No icon

சிந்தனைச் சிதறல்

மண்ணில் பெண்ணுக்கே தனித்துவம்

கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது வயநாடு. வயல்களால் சூழப்பட்டுள்ளதால் இதுவயநாடுஎன்று அழைக்கப்படுகிறது. முற்காலத்தில்மாயாசேத்திரம்என அழைக்கப்பட்டது. அது மருவிவயநாடுஎன அழைக்கப்படுகிறது என்ற குறிப்புகளும் உள்ளன.

கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்த பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு,  1980-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி கேரளாவின் 12-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது வயநாடு. இது கேரளாவின் சொர்க்கப் பூமி என்றும் அழைக்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்பும் பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

ஜூலை 30-ஆம் தேதி அன்று இரவில் கொட்டிய கன மழையால் வயநாடு, முண்டக்கை, சூரமலை, மேப்பாடி மற்றும் அட்டமலைக் கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஆகஸ்டு 05, 2024 வரை 358 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டது.

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே 100 அடி நீளமான கான்கிரீட் பாலம் இருந்தது. நிலச்சரிவினால், மலைகளில் இருந்து பெயர்ந்து விழுந்த பாறைகளால் இப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு கிராமங்களுக்கு இடையே இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டது. பாலம் இடிந்த காரணத்தால் இப்பகுதிக்கு மீட்புப் பணிபுரிவது கடினமாக இருந்தது. மீட்புப் படையினர் செல்வதிலும், மீட்புப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்வதும் மிகவும் கடினமாக இருந்தது.

தேயிலைத் தோட்டத்தில் ஏற்கெனவே இருந்த வாகனங்கள் மட்டுமே தேடுதல் தளங்களுக்குப் பொருள்கள், ஆள்கள் மற்றும் கருவிகளை ஏற்றிச் சென்றன. இதுவும் மிகவும் கடினமாக இருந்தது.

பாலம் உடைந்த அதே இடத்தில், பெய்லி பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. பெய்லி பாலம் என்பது 1940-1941 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. இதன் பாகங்களை எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு சென்று தற்காலிகப் பாலம் அமைக்க முடியும். இந்தப் பாலம் இராணுவப் பணிகளுக்கும், இயற்கைப் பேரிடர் ஏற்படும் இடங்களிலும் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய டொனால்ட் பெய்லி என்பவர்தான் இந்தப் பாலத்தை உருவாக்கினார். இந்தப் பெய்லி பாலம் இராணுவ டாங்குகளின் எடையையும் தாங்கக்கூடியது.

மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் இந்திய இராணுவம் அதிரடியாக 31 மணி நேரம் இடைவேளையின்றி உழைத்த பிறகு, பாலம் கட்டப்பட்டது. இராணுவம் முதலில் ஓர் ஆம்புலன்ஸைக் கடந்து செல்ல அனுமதித்தது. அதன் கட்டமைப்பு ஒருமைப்பாட்டைச் சோதிக்க பாலத்தின்மீது ஓர் இராணுவ டிரக்கை ஓட்டி சோதனை செய்தது. பாலத்தைக் கட்டுவதன் தொடக்கம் முதல் இறுதி வரை திட்டங்களை வகுத்து, வீரர்களை ஒருங்கிணைத்து பணிகளைச் செய்தது இவர்தான். 3மீ அகலம் கொண்ட இந்த பாலம் 24 டன் எடையைத் தாங்கும் திறன் கொண்டது.

இந்தப் பாலம் மூலம் முண்டக்கையில் தேடுதல் பணிகளைத் துரிதப்படுத்த முடியும் என்று கர்நாடகா மற்றும் கேரள துணைப் பகுதிகளின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் வி.டி. மேத்யூ தெரிவித்தார். மண் அள்ளும் இயந்திரங்கள், குழிகளைத் தோண்டும் குழுக்கள், டிரக்குகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜீப்கள் முண்டகைக்குச் செல்ல இந்த ஒரு பாலமே இனி போதுமானது என்றும், இப்போது பாலம் கட்டப்பட்டதால் இங்கே மீட்புப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்று இராணுவ மேஜர் சீதா தெரிவித்துள்ளார்.

கேரள மக்கள் தற்போது மேஜர் சீதா ஷெல்கேவைஇரும்புப் பெண்மணிஎன்றும். வளரும் தலைமுறைக்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார் என்றும், ‘ரியல் ஹீரோஎன்றும் கூறிக் கொண்டாடி வருகின்றனர்.

மண்ணில் பெண்ணிற்கே தனித்துவம் அவள்

பெண்மையும் தாய்மையும் பாரினில் அதனால்

பெண்ணிற்கு நிகரிலார் மற்றெவரும் பத்தினிப்பெண்

மண்ணில் நடமாடும் தெய்வம் அறி

என்கிறார், அறிவியல் விஞ்ஞானி வாசுதேவன் தேசிகாச்சாரி. உலகத்தைப் படைத்தது கடவுள் என்றால், உலகத்தையும், அதில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது பெண். தான் பெற்றெடுத்த குழந்தைகளையும், துன்பத்தில் இருக்கும் பல்வேறு நபர்களையும் இணையாக நினைத்துப் பாதுகாப்பது பெண் மட்டும்தான்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் மத்தியில், கடினமான இராணுவத் துறையிலும் சிறந்து விளங்கி, மக்களைப் பாதுகாத்து பெண்களுக்குள் தனித்துவமாக விளங்கும் மேஜர் சீதா ஷெல்கே பெருமைக்குரியவரே. அவருடைய பணி சிறக்க வாழ்த்துவோம்!

Comment