வாழ்வு வளம் பெற -29
பயணம் முழுவதும் துணையாய்...
- Author எம்.ஏ. ஜோ, சே.ச. --
- Friday, 18 Oct, 2024
பல ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜூனியர் விகடன்’ வார இதழ் ‘காதல் படிக்கட்டுகள்’ என்ற தொடரை வெளியிட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் காதல் பற்றிய தன் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
‘குமுதம்’ இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி. ரங்கராஜன் தன் அனுபவங்களை விவரித்து, திருமணமாகி பல்லாண்டுகள் ஆன பிறகு தன் மனைவியின்மீது அவருக்கிருந்த காதலையும், அவர் மனைவிக்கு அவர் மீதிருந்த காதலையும் குறிப்பிட்டார்.
திருமணம் முடிந்து நாள்கள் செல்லச் செல்ல, கணவன்-மனைவி இருவரின் முகமும் மனமும் ஒரே மாதிரி ஆகிவிடுகிறது என்று அவர் நம்பினார். முகம் மாறுகிறதோ இல்லையோ, இருவரின் மனமும் ஒரே மாதிரி ஆகிவிடுவதற்கு ஆதாரமாக இதனைக் கூறினார்:
“எனக்கு யாரைப் பிடிக்கவில்லையோ, அது என் மனைவிக்கும் பிடிப்பதில்லை. யார்மீது எனக்கு ரொம்பப் பிரியமோ அவர்களிடம் அவளுக்கும் ரொம்பப் பிரியம். எனக்குக் கோபமூட்டும் விஷயம் அவளுக்கும் கோபமூட்டுகிறது. அவளுக்கு வருத்தம் ஏற்படுத்துகிற நிகழ்ச்சி எனக்கும் வருத்தம் ஏற்படுத்துகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கடுமையான ஆஸ்துமாவால் மருத்துவமனையில் மூன்று நாள்கள் படுத்திருந்தபோது, அவள் இரவும் பகலும் அருகிருந்து, பணிவிடை செய்து என்னைக் காப்பாற்றினாள். வீடு திரும்பியதும் ‘இந்தத் தடவையும் என்னைக் காப்பாற்றி விட்டாய்’ என்றேன். அதற்கு அவள், ‘உடம்பு சரியில்லாத உங்களை யார் காலிலும் நிற்கும்படி விட்டு விட்டுப் போக மாட்டேன். கடைசி வரை நானே கவனித்துக் கொண்டிருந்து உங்களை அனுப்பிய பிறகுதான் நான் போவேன்’ என்றாள்.…
‘காதல்’ என்ற சொல்லுக்கு உண்மையான மற்றோர் அர்த்தம் இருப்பதை அன்றைக்கு என் அறுபத்தியெட்டாவது வயதில் தெரிந்து கொண்டேன்” என்று எழுதுகிறார்.
இவர்களைப் போன்று திருமண வாழ்வில் வெற்றி பெறுபவர்களை ஓர் இரயிலில் பயணம் செய்பவர்களோடு ஒப்பிடலாம். அழகான வயல்கள், இருண்ட குகைகள், உயர்ந்த மலைகள், ஆழ்ந்த பள்ளத்தாக்குகள் என்று மாறி மாறிப் பயணிக்கிற இரயில் இது. வெவ்வேறு மாநிலங்களைத் தாண்டிப் போகிற இரயில்.
பயணத்திற்குத் துணையாய்த் தேர்ந்து கொண்ட நபரின் செயல்பாடுகள் இடத்திற்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டே இருப்பதைப் போலத் தோன்றும். சில வேளைகளில் இந்த நபருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே தெரியும் அழகான, இனிதான காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணம் போவது ஆனந்தமான அனுபவமாக இருக்கும்.
வேறு சில நேரங்களில் பசுமையாய் எதுவுமே இல்லாத பாழ்வெளியை, ஒளியே அண்டாத இருண்ட குகையை இந்த நபரோடு தாண்டிப் போவது எரிச்சலும் கவலையும் தரும் அனுபவமாக இருக்கும். இத்தகைய வேளைகளில் ‘இனியும் உன்னோடு சேர்ந்து பயணம் செய்ய நான் தயாராக இல்லை’ என்று சொல்லி, இரயிலிலிருந்து இறங்கி விடுவோர் திருமண வாழ்வில் தோற்று விடுகிறார்கள். ஆனால், இத்தகைய வேளைகளிலும் பொறுமையோடு ‘மீண்டும் காட்சிகள் மாறும், நம் உணர்வுகளும் மாறும்’ என்ற நம்பிக்கையோடு பயணத் துணையாய்த் தேர்ந்து கொண்டவரோடு பயணிப்பவர்களே சேர வேண்டிய இடத்திற்குப் போய் வெற்றி காண்கிறார்கள்.
பயணம் தொடங்கியபோது இருந்த கனவுகளெல்லாம் எப்போதோ மறைந்து விட்டாலும், ‘இவர்தான் எனக்குத் துணை; இவர் அருகில் இல்லாவிட்டால் எந்தப் பயணமும் எனக்கு இனிக்காது’ என்ற நிலைக்கு இருவரும் வந்து விடுகின்றனர்.
ஆனால், இது இறுதி நிலை. இந்நிலைக்கு யாரும் உடனே வந்துவிட இயலாது. இது ஐந்தாம் நிலை. இதற்கு முன் உள்ள நான்கு நிலைகளை ஒவ்வொன்றாய்த் தாண்டித்தான் இங்கே வர முடியும்.
முதல் நிலை, காதல்: மோகம் சார்ந்தது. காதலுக்கு உள்ள மயக்கம், கிறக்கம், மோகத்திற்கு உள்ள ஈர்ப்பு, ஆற்றல் யாவும் சேர்ந்து அடுத்தவரின் குறைகள் எதுவும் கண்ணில் படாமல் செய்து விடுகின்றன. திருமண வாழ்வில் இது வசீகரமான வசந்த காலம். நடப்பது கனவா, நனவா என்று கேட்குமளவுக்கு இந்நிலை கிளர்ச்சி தருகிறது. ஆனால், இந்நிலை வெகுகாலம் நீடிப்பதில்லை. ‘மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள்’ என்பார்கள்.
சில மாதங்களில் அல்லது ஓரிரண்டு ஆண்டுகளில் இந்நிலை முடிவுக்கு வந்துவிடுகிறது. பல காலமாய்த் தேக்கி வைத்திருந்த ஆசைகளெல்லாம் வடிந்துவிட, கற்பனைகள் நிஜத்தின் முன் கலைந்து விட, மெல்ல மெல்ல அலுப்பும் சலிப்பும் தொற்றிக் கொள்ள, எப்போதும் உடனிருக்கும் இந்த நபரின் குறைகள் யாவும் தெளிவாய்த் தெரியத் தொடங்குகின்றன.
இரண்டாம் நிலை, ஏமாற்றம்: ‘ஏமாந்து விட்டேனோ?’ என்ற வேதனையான கேள்வி மனத்தில் முளைக்கும் நிலை இது. முதல் நிலையில் இல்லாத எரிச்சல், கோபம், சண்டை, கவலை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகள் மனத்தை ஆக்கிரமிக்கும் நிலை இது.
‘எத்தனை தடவை சொன்னாலும் இந்த ஆள் திருந்துற மாதிரியே தெரியலியே!’ என்று பெண்ணும், ‘சின்னச் சின்ன காரியத்துக்கெல்லாம் ஏன் இவளுக்கு இவ்வளவு கோவம் வருது?’ என்று ஆணும் மௌனமாய்ப் புலம்பும் காலம் இது.
மூன்றாவது நிலை, போராட்டம்: என்ன போராட்டம்? மற்றவர்களின் குற்றங்குறைகளைப் பார்த்து ஏமாற்றம் அடைகிற இருவரும் என்ன செய்யத் தொடங்குவார்கள்? ‘நான் மட்டும் கவனமாய் இருந்து சில காரியங்களைச் செய்தால், இவளை என் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம். நான் நினைப்பதை எல்லாம் செய்கிற பெண்ணாய் இவளை மாற்றிவிடலாம்’ என்று ஆண் போராடத் தொடங்குகிறான். ‘திருமணத்திற்கு முன்பு காதலித்தபோது அல்லது திருமணம் முடிந்ததும் வந்த தேனிலவின் போது எப்படி இருந்தாரோ, எப்படி என் சின்னச் சின்ன விருப்பங்களையும் மதித்து நடந்து கொண்டாரோ, அதேபோல இவரை மறுபடியும் மாற்றிவிட முடியும். இவரை என் வழிக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்’ என்று பெண்ணும் போராடத் தொடங்குகிறாள்.
‘இருவரில் யாருக்கு இங்கே அதிகாரம்? யார் சொல்வது இங்கே சட்டம்? நீயா, நானா?’ என்ற போராட்டம் தீவிரமாய் நடப்பது இந்நிலையில்தான். தங்களது அதிகாரத்தை நிலைநாட்ட இருவரும் வெவ்வேறு உத்திகளைக் கையாளும் கட்டம் இது. அடுத்தவரின் மகிழ்ச்சி பற்றிக் கவலைப்படாமல், தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதே இருவருக்கும் இலக்காகி விடுகிற நிலை.
திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் வரும் இந்நிலையின் போதுதான் மேலை நாடுகளில் அதிகமான விவாகரத்துகள் நிகழ்வதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடுத்தவரைத் தன் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயன்று, அது முடியாது என்று புரிந்ததும் ‘போதும், விடு கையை!’ என்று அடுத்தவரின் கையை உதறிவிட்டு இரயிலிலிருந்து இறங்கி விடுவதுதானே மணமுறிவு? போட்டியும் போராட்டமும் நிறைந்த இம்மூன்றாம் நிலை மிகவும் ஆபத்தான நிலை என்பதால், இப்படி ஒரு கட்டம் வரும் என்பதை முன்பே ஒருவர் அறிந்திருந்தால் அதற்குத் தயாராக இருக்க முடியும்.
‘To be forewarned is to be forearmed’ என்பர். ஆபத்து வரும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தால், ஆயுதங்கள் தயாரித்துக் காத்திருக்கலாம். இதை அறியாதவர்களே இரயிலிலிருந்து இறங்கி விடுகின்றனர். இணையர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? ‘இது நிகழக்கூடாத ஒன்றல்ல; நிகழ்ந்தே தீர வேண்டியது’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், இந்நிலையிலும் பொறுமையாய், நம்பிக்கையோடு இருப்பவர்கள் அடுத்த நிலைக்கு வந்து சேர்கின்றனர். ‘என் இணையிடம் சில குறைகள் இருந்தாலும், எதுவும் அச்சுறுத்தும் அளவுக்குப் பெரிய குறை இல்லை. எனவே, இவை இவரிடம் இருந்தால் என்ன? நான் மட்டும் குறையே இல்லாத நபரா? என் குறைகள் அவர் கண்ணுக்கல்லவா தெரியும். எனவே, இந்தக் குறைகள் இருந்து விட்டுப் போகட்டுமே! மற்ற நல்ல குணங்களைப் பார்த்து மகிழ்ந்து, எனக்குப் பிடிக்காதவற்றைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்து கொள்வேன். எரிந்து விழுவதற்குப் பதிலாகச் சிரித்துக்கொள்வேன்’ என்று இருவரும் தெளிவு பெறும் நிலை.
தங்களின் அனுபவங்கள் யாவற்றையும் சிந்தனைக்கு உட்படுத்தும் தம்பதியருக்கு இந்நிலையில் மற்றோர் இரகசியமும் புரிகிறது. ‘எப்போதும் நெருங்கியிருந்தால் மகிழ்ச்சி இல்லை. சலிப்பே தோன்றும். எனவே, அவ்வப்போது விலகி இருப்பதும் அவசியம். சில நாள்கள் நெருங்கியிருந்தால், சில நாள்கள் விலகி இருப்போம். எனவே, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சில நாள்கள் பிரிந்திருப்போம்’ என்று இவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இந்தத் தற்காலிகப் பிரிவு பிரியத்தை வளர்க்கிறது எனச் சொல்லும் ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது: ‘Absence makes the heart grow fonder.’
ஐந்தாவது நிலைக்கு வந்து திருமண வாழ்வில் வெற்றி வெறும் இணையருக்கு உலகில் வேறெதுவும் தராத ஒரு நிறைவு கைகூடுகிறது. ‘என் நிறைகளை மட்டுமல்ல, என் குறைகளையும் நன்றாய் அறிந்த பிறகும் நிறை-குறைகளோடு என்னை ஏற்றுக்கொண்டு, அக்கறையோடு என்னை அன்பு செய்யும் ஓர் உயிர் இருக்கிறது. இது எத்துணை பெருங்கொடை!’ என்ற உணர்வுக்கு இணையானது ஒன்றுமில்லை.
‘இவ்வளவு தூரம் உங்களோடு / உன்னோடு பயணித்து விட்டேன். இனி நீங்கள் இல்லாத / நீ இல்லாத பயணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது’ என்று இணையர் இருவரும் நினைக்கும் நிலை இது. இந்த நிலையே திருமண வாழ்வின் வெற்றி!
(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்.)
Comment