No icon

சவேரியார் பாளையம்

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

பாண்டிச்சேரி- கடலூர் மறைப் பணித்தளத்தின் வேர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை அக்காலத்தில் பரவியிருந்தது. சேலம், கோவை, உதகை என்று நீலகிரி மலை வரை நீண்டிருந்தது. அக்காலத்தில் இப்பகுதியில் பணியாற்றிய பாரிஸ் வேதபோதக சபையினர் சவேரியார் பாளையத்தில் வேரூன்றிய கிறிஸ்தவம்தான் இந்த கோவை மறைமாவட்டத்திலேயே தொன்மை வாய்ந்தது என்று வேதபோதக சபையின் மறைப்பணியாளரான அருள்தந்தை லூனே MEP அவர்களின் குறிப்பிட்டுள்ளார். 1655 ஆம் ஆண்டுகளில் சவேரியார்பாளையத்தில் உள்ள ஆலயம் கோவை பகுதியில் இருந்த 15 முக்கியமான ஆலயங்களில் ஒன்றாக இருந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 1666 ஆம் ஆண்டுகளில் சுமார் 130 கிராமங்களுக்கு இருந்த 23 ஆலயங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

அக்காலத்தில் இங்குப் பணியாற்றிய பாரிஸ் வேதபோதக சபையின் மறைப்பணியாளர் அருள்தந்தை ஆண்ரே ஃப்ரையர் அவர்கள் அக்கால சவேரியார் பாளைய மக்களின் இறை நம்பிக்கையை வியந்து போற்றி பாராட்டியுள்ளார். கோவையில் இருந்த கிளை பங்குகள் அனைத்திற்கும் சவேரியார்பாளையமே தலைமையிடமாக 1850 ஆம் ஆண்டு வரை இருந்ததாக வரலாறு எடுத்துரைக்கின்றது. ஏறக்குறைய இருநூற்றாண்டுகால கோவை மறைப்பணித்தள வரலாற்றின் கருவறையாக சவேரியார் பாளையம் இருந்தது என்றால் அது மிகையன்று.

1855 இல் 250 கத்தோலிக்கர்களும், 1859 இல் 650 கத்தோலிக்கர்களும், 1892 இல் 1391 கத்தோலிக்கர்களும் இங்கு இருந்தனர் என்று ஒரு புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது. கோவை மண்ணுக்கான முதல் குருவான அருள்தந்தை அருளப்பன் அடிகளார் இந்த சவேரியார்பாளையத்திலிருந்துதான் உருவானார் என்பதே இந்த விசுவாச பூமிக்கு கிடைத்த பெருமை. அக்காலத்தில் இப்பகுதியில் பணியாற்றும் மறைப்பணியாளர்கள் (குருக்கள்) தங்கும் இல்லம் சவேரியார்பாளையத்தில் தான் இருந்தது; ஆகையால், இப்பகுதியில் பணியாற்றிய குருக்கள் இங்கு வந்து தங்கி தான், மற்ற பணி இடங்களுக்கு சென்று பணிபுரிந்தார்கள் என்று கடந்த கால வரலாறு எடுத்தியம்புகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பிறகுதான், அதாவது 1892 ஆம் ஆண்டு தான், சவேரியார்பாளையம் தனிப்பங்காக உருவெடுத்தது. அருள்தந்தை கியர் பில்லியன் அவர்கள், முதல் பங்குத்தந்தையானார்.

1805 ஆம் ஆண்டு, அருள்தந்தை துபோய் அவர்கள், அருள்தந்தை ஞானப்பிரகாச நாதரைக் கொண்டு, சவேரியார்பாளையத்தில் தங்க வைத்து ஆலயம் கட்டினார். இதற்கு திரு. சவரிமுத்து என்பவர் தாராள மனதோடு பொருள் உதவி செய்திருக்கிறார். இந்த ஆலயம் அருள்தந்தை துபோய் MEP அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தினால், 1845 ஆம் ஆண்டு, ஆயர் பொன்னாந்து ஆண்டகை காலத்தில் இங்கு மீண்டும் ஒரு புதிய ஆலயம் பொலிவுற கட்டப்பட்டது. இந்த ஆலயம் சத்தியமங்கலம் மிஷனிலேயே, ஒரு சிறந்த ஆலயம் என்று அருள்தந்தை பாக்ரே அவர்கள் தன் எழுத்துகளில் குறித்து வைத்துள்ளார். 1898 ஆம் ஆண்டு, மூன்றாம் முறையாய் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

1905 ஆம் ஆண்டில் இந்த ஆலயத்தின் மணிக்கூண்டை அருள்தந்தை இக்னேஷியஸ் அடிகளார் சிறப்பான முறையில் கட்டினார். 1952 ஆம் ஆண்டு, திரு இருதய ஆண்டவர் கெபி ஒன்று கட்டப்பட்டு, இதன் பங்குத்தந்தையாக பணியாற்றும்பொழுது, நமது மறைமாவட்ட ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருநிலைப்படுத்தப்பட்ட, ஆயர் சவரிமுத்து ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு, அருள்தந்தை ஹார்ட் எம் இருதயம் அவர்களால் இந்த ஆலயம் பக்கவாட்டில் நீட்டிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ஆயர் சவரிமுத்து ஆண்டகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில், அருள்தந்தை இலாசர் அற்புதம் அவர்களால் முகப்பு மண்டபம் கட்டப்பட்டது. 1985 ஆம் ஆண்டு, பாத்திமா மாதா கெபி கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், அருள்தந்தை சி.எஸ். மதலைமுத்து அவர்களால் கோவிலின் உட்புறம் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நமது பங்கு ஆலயமானது, பழுதடைந்த காரணத்தினால் தற்பொழுது இந்த ஆலயம் மீண்டும் அழகுற புதிதாக புதிய பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. புதுமையான ஆலயமாக, இறைபிரசன்னம் நிறைவாய் தரக்கூடிய ஆலயமாக, கடவுளின் மாட்சிமை தங்கும் ஆலயமாக, நம் மூவொரு இறைவனின் ஆசீரை பெற்றுக்கொள்ள அவருடைய ஆலயமாக கட்டப்பட்டுள்ளது.

Comment