No icon

பொதுக்காலம் 23 -ஆம் ஞாயிறு (08-09-2024)

எசாயா 35:4-7; யாக்கோபு 2:1-5; மாற்கு 7:31-37

திருப்பலி முன்னுரை

இயேசுவை அடைய நாம் பயணிக்க வேண்டிய பாதை அன்னை மரியாஎன்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று நம் அன்னை மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். பெண் குழந்தைகளின் தினத்தையும் அனுசரிக்கின்றோம். ‘தாயின்றிச் சேயில்லைஎன்பது முன்னோர் மொழி. இறைவனின் படைக்கும் தொழிலில் பங்கேற்பவர் தாய் மட்டும்தான். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். இவ்வுலகம் இயங்குவதும் இருப்பதும் தாயின் அன்பால்தான். தாயின் அன்பு தனிப்பட்ட அன்பு கிடையாது. அனைவரையும் அன்பு செய்யும் பொதுநல அன்பு. வயதான காலத்தில் கருவுற இயலாத எலிசபெத்தைச் சந்தித்து, அவருக்குப் பணிவிடை செய்தது தாயின் அன்பு. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் இல்லை என்றதும், தானாகச் சென்று உதவி செய்ய தன் அன்பு மகனுக்கு அழைப்பு விடுத்தது தாயின் அன்பு. இறுதியாக, இவ்வுலகம் வாழ்வு பெற, மீட்படைய தன் மகனையே அர்ப்பணித்தது தாயன்பின் உச்சக்கட்டம். இன்றைய நற்செய்தியில் இயேசு தொடுதல் வழியாகக் காது கேளாதவருக்குக் காது கேட்கும் திறனைக் கொடுக்கிறார். தொடுதல் வழியாக உரிமையும் பாதுகாப்பும் அன்பும் கடத்தப்படுகின்றது. அன்னையின் பிறந்த நாளில் அன்னையைப் போல பிறரன்புச் செயல்பாடுகளில் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

தொடர் தோல்வி, ஏமாற்றம், சுமக்க முடியாத சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தையாகவும், நம்பிக்கையூட்டும் வார்த்தையாகவும் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. அரசர்களின் முறையற்ற அரசியல், தவறான வழிகாட்டுதல், அசிரியாவின் அச்சுறுத்தல் காரணமாக வட இஸ்ரயேல் அழிவின் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, ‘இறைவனின் நீதியின் முகம், மக்களை மீட்கும் தன்மை கொண்டது; எனவே, மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உலகம் தோன்றிய காலம்தொட்டு ஏழை- பணக்காரன் என்ற வேறுபாடு காட்டப்படுகின்றது. உலகின் பார்வை வேறு, ஆண்டவரின் பார்வை வேறு என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கின்றது. உலகின் பார்வையில் ஏழைகளாக இருப்பவர்கள், ஆண்டவரின் பார்வையில் செல்வர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கொண்டிருந்த நம் பிக்கை காட்டப்படுகிறது. நம்முடைய பார்வையும், இறைவனின் பார்வையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. அன்பையும் பண்பையும் தரும் இறைவா! எம்மோடு வாழும் சக மனிதர்களை அன்பு செய்து, அவர்களின் இன்ப, துன்பத் தருணங்களில் பங்குகொண்டு, இறை உறவில் நாங்கள் வளர தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆள்பார்த்துச் செயல்படாத உன்னதமான இறைவா! நாங்கள் வாழும் சமூகத்தில் இருக்கும் பலவிதமான பிரிவினைகளை அகற்றி, குறிப்பாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாமல் மனிதனை மனிதத்தோடு மதிக்கும் பண்பைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பெண்மை வாழ்வின் மேன்மை என்று வாழ்ந்த ஆண்டவரே, எம் குடும்பத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்காக மன்றாடுகிறோம். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, மதிப்புக் கொடுத்து வாழ அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. மாற்றுத்திறனாளிகளைக் குணப்படுத்திய அன்பு இறைவா! எங்களோடு வாழும் மாற்றுத்திறனாளிகளைப் பிரிவினை பார்க்காமல், கேலி கிண்டல் செய்யாமல் அவர்களோடு அன்பாக வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment