No icon

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (28-04-2024)

திப 9:26-31; 1யோவா 3:18-24; யோவா 15:1-8

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுக்குள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதையெல்லாம் நான் உங்களுக்குத் தருவேன்என்ற வாக்குறுதியை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்குத் தருகிறார். அதாவது, நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கும் போது நாம் கேட்பதையெல்லாம் ஆண்டவர் நமக்குக் கொடுப்பார். நம் முதல் பெற்றோர் ஆதாமும், ஏவாளும் ஆண்டவரோடு, அவரது அருள் நிலையில் இணைந்திருந்தபோது அவர்களது வாழ்வு விண்ணக வாழ்வைப் போன்று இருந்தது. ஆனால், எப்போது பாவம் செய்தார்களோ, அப்போது ஆண்டவரின் அருள் நிலையிலிருந்து பிரிக்கப்பட்டு புறம்பே தள்ளப்பட்டார்கள். ஆண்டவர் இயேசுவின் திருத்தூதர்களும், புனிதர்களும் ஆண்டவரின் வார்த்தைப்படி வாழ்ந்து, ஆண்டவரோடு இணைந்திருந்தார்கள். எனவே, அவர்கள் வழியாக நாம் மன்றாடிக் கேட்பதையெல்லாம் ஆண்டவர் நமக்குத் தந்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கிறபோது நமது வாழ்வும் விண்ணக வாழ்வைப் போன்று இருக்கும் என்பதை உள்ளத்தில் இருத்தியவர்களாய் இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

பவுலடியார் மற்ற சீடர்களோடு இணைந்து இறைப்பணி செய்ய விரும்புகிறார். அவரைக் கண்டு மற்ற சீடர்கள் அஞ்சினாலும், ஆண்டவரின் அருள்கரம் அவரை வழிநடத்தியது என்றுரைக்கும் இம்முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளையும், மற்றவரையும் அன்பு செய்ய வேண்டும் என்னும் கட்டளையை நாம் கடைப்பிடிக்கிற போது, நாம் கடவுளோடும், கடவுள் நம்மோடும் இணைந்திருக்கிறார் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

அனைத்துலகோரின் ஆண்டவரே! உமது திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது வார்த்தையின்படி வாழ்ந்து, உமது சீடர்களாய் மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அனைத்தையும் ஆள்பவரே! மக்களை நல்வழிப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கும் நாட்டுத் தலைவர்கள் உமது விருப்பப்படி, உமது கட்டளைப்படி நல்லாட்சி புரிந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

அருள் வரங்களைப் பொழிபவரே! எங்கள் குடும்பங்களில், பங்கில் நாங்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, ஒரே குடும்பமாக இணைந்திருந்து நற்கனி தரும் இறைமக்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் விண்ணகத் தந்தையே! எங்கள் பிள்ளைகள், எம் பங்கு இளையோர் அனுதினமும் உமது வார்த்தையை வாசித்து, அதன்படி வாழக் கூடியவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment