No icon

எல்லை மீறுவது யார்? இந்திய மீனவரா? இலங்கை அரசா?

அலைகளோடு போராடும் மீனவர் வாழ்க்கை தண்ணீரிலும் கண்ணீரிலும் கரைகிறது. அது கரைசேரா ஓடம்போல தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் அவ்வப்போது போராட்டங்கள் எழுவது இயற்கை; ஆனால், வாழ்க்கையே போராட்டமாய் அமைவதுதான் வேதனை! இந்திய-தமிழக மீனவர் வாழ்க்கையில் பன்னெடுங்காலமாய் இப்படித்தான் போராட்டக்களம் சூழ்ந்தே இருக்கின்றது.

துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும், மீனவர் கைதும், துன்புறுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும், பொருள்கள் சேதப்படுத்தப்படுவதும், படகுகளைப் பறித்துக்கொள்வதும், வலைகளை அறுத்தெறிவதும், உயிர் பிழைக்கத் தப்பி வருவதும் என இரவும் பகலும் நடுக்கடலில் பதைபதைக்கும் காட்சிகளே அரங்கேறுகின்றன.  கடலுக்குச் செல்லும் கணவனும், தந்தையும், மகனும் உயிரோடு திரும்பி வரும்வரை வீட்டில் பெண்கள் வேண்டாத தெய்வமில்லை.

குடும்பத்தில் விளக்கேற்ற, குழந்தைகளைக் கரைசேர்க்க, வறுமையின் பிடியிலிருந்து விடியல் காண போராடும் ஒவ்வொரு மீனவரின் விழிகளும், அவர்தம் குடும்பங்களும் நாளும் பொழுதும் விடியல் காணாது, கரைசேராது கலங்கியே தவிக்கின்றன. ‘ஏன் இந்தக் கொடுமை எங்களுக்கு? எங்கள் வாழ்வாதாரம் எங்கே? ஆட்சியாளர்கள் என்னதான் செய்கிறார்கள்? நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள்தானே? எங்களை யார்தான் காப்பாற்றுவார்? எப்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டும்?…’ என்பவை அவர்கள் உள்ளத்தில் எழும் தொடர் கேள்விகளாக இருக்கின்றன.

கடந்த மாதம் ஆகஸ்டு 27, 2024 அன்று நிகழ்ந்த மீனவர் கைது நிகழ்வும், அதன் பின்னர் தொடர்ந்த தண்டனைச் செயல்களும் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற கொடூர மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. தமிழ்நாட்டின் - இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னார் கடற்பரப்பிற்குமிடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் வேளையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டதும் அங்கு அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தப்பட்டதும் பெரும் கவலையளிக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்த வழக்கைக் கடந்த செப்டம்பர் 5 - ஆம் தேதி விசாரித்த இலங்கை நீதிமன்றம், இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும் இலங்கை மதிப்பில் ரூ.50,000 அபராதம் செலுத்தி விடுவிக்கவும், மேலும் மூன்று நபர்களுக்கு ஆறு மாதகாலச் சிறைத் தண்டனையும் விதித்தது.

அபராதம் செலுத்த வேண்டிய 5 மீனவர்களின் குடும்பங்கள் கடனை வாங்கி அத்தொகையைச் செலுத்திய பின், செப்டம்பர் 7 - ஆம் தேதி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வீடு திரும்பிய மீனவர்களின் மொட்டையடிக்கப்பட்ட தோற்றமும், அவர்களின் கண்ணீர் கதைகளும் யாவரையும் கோபக்கனலில் கொதிநிலையில் வைத்திருக்கிறது. அவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுத் தலை மொட்டையடிக்கப்பட்டதும், சிறைப் பகுதியை, கழிவுநீர் வடிகால்களைச் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதும் மிகுந்த கண்டனத்திற்குரியது. இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டனர். இங்கு இந்த வக்கிரச் செயல்களால், மனிதாபிமானமற்ற செயல்களால் எல்லை மீறியது யார்? இலங்கை அரசின் இக்கொடுஞ்செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவ்வாறே, செப்டம்பர் 7-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 14 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மிகப் பெரிய அபராதத் தொகை விதிக்கப்பட்டதும், அதற்காகப் பல்வேறு அமைப்புகளும், கட்சித் தலைவர்களும், தமிழ்நாடு அரசும் குரல் கொடுத்ததும் நினைவிருக்கலாம்.

மேலும், செப்டம்பர் 10-ஆம் தேதி கோடியக் கரைக்குத் தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படைக் கப்பல், நாகை மீனவர்களின் படகின் மீது மோதி மீனவர்களைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்தனர். இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலத்திற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 109 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 52 நபர்கள் விடுவிக்கப்பட்ட சூழலில், 12 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 45 நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களில் 350 இந்திய மீனவர்களும், அவர்களின் 49 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கூடுதலாக இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  மீனவர் பிரச்சினையில் ஒன்றிய அரசு தலையிட்டு உடனடித் தீர்வுகாண வேண்டும் என்றும், இப்பிரச்சினையைத் தீர்க்க கூட்டுப் பணிக் குழுவைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் கேட்டுக்கொண்டபோதும், ஒன்றிய பா.ச.க. அரசு மௌனம் காப்பது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒன்றிய அரசிற்கு இருக்கும் அக்கறையற்ற நிலையையே காட்டுகிறது.

பா.ச.க. ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் இராமேஸ்வரம் மீனவர்களின் 360 படகுகள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலிருந்து கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தோல்வி அடைந்துவிட்டது.

இலங்கை அரசின் இந்த மனிதத்தன்மையற்ற செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தண்டனைத் தொகையைச் செலுத்தாவிட்டால் அதை நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லவா கொண்டு சென்றிருக்க வேண்டும். காவல்துறை அல்லது கடற்படை அதிகாரிகள் மீனவர்களை மொட்டையடித்து, கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் தண்டனை வழங்கும் அதிகாரத்தைக் கையிலெடுத்தது ஏன்? இலங்கை அரசின் அநாகரிகமான இச்செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. அவ்வாறே, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை மத்திய அரசு புறக்கணித்திருப்பதாகக் குற்றம் சாற்றுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்குக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பல கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் மீண்டும் மீண்டும் அவதிப்படும் இச்சூழலில், இத்தகைய தொடர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.  இலங்கை அரசின் எல்லைமீறும் இந்நிகழ்வுகளால் மீனவச் சமூகம் தொடர்ந்து உடல் அளவிலும், மனத்தளவிலும், பொருளாதார, வாழ்வாதார நிலையிலும், பெரும் இன்னல்களை அன்றாடம் சந்தித்து வருகின்றது. ஆகவே, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இப்பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகளால் ஒத்தக் குரல் எழுப்பப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அவ்வாறே, தமிழ்நாடு தேர்தலின் போதும், 2024 மக்களவைத் தேர்தலின் போதும் மோடி முழங்கிய கச்சத்தீவு மீட்பு என்னவாயிற்று? எனக் காத்திருக்கும் மீனவ மக்கள், ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் கச்சத்தீவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அதற்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனவும் எழுப்பும் கோரிக்கை ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்றடையும் என்றே நம்புவோம்.

Comment