்த்துவோம்! அவரது எல்லா நலன்களுக்காகவும் இறைவேண்டல் செய்வோம்.

Comment