மாற்றம் தேடும் மனம்!
‘நம் வாழ்வு’ வார இதழ் நடத்திய விடுதலைப் பெருவிழா சிறப்புப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சிறுகதை:
கதிரவன் தனது வெளிச்சக் கதிர்களை, உலகு விழிக்கக் கொட்டிக் கொண்டிருந்த வேளை, அடுப்பங்கரையிலிருந்து அனிதா மிக வேகமாக வந்து, முகச்சவரம் செய்து கொண்டிருந்த தனது கணவன் ஆன்ட்ரூஸைப் பார்த்து, “என்னங்க, இன்னைக்காவது நீங்க குடிக்காம இருக்கணும்... ஆமா! வருசத்தில 365 நாளும் குடியோ குடி என்று குடித்துவிட்டு, கலாட்டா பண்ணீங்க! இன்னைக்கு நம்ம தாய்நாட்டை அடிமைத் தனத்திலிருந்து மீட்ட எத்தனையோ தியாகிகள் துன்பப்பட்டு, துயரப்பட்டு, தூக்கு மேடையேறி நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த நாள்! ‘தாய் நாடு’ என்கிறோம். அந்தத் தாய்க்கு மரியாதை செலுத்தணும்! அதனாலதான் சொல்றேன், புரியுதா?” என்று மடமடவென பேசித் தள்ளினாள் அனிதா!
“ஏய்... ஏய்... நிறுத்து உன் பிரசங்கத்த! காலைல... நான் என்னமோ ஒரு நல்ல குடிமகனா இருக்கணும்னுதான் ஆசப்படறேன். ஆனா, மூணு நாளைக்கு முன்னாடியே சுதந்திரத்த, சுதந்திரமா கொண்டாடணும்னு என் நண்பர்கள் சரக்க வாங்கி சந்தடி பண்ணாம பத்திரப்படுத்திடானுங்கல்ல?”
“ஐயோ... என்னதான் குடியரசுக்கும், சுதந்திர தின விழாவுக்கும் கடையை மூடி வெச்சாலும், உங்கள மாதிரி ஆளுங்க... ம்... ஒண்ணும் சொல்றதுக்கில்ல!”
தூரத்தில் இருந்த பள்ளிக்கூடத்தில் ஸ்பீக்கர் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்குப் போடப்பட்டது. அதிலே ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன இலாபம்?’ என்று பாடிக்கொண்டிருந்தது.
சற்று நேரத்திற்குப் பின்பு அனிதாவின் அலைபேசி அலறியது!
“ஹலோ யாருங்க? நான் அனிதாதான் பேசறேன்...”
மறு முனையிலிருந்தவர் “அனிதா அம்மா நீங்கதான் பாடணும்? சரியா?”
“நான் தயாரா இருக்கேன்! நேரமிருந்தா பாரதிதாசன் பாடலும் பாடுவேன்... சரியா?”
“சரி... சரி ரொம்ப மகிழ்ச்சி! வாங்க, வாங்க... சரிங்கம்மா, ஏழு மணிக்குச் சரியா வந்திடுங்க! கொடியேற்றிய உடனே ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாடல் முடிந்ததும் உங்க பாட்டுத்தான்!”
“ம்... கிளம்பிட்டே இருக்கேன்!”
பரபரப்பாக சமையல் வேலைகளை முடித்து விட்டு, குளியலறைக்குச் சென்றாள்.
‘ஆன்ட்ரூஸ், ஆன்ரூட்ஸ்...’ நண்பன் அந்தோணி, ஆன்ட்ரூஸை அழைத்துக் கொண்டே வந்தான்.
“வாடா, வாடா... இப்பதான் நெனச்சிக்கிட்டேயிருந்தேன். வந்திட்ட! உட்காரு” என்றான் ஆன்ட்ரூஸ் அந்தோணியிடம்!
“என் பொண்டாட்டி கொடியேத்தற நிகழ்ச்சிக்குப் போறா... அப்புறம் என்ன? நம்ம கொண்டாட்டம்தான்! சுதந்திரமா கொண்டாடுவோம்” என்று ஆன்ட்ரூஸ் கூற, இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
“என்னங்க,… நான் வரேன். வீட்ட பாத்துக்கங்க. டைம் ஆயிடுச்சி!”
“ம்... சீக்கிரமா கிளம்பு... கிளம்பு...” என்றான் ஆன்ட்ரூஸ்.
அனிதா சென்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஆன்ட்ரூஸ் அனிதா சென்ற பள்ளியின் வாசலிலே போதையுடன் வந்து நின்றான். பள்ளி ஆயாவிடம் “அந்த அனிதா சிறுக்கி எங்க இருக்கா? கூப்பிடு... கூப்பிடு...”… என்று கூறினான்.
உடனே அந்த ஆயா மேல் மாடியில் இருக்கும் அனிதாவிடம் சென்று கூறுவதற்காகப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தாள். “அனிதாம்மா, உன் புருஷனா அவரு? கேட்ல வந்து ‘அந்த அனிதா சிறுக்கிய கூப்பிடு’ன்னு சொல்றாரு. நல்லா தண்ணி போட்டிருக்காருமா?” என்றாள் பரபரப்புடன்.
“ம்... நல்லவங்களுக்கு ஏன்தான் இப்படி அமையுதோ? பாவம் இந்தப் பொண்ணு. நல்ல பொண்ணு! என் மருமகனும் இந்தக் கதிதானே... கடவுளே!” என்று புலம்பிக்கொண்டு அனிதா பின்னாலேயே தொடர்ந்தாள் பள்ளியின் ஆயா.
“என்னங்க, என்ன இது?” தன் கணவனைப் பார்த்து வினவினாள் அனிதா.
அப்போது குரங்குடன் நின்று கொண்டிருந்த குரங்காட்டி, “அம்மா... நானும், என் குரங்கும் பசியா இருக்கோம்மா, எங்கள நாலு வீட்டுக்குப் போகவுடாம உன் வூட்டுக்காரன் குரங்குக் குட்டி வேணும், என் பையன் மாறுவேசத்தில் கலந்துக்கிறான்னு சொன்னாருமா? துட்டு இருந்தா குடுமா... நாங்க போறோம்...” என்று கெஞ்சினான்.
போதையில் மயக்க நிலையிலிருந்த தனது கணவரை முறைத்துவிட்டு, தனது பர்சைத் தேட அதிலே 20 ரூபாய்தான் இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த ஆயாவிடம், “ஆயா, ஒரு நூறு ரூபா தாங்க” என்று கேட்க, ஆயாவும் தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டைத் தந்தாள். நூறு ரூபாயைப் பெற்றுக்கொண்ட குரங்காட்டி ஸ்கூல் கேட்டை விட்டு, குரங்குடன் வெளியேறினான். ஆன்ட்ரூஸ் அங்கிருந்து சைக்கிளைத் தள்ளாடித் தள்ளாடி ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.
கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றிருந்த அனிதாவைப் பார்த்து, “அழாதம்மா! நல்ல வேள, ஸ்கூல் ஹெட்மாஸ்டர் கீழே இல்ல, கொடிய ஏத்திட்டு மேல் மாடில ப்ரோகிராம் வச்சது நல்லதாப் போச்சு! இல்லனா எல்லா டீச்சர், வாத்தியார்களும் உங்க வூட்டுக்காரரைப் பார்க்க, உனக்கு எவ்வளவு அவமானம்?” என்று ஆயா கூறி முடிப்பதற்குள், அனிதா கைக்குட்டையால் மூக்கைத் துடைத்தாள். கண்ணீர் பெருக்கெடுக்க கண்கள் சிவந்திருந்தன.
“என் புள்ள வந்தா, அம்மா வூட்டுக்குப் போய்ட்டாங்க. உன்ன வீட்டுக்கு வரச் சொன்னாங்கன்னு சொல்லிடுங்க ஆயா” என்று கூறி விட்டு கிளம்பினாள் அனிதா. வீட்டிற்கு வந்த அடுத்த பதினைந்து நிமிடங்களில் கோபமாகக் கணவனைத் திட்டித் தீர்த்தாள்.
“இது உங்களுக்கே நல்லா இருக்கா? குழந்தை படிக்கிற ஸ்கூல்ல, அவனுக்கும் எனக்கும் என்ன மரியாதை? ஒரு டீச்சர் தூரத்தில் நின்று நடந்தத பார்த்துக் கொண்டுதானிருந்தாங்க. நான் அவன குடுகுடுப்பைக்காரன் வேடம் போட்டு போட்டியில் கலந்துக்கச் சொல்லிவிட்டு விட்டு வர்றதுக்குள்ள உண்மையான குரங்கப் பிடிச்சி, கொழந்தய நடிக்கச் சொன்னா எப்படி நடிப்பான்? எங்க மானத்த வாங்கறீங்களே. கல்யாணம் ஆகி ஏழு வருசம் ஆவுது. நானும் உங்கள தலையால அடிச்சிக்கினு கத்திக் கத்தி ஓய்ஞ்சி போறேன். இந்தப் பாழாப்போன குடிய விட மாட்டீங்களா? என்ன விட்டாலும் விடுவீங்க! ஆனா குடிய விடமாட்டீங்கல்ல? இந்தச் சென்மத்தில் நீங்க திருந்த மாட்டீங்க. நல்ல கனி கொடாத மரத்துக்கு அடியில் ஆண்டவரு கோடாரிய வெச்சிடுவாரு. இந்த வருசம் இருக்கட்டும், இந்த வருஷம் இருக்கட்டும்னு வருஷம்தான் மாறுது! ஆனா, நீங்க மாறலையே!”
தூரத்தில் விழா முடிந்து, ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலிக்கிறது. ‘நெஞ்சு பொறுக்குதில்லையே... நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்...’ பாரதியாரின் பாடல் காற்றில்!
“என் புருஷன் மனம் மாறுவானா? எந்த நாள் அந்த நாள்?” என்று மனத்தில் புழுங்கிக் கொண்டி ருந்தாள் அனிதா கணவனின் மனமாற்றத்திற்காக!
Comment