No icon

மயிலாடுதுறை மாவட்டம்

"தரங்கம்பாடியில் சீகன்பால்கு மணிமண்டபம்"

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழுக்குத் தொண்டாற்றிய சீகன்பால்கு வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் ஒளி-ஒலி நாடகம் அண்மையில் நடந்தது. நாடகத்தைத் தொடக்கி வைத்த தி.மு.க-வைச் சேர்ந்த பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், “தரங்கம்பாடியில் சீகன்பால்கு மணிமண்டபம் விரைவில் அமையும்” என உறுதியளித்தார்.

ஜெர்மனியைச் சேர்ந்த சீகன்பால்கு சமயப் பணி செய்ய டென்மார்க் அரசர் 4ஆம் பிரடரிக்காவால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக் புளுசோவுடன் கோபன்ஹேகனிலிருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார் சீகன்பால்கு. 222 நாள்கள் கப்பல் பயணத்திற்குப் பின் 09.07.1706 அன்று தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். அவர் தரங்கம்பாடி வந்ததன் நினைவாக நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு எட்டு மாதங்களில் தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து தமிழில் அச்சு எழுத்துகளை வடிவமைத்து அச்சுக் கலையில் தமிழைக் கொண்டுவரப் பெருமுயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழில் அச்சுக்கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார். 1715-ல் கிறிஸ்தவர்களின் புனித நூலின் ஒரு பகுதியான ‘புதிய ஏற்பாட்டை’ தமிழில் அச்சிட்டு சாதனை படைத்தார். கல்வெட்டுகளிலும், செப்புத் தகடுகளிலும் ஓலைகளிலும் மட்டுமே இருந்த தமிழை அச்சுக்கலையில் காகிதத்திற்குக் கொண்டு வந்த பெருமை சீகன்பால்குவையே சேரும்.

இத்தகைய புகழ்பெற்ற சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆம் ஆண்டு நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒளி-ஒலி நாடகம் சென்னையைச் சேர்ந்த லூத்தரன் கலைக்குழுவினரால் பிரமாண்ட மேடையில் நடைபெற்றது. புது எருசலேம் ஆயரும் மறைமாவட்டத் தலைவருமான சாம்சன்மோசஸ் தலைமை வகித்தார். ஒளி-ஒலி நாடகத்தைத் தொடக்கி வைத்த பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசினார். அப்போது அவர், "தரங்கம்பாடியில் சீகன்பால்கு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

Comment