No icon

திருத்தந்தையின் பணித்துறப்பு

பணி விலகல் குறித்த வதந்திக்கு திருத்தந்தை முற்றுப்புள்ளி

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் பிலிப் புள்ளேளா அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியத்தில் வழங்கியுள்ள ஒன்றரை மணிநேர பேட்டியில், அந்நாட்டில் கருக்கலைப்பு உரிமையை உச்ச நீதிமன்றம் இரத்து செய்து, அந்த உரிமையை தனி மாநிலங்களுக்கு அனுமதியளித்துள்ளதை குறித்த விவகாரத்தை, நீதித்துறை கண்ணோட்டத்திலிருந்து கருத்துச் சொல்வதற்கு அது பற்றி போதுமான அளவு வாசிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

கருக்கலைப்புக்கு எதிரான தன் கண்டனத்தை மீண்டும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, ஒரு மனித வாழ்வை அழிப்பது, சட்டமுறையானதா மற்றும் சரியானதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளதோடு, கருக்கலைப்பை ஆதரிக்கும் கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு அது குறித்த மேய்ப்புப்பணி அணுகுமுறையை எடுத்துரைப்பது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திரு அவையும், ஆயர் ஒருவரும் தங்களின் மேய்ப்புப்பணி இயல்புகளை இழக்கும்போது, அது ஓர் அரசியல் பிரச்சனைக்கு காரணமாகின்றது என்றுரைத்த திருத்தந்தையிடம், அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது பற்றிய வதந்திகள் குறித்த கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய நகரமான அக்குய்லாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது பற்றிய திட்டம் குறித்து குறிப்பிட்ட பத்திரிகையாளர் புள்ளேளா அவர்கள், அந்நகரம், 1294 ஆம் ஆண்டில் திருத்தந்தை 5 ஆம் செலஸ்டின் தலைமைப்பொறுப்பைத் துறந்ததோடு தொடர்புடையது. மற்றும் முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள், 2009 ஆம் ஆண்டில் அந்நகரைப் பார்வையிட்டபோது தன் (பேராயருக்கான) பாலியத்தை அத்திருத்தந்தையின் கல்லறையில் வைத்தார். அப்போது அவர் தலைமைப்பணியை துறப்பது குறித்து நினைத்திருக்கலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கூறினார். இவை, இம்மாதிரி என்னைப் பற்றி நினைக்க வைத்திருக்கலாம். ஆனால், அத்தகைய எண்ணம் ஒருபோதும் மனதில் தோன்றவில்லை, அவ்வெண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆயினும் பணித்துறப்பு, ஒரு வாய்ப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக, திரு அவையை நடத்தமுடியாது என உடல்நிலை அறிவிக்கும் கட்டத்தில், அந்த வாய்ப்பு உள்ளது. நமக்குத் தெரியாது, கடவுள்தான் சொல்வார் என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Comment