No icon

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு (14-4-2024)

திபணி 3:13-15,17-19 1யோவான் 2:1-5; லூக்கா 24: 35-48

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் மூன்றாவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பிற்கு நீங்கள்தான் சாட்சிகள் என்று கூறி ஆண்டவர் இயேசு கிறிஸ்து தமது சீடர்களின் மனக்கண்களைத் திறக்கிறார். உயிர்த்த ஆண்டவரைக் கண்டபோது சீடர்கள் அனைவரும் அச்சத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். அவரை ஓர் ஆவியைக் காண்பது போல காண்கிறார்கள். அவர் தமது பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பைப் பற்றிக் கூறியதைச் சீடர்கள் நம்பவில்லை. அதனால் அவற்றை அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவேதான் உயிர்த்த ஆண்டவரை ஆவியாகக் கருதினார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களது மனக்கண்களைத் திறந்தபோது ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பிற்குச் சாட்சிகளாக மாறினார்கள். சீடர்கள் பெற்றுக்கொண்ட அதே நம்பிக்கையை நாமும் பெற்றிருக்கிறோம். அந்த நம்பிக்கையை அனுதினமும் திருப்பலி கொண்டாட்டத்தில் அறிக்கையிடுகிறோம். எனவே, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிற்கு நாமும், நமது வாழ்வும் சாட்சியாக அமைந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

‘ஆண்டவர் இயேசு பாடுகள் பட்டு இறந்தார். இறந்த அவரைக் கல்லறையில் இருந்து தந்தை கடவுள் உயிர்ப்பித்தார் என்பதற்கு நாங்களே சாட்சிகள்’ என்றுரைக்கும் பேதுருவின் குரலை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் பாவம் செய்தபோது நமக்காகத் தந்தை கடவுளிடம் பரிந்து பேசி நம்மை மீட்டவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. எனவே, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

 ٭ அனைத்துலகோரின் கடவுளே! உம் திரு அவையானது மொழி, இனம், சாதி, மதம் கடந்து, எல்லா மக்களுக்கும் உமது வார்த்தையை அறிவித்து, உமது பாடுகளின், உயிர்ப்பின் சாட்சிகளாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

٭ ஞாலத்தைக் காப்பவரே! எம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மொழி மற்றும் மத வெறுப்பு வாக்குவாதங்கள் குறைந்து, அனைவரும் சகோதர உள்ளத்தோடு ஒற்றுமையாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

٭ வாழ்வை வழங்குபவரே! எங்கள் பங்குத்தந்தை வழியாகவும், பெரியவர்கள் வழியாகவும் நீர் எங்களுக்கு அளிக்கும் அறிவுரைகளுக்கு நாங்கள் கவனமுடன் செவிமடுத்து, உமக்கு உகந்த உயிர்ப்பின் மக்களாக வாழ வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

٭ எங்கள் பரமத் தந்தையே! இன்றும் உமது திருமகனிலும், அவரது வார்த்தையிலும் நம்பிக்கை இல்லாமல் உம்மை விட்டுப் பிரிந்து வாழும் மக்களுக்கு, நீர் உறுதியான மனத்திடன் தந்து, உமது மந்தையில் சேர்த்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment