அன்னையின் போர்வாள் நமதாகட்டும்!
‘போர்வாளாய் தந்த செபமாலையைப்
போற்றிட புகழ்ந்திட எமையழைத்தீர்!
நறுமண ரோசா மலர்களைக் கொய்து
மறையுண்மைகளை மாலையாய்த் தொடுத்து
மரியாவை நாளும் புகழ்ந்து போற்றுவீரே!’
அன்று கொங்கு மண்டலம் கொடிகட்டிப் பறந்த காலம். அது மட்டுமா? இயற்கை எழில் நிறைந்த மலர்வனம்! புலவரின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. கீழைக்காற்றில் திளைத்து, மலை முகட்டை அடைந்த குளிர்ந்த மேகங்கள் பரவி எழவும், கொடியாகப் படர்ந்து வளர்ச்சி பெற்ற முல்லை மணம் பரப்பவும், மலர்கள் ஒன்றோடொன்று மோதுவதால் தேன் சொரிந்து, இளங்கிளைகள் வளைந்து கொடுத்து தேன் வண்டுகள் ரீங்காரமிட்டுக் களிப்புற்றுப் பாடல் பாடவும், வானத்துச் சேனைகள் வானில் வட்டமிட்டு வந்து நிலாவை அணிகளாக அணிந்து அன்னையின் திருவடிகளை வணங்கிப் பாடவும், இறைவனின் அருள்கடலாகச் சிரித்த முகத்துடன் கையிலே செபமாலை ஏந்தி, கருமுத்தன் நகரில் காட்சி தருகின்ற அன்னையை நாமும் வணங்குவோம்.
ஜெயம் தரும் செபமாலைத் தாயின் கையில் ஏந்தியுள்ள செபமாலையாகிய மணிமாலை, பாவிகள் பற்றிக்கொண்டு மேலுலகம் ஏற விண்ணோர் தொங்கவிடும் கயிறா? மயக்கத்தையுடையதை வெட்டி அழிக்கும் படைக்கலனா? இறையருளால் மகிழ்ந்து, பக்தர்களை விடாமல் கட்டி வைத்திருக்கும் வீரமாமுனிவர் புகழும் தாம்புக்கயிறா? அது மட்டுமல்ல, பகைவனை விண்ணிலும் மண்ணிலும் வெட்டி வீழ்த்தும் போர்வாள்தான் அது.
2014-ஆம் ஆண்டு நைஜீரியாவின் ஆயராக இருந்த ஆலிவர்டாமின் என்பவர் கோவிலில் செபித்துக் கொண்டி ருந்தார். அவர் உருக்கமாகக் கண்களை மூடி செபமாலையைச் செபித்துக் கொண்டிருக்கும்போது இயேசுவும் மாதாவும் தோன்றினர். இயேசு ஒரு வாளைக் கொடுத்து ‘பொக்காரோ என்ற தீவிரவாதிகள் ஒழிந்துவிட்டார்கள்’ என்று மூன்றுமுறை கூறியதும் மறைந்துவிட்டார்கள். ஆயர் அதைப் பார்த்தபோது அது வாளாக இல்லை, செபமாலையாகத்தான் இருந்தது.
தனது காட்சி பற்றி மறைமாவட்ட மக்களுக்குத் தெரிவித்து, அனைவரும் செபமாலை செபிக்கும்படிக் கூறினார். இரண்டு ஆண்டுக்குள் அந்த மறைமாவட்டத்தில் அத்தனை தீவிரவாதக் குழுக்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. செபமாலை எதிரிகளுக்கும், தீயசக்திகளுக்கும் போர்வாளாக உள்ளது என்பதை இதன்மூலம் அறிகிறோம்.
தொடக்க நூலில் தோன்றி ஏமாற்றிய அரக்கப்பாம்பு முதல், திருவெளிப்பாட்டில் காணப்படும் அரக்கப்பாம்பு வரை எல்லாவற்றிற்கும் எதிராக மரியாவும் இயேசுவும் சேர்ந்துதான் போர்புரிந்து வெற்றி பெறுவதைக் காண்கிறோம்.. பழைய ஏற்பாட்டில் ஒரு போர்வாளாக ஆரம்பித்து, புதிய ஏற்பாட்டில் அது முழுமை அடைகிறது என்றால் மிகையாகாது. இந்தப் போர்வாளைத்தான் மரியா 1214 -இல் புனித தோமினிக்கிற்குக் கொடுத்து, அப்போது இருந்த தப்பறைக் கொள்கைகளை முறியடித்து வெற்றிபெறச் செய்தார்.
செபமாலையின் தோற்றம் அதாவது கரு (அ) ஆணிவேர் தொநூ 3:15-இல் ‘உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகைமையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்’ என்று கூறியபோதே செபமாலை என்ற வாள் தோன்றிவிட்டது என்று கூறலாம். ஆனால், துவக்கத்தில் ஏற்பட்ட பாவம், சாவு, சாத்தானையும் வார்த்தையாகிய இறைவன் இந்த உலகிற்கு வந்து அழித்து வெற்றிவாகை சூடினார்.
மரியா வழியாக நான்கு மறையுண்மைகளையும் கிறிஸ்து நிறைவு செய்வதைத் திருவிவிலியத்திலும் காண்கிறோம். அதனால்தான் சாவும் சாத்தானும் வீழ்த்தப்பட்டு கிறிஸ்து வெற்றி பெறுவதைக் காண்கிறோம். திருவெளிப்பாடு 12:14-இல் சாத்தான் போர் தொடுக்க வருகிறதைக் காண்கிறோம். ஆனால், மரியா போர்வாளாகிய செபமாலையைத் தந்து, இறைவார்த்தையைத் தியானித்துச் செபித்து வெற்றிவாகை சூடப் பணிக்கிறார். நமது விண்ணகப் பயணத்தில் வெற்றிவாகை சூடவும், இறைத் தந்தையுடன் என்றும் வாழ்ந்திடவும் கருவியாக, போர்வாளாக, ஏணியாக இருப்பது செபமாலைதான்.
முஸ்லிம் படையெடுப்பால் மால்டா தீவை வெற்றிகொள்ள 40,000 போர்வீரர்கள் படையெடுத்துச் சென்றார்கள். அந்த தீவில் 6000 போர் வீரர்கள்தான் இருந்தார்கள். ஒரு போர் வீரன் ஒரு வாளைப் பட்டறைக்குக் கொண்டு சென்று அதில் செபமாலையின் வடிவத்தைப் பொறித்து அதை எடுத்துச் சென்று அன்னையின் போர் வாளைக் கொண்டு வெற்றி பெற்றார்கள். இந்த வாள் இன்றளவும் பெர்குவா அருங்காட்சியகத்தில் உள்ளது.
லெபான்டோ போர்தான் திரு அவையில் திருப்புமுனையாக அமைந்தது. இது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு பயங்கரமான போர் எனலாம். அவர்களிடம் பெரிய கப்பல் படையே இருந்தது. திருத்தந்தை அழைத்தும் இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகள் எதுவும் உதவிக்கு வரவில்லை. ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகள்தான் உதவிக்கு வந்தன. இவர்கள் அனைவரும் போரிடச் சென்றபோது மக்கள் அனைவரும் திருத்தந்தையின் வேண்டுகோளின்படி செபமாலையைக் கையில் ஏந்திச் செபித்தனர். காற்றும் கடலும் இவர்களுக்குச் சாதகமாக அமைந்ததால் வெற்றி பெற்றார்கள்.
இந்தச் செய்தி திருத்தந்தைக்கு வரும் முன்பே அவர் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே காட்சி கண்டவராய் ‘வெற்றி பெற்றுவிட்டோம்’ எனக் கத்தினார். 5-ஆம் பத்திநாதர் அவர்கள் இதை வெற்றியின் நாளாக அறிவித்து, பின்னர் அக்டோபர் 7-ஆம் தேதி அன்று அதே நாளில் செபமாலை மாதாவின் திருவிழாவை 1573 -இல் ஏற்படுத்தினார். 1914-18 வரை முதல் உலகப் போர் நடைபெற்றதால் 1917- இல் மே முதல் அக்டோபர் வரை 6 முறை ஒவ்வொரு மாதமும் 13-ஆம் தேதி செபமாலையுடன் காட்சி தந்து உலகில் அமைதி நிலவ செபிக்கும்படி கூறியதோடு, ‘நாள்தோறும் செபமாலை செய்’ என்றும் கூறினார் அன்னை.
1846- இல் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைத்தொடரில் காட்சி தந்த இலாசகான் அன்னையும் பிரான்ஸ் நாட்டு பணிப்பெண் போல் தோன்றி ஏழ்மை, வறுமை என்னும் நிலையிலிருந்து விடுதலை பெற்று வாழ செபிக்கும்படி கூறினார். 1858 -இல் பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் காட்சி தந்தபோதும் 18 முறை செபமாலையுடன் காட்சித்தந்து செபமாலை செபிக்க லூசியாவுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
எனவே, அன்னை மரியா தனது பிள்ளைகளுக்கு எதிரிகளை வெற்றி கொள்ள போர்வாளாக நமக்குத் தந்துள்ளது செபமாலையே! எவ்வாறு ஒரு போர் வீரர் பயிற்சியை மேற்கொண்டு எந்தச் சூழலையும், நெருக்கடியையும் வெற்றிகொள்கிறானோ அதுபோல் ஓர் ஆன்மிகவாதிக்குச் செபமாலை பக்தி முயற்சி போர்வீரனைப்போல் துணைநின்று வெற்றி பெறப் போர்வாளாக இருக்கிறது என்பதை உணர்வோம். அத்தகைய போர்வாளான செபமாலையைக் கையிலேந்தி கருமுத்தன் நகரில் காட்சி தருகின்ற அன்னையை அண்டி, அவர்வழி நடந்து இறைவழி நடந்தால் வெற்றி நமதே! விண்ணகமும் நமதே!! மரியே வாழ்க!!!
Comment