No icon

கால் ரூபா ஆசை!

வாசலில் கையைப் பின்னால் கட்டிக் கொண்டு இடமும், வலமுமாய்த் திரும்பி மாணவர்களின் வருகையைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசிரியர் ஜான். அவர் சாதாரணமாகப் பார்ப்பது கோபத்தில் முறைப்பது போலவே இருக்கும். கோபத்தில் முறைத்தாலோ அவ்வளவுதான்! கேப்டன் விஜயகாந்த் போலவே நெற்றிப் புருவம் வளைப்பதும், கோபத்தில் கண்கள் சிவப்பதும், நாக்கை மடித்து மிரட்டுவதும் அவரைக் ‘கேப்டன்’ என்று மாணவர்களுக்குள் பெயர் சூட்டி அழைக்க வைத்தது. அவர் கைகளுக்குள் மறைத்து வைத்திருக்கும் குச்சியில் அடி வாங்கினால், ஒரு வாரத்திற்கு வலி இருக்கும். அவர் அவ்வளவு கண்டிப்போடு இருந்தாலும், மாணவர்களுக்கு அவர்மீது பயமும், மரியாதையும்தான் இருக்குமேயொழிய, கோபமோ, வன்மமோ வரவே வராது.

பள்ளியின் வாசலில் ஜான் வாத்தியார் நிற்பதைத் தூரத்தில் பார்த்ததும் மாணவப் பிள்ளைகளின் நடை ஓட்டமாய் மாறியது. இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளி மாணவத் தலைவன் பாலுவின் குரல் ஓங்கி ஒலித்தது. எந்தச் சலசலப்பும், அசைவுமின்றி மாணவ-மாணவியர் மாணவத் தலைவன் கட்டளைக்காகச் சிலை போல் நின்றார்கள். தலைமையாசிரியை அழகம்மை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதும், அவரவர் வகுப்புகளை நோக்கி மாணவர் கூட்டம் தொடர்வண்டிகள் போல பிரிந்து சென்றன.

ஆசிரியர்கள் கருப்பசாமி, வில்சன், ஜான் மாணவர்கள் வரிசையையும், ஆசிரியைகள் அழகம்மை, இலட்சுமி, மகேஸ்வரி மாணவியர்கள் வரிசையையும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். சட்டையின் மேல் பொத்தான் எப்போது கழன்று விழுந்ததோ தெரியவில்லை; அப்போதுதான் கவனித்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மிக்கேல். இடுப்புக் கயிறைத் தடவிப் பார்த்தான். அங்கு ஊக்கு இல்லை. வரிசையில் செல்லும்போது யாரிடமும் கேட்கவும் வாய்ப்பில்லை. ஆசிரியர் ஜான் அருகில் வரிசை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு அதிகமாகி காதில் ‘டம் டம்’மென்று டமாரம் அடித்தது. பதற்றத்திலும், காலையில் சாப்பிடாத பலவீனத்தாலும் அப்படியே மயங்கிச் சரிந்தான் மிக்கேல். யார் யாரோ கூச்சலிடுவது போலவும், இரண்டு மூன்று பேர் தூக்கிச் செல்வது போலவும் இருந்தது. அதற்கு மேல் எதுவும் நினைவில்லை. எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தானென்று அவனுக்குத் தெரியவில்லை. மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்கும்போது, ஆசிரியர் வில்சன் விசிறிக் கொண் டிருந்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவை ஜான் வாத்தியார் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“பயல சாப்பிட வச்சு அனுப்பி வைக்க வேண்டியதுதானமா? பய சாப்பிட்டானா, இல்லயானுகூட பார்க்காம வீட்ல என்னதான் பண்றீக?” என்று அதட்டிக் கொண்டிருந்தார். அடுத்து தன்னிடம்தான் வருவார் என்று தெரிந்ததும் தலை சுற்றி மறுபடியும் மயக்கம் வருவது போலிருந்தது. ஆசிரியை இலட்சுமி மதியம் சாப்பிட, தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். தலைமையாசிரியை அழைத்ததாகத் தகவல் வந்ததும் ஆசிரியர் ஜான் அங்கிருந்து சென் றார். இரண்டு வாய் சாப்பிட்ட மிக்கேல் “போதும் டீச்சர், வயிறு நெறஞ்சிடுச்சு. நா வகுப்புக்குப் போறேன். அம்மா... வர்றேன்மா...” என்று விரைந்து ஓடியவன் சுவரில் மோதிய பந்தைப்போல திரும்ப ஓடிவந்து “நன்றிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டுப் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் மறுபடி ஓடினான்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை மதியம் சத்துணவு சாப்பிடாமல், பக்கத்திலிருந்த வில்சன் வாத்தியார் வீட்டில் சிறுவர் மலர் படிப்பதற்காகக் காயாம்பு, சித்திக், மிக்கேல் மூவரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். சிறுவர் மலரைப் படிப்பதற்கு முதலில் யார் கைப்பற்றுவது எனும் போட்டியில் அவர்கள் ஓடும் ஓட்டத்தில் உசேன் போல்ட்டும் கூட தோற்றுப்போய் விடுவார். இது எப்படியோ ஜான் வாத்தியாருக்குத் தெரிந்து, வழக்கமாக வரும் குறுக்குப் பாதையில் நின்று கொண்டிருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து, முதல் மணி ஒலித்ததும் சித்திக், காயாம்பு இருவரும் “டேய்... மணியடிச்சிடுச்சு... பொக்குனு ஓடியா...” என்று கத்தியபடி சிதறி ஓடினார்கள். கடைசி ஒரு பக்கம் மிச்சமிருந்தது. மீதியை வாசிக்காமல் விட்டுச் செல்ல மனமில்லை.

“தோ வர்றேன்... நீங்க போங்க...” என்றவன், அவசர அவசரமாய் வாசித்தான். அதற்குள் இரண்டாவது மணியும் ஒலிக்க, குறுக்குப் பாதையில் ஓடி வந்தவன் திருப்பத்தில் நின்று கொண்டிருந்த ஜான் வாத்தியார் மேல் மோதப்போய் தடுமாறி விழுந்தான்.

“ஏதும் தப்பு செஞ்சியா? ஏன் கை, காலெல்லாம் நடுங்குது? நாக்கு உளறுது?” என்று அதட்டியதும் தேம்பித் தேம்பி அழுதபடியே நடந்ததைச் சொன்னான்.

“இப்படிச் சாப்பிடாமக் கிடந்து மறுபடி மயக்கம் போட்டு எங்கேயாவது போய், எங்கிட்டாவது விழுந்து கிடந்தா, பெத்தவுகளுக்கு யாருடா பதில் சொல்றது?” அதட்டியவரிடம், “மன்னிச்சிடுங்க சார்... இனிமே சாப்பிடுறேன் சார்...” மன்னிப்பு கேட்டு உறுதி சொன்னான்.

ஆசிரியர் வராத பாடவேளை அன்று. எட்டாம் வகுப்பிலிருந்து ஓர் அண்ணன், “மிக்கேல் யாருடா தம்பி? ஜான் சார் கையோட கூட்டி வரச் சொன்னார்” என்றதும், எதற்கு வரச் சொல்கிறாரோ என்று பயந்தபடி எழுந்தான் மிக்கேல். பக்கத்திலிருந்த பசங்க “போச்சு... கேப்டன் சார் கிட்ட பய எதுக்கோ வசமா மாட்டிக்கிட்டான்... இன்னிக்கு” என்று பேசி வயிற்றில் புளி கரைக்க வைத்தார்கள்.

தயங்கித் தயங்கித் திருவிழாவிற்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்கிடாவைப் போல மிரட்சியோடு எட்டாம் வகுப்பிற்குள் நுழைந்தான்.

“ஏண்டா... அசஞ்சு அசஞ்சு வர்ற? வேகமா வர முடியாதா?” கையில் கம்புடன் முறைத்தபடி அதட்டியதும், ஓடிப்போய் அவர் பக்கத்தில் சற்றுத்தள்ளி நின்று அடி வாங்குவதற்குக் கையை நீட்டினான்.

நீட்டியவன் கையில், தான் வைத்திருந்த எட்டாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தை விரித்து நீட்டி,  “வாசி...” என்றார்.

“ச..சார்” என்று தயங்கினான்.

“புடிடா... வாசி...” என்று அதட்டியதும், வாங்கிக்கொண்டு ‘கடகட’ வென்று இரண்டு பக்கங்களைத் தாண்டி வாசித்துக் கொண்டிருந்தான்.

“போதும்...” என்றதும் ‘சட்’ டென்று நிறுத்தினான். கண்கள் கலங்கியிருந்தன. உடம்பு சில்லிட்டுப் போயிருந்தது. முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

“எல்லாரும் கைதட்டுங்க! அஞ்சாவது படிக்குற பய எப்படி அழகா, சரளமா ஆங்கிலம் வாசிக்கறான்னு பாருங்க... வெரிகுட்!… கீப் இட் அப்...” என்றதும் மிக்கேலுக்கு இதயத் துடிப்பு இன்னும் அதிகமானது.

சட்டைப் பையைத் துழாவி, ஆசை சாக்லேட்டை எடுத்து “இந்தா வச்சுக்க.. இனிமே வாரா வாரம் சிறுவர் மலர் தேடி அலைய வேண்டாம். வெள்ளிக்கிழமை காலையில நான் உன்னோட வகுப்புக்குக் கொடுத்தனுப்புறேன்...” என்றதும், ஆனந்தக் கண்ணீர் கன்னங்களில் வழிந்தோடியது.

அன்று கால்கள் என்னவோ தரையிலிருந்தாலும், றெக்க கட்டிப் பறப்பதுபோல் இருந்தது. இரவு முழுக்க உறக்கம் வரவில்லை. ஆசிரியர் ஜான் கொடுத்த ஆசை சாக்லேட்டை இலண்டியன் திரியைத் தூண்டி விட்டு அடிக்கடி எழுந்து ஆசை ஆசையாய்த் தடவிப் பார்த்து முத்தம் கொடுத்துக் கொண்டான். மிட்டாயைப் பிரித்துத் தின்ன மனமில்லாமல், பத்திரமாக வைத்து கடைசியில் எறும்புகள் தின்று விட்டன. இருந்தாலும், சாக்லேட் பேப்பரைக் கீழே போடாமல் பத்திரப்படுத்திக் கொண்டான்.

ஆண்டுகள் பல உருண்டோட அதற்குப் பின்னால் பெற்ற பரிசுகளை, விருதுகளை வீட்டில் அடுக்கி வைக்க இடமில்லை. ஆனாலும், இன்று வரை அவனுக்குப் பிடித்த உயரிய பரிசு அந்த ஆசை சாக்லேட்தான். இன்று ஆசிரியர் ஜான் படித்த பள்ளியில் மிக்கேல் ஆசிரியராக வேலை பார்க்கிறான். எத்தனையோ மிக்கேல்களைப் பாராட்டி, வாழ்க்கையில் ஏற்றி உயர்த்திவிட அவனது மனத்தில், மாற்றங்களைத் தேடி, ஏற்றங்களை நாடி இன்றும் தீபமாய் எரிந்து கொண்டுதானிருக்கிறது அந்தக் கால்ரூபா ‘ஆசை’.

Comment