No icon

திருத்தந்தை

உண்மையான மகிழ்ச்சி செயற்கையானதாக இருக்க முடியாது

தூய ஆவியானவரின் ஒளியில், ஒன்றிணைந்த மனதுடன் உங்கள் பணிக்கானதை தெளிந்து தேர்வு செய்யுங்கள் என்றும், ஒருகொடி கிளைகளாய் இணைந்து செயல்படுங்கள் என்றும் திருப்பீடத்தில் தன்னை சந்தித்த மூன்று துறவறக் குழுக்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 14, வியாழனன்று தங்கள் சபையின் பொதுப் பேரவையை முன்னிட்டு இறையன்னை துறவற சபையினர், புனித யோசபாத்தின் பசிலியன் துறவற சபையினர், மறைப்பணி துறவற சபையினர் ஆகிய மூன்று குழுக்களையும் திருப்பீடத்தில், சந்தித்தபோது இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்க கால கிறிஸ்தவக் குழுக்களின் மனநிலையைக் கொண்டிருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சபையின் விருதுவாக்கை மனதில்கொண்டு நமது நம்பகத்தன்மை குறித்து நாம் கேள்வி எழுப்பும்போது, அதை நாம் விளக்குவதும் செயல்படுத்துவதும் நற்செய்தி அறிவிப்பின் அடிபையில் தானா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

எந்தையொரு சபையின் விருதுவாக்கும் நற்செய்தி அறிவிப்பை மையமாகக் கொண்டிருக்கிறது என்றும், இப்பணியை செயல்படுத்த நம்மைத் தூண்டி எழுப்பவேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஆவியின் ஒளியில் தேர்ந்து தெளியும்போது நற்செய்தி அறிவிப்பை சிறப்பாக நம் மனதில் கொண்டிருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் இந்நற்செய்தி அறிவிப்பை நம் மனதில் கொள்ளும்போது, வெறுமனே கருத்தியல்களில் மூழ்கிப்போய்விடாமல், அதனை செயல்படுத்தும் வழிகளை உங்கள் சபைகளின் புனிதர்களான, ஜான் லியோனார்டி, யோசபாத் மற்றும் வின்சென்ட் தெ பவுல் ஆகியோரிடமிருந்து கற்றுத் தெளிந்திட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாட்டிற்கு கிறிஸ்தவ மாதிரியை வழங்கும் ஒரு உன்னதமான நோக்கம் எப்போதும் வளர்க்கப்பட வேண்டும் என்பதை இருபால் புனிதர்களின் வாழ்வு நமக்கு எண்பிக்கிறது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆழமான இறைவழிபாடு, இறைவேண்டலுடன் கூடிய வார்த்தைகள், இறைவனுடன் நேர்மையான உரையாடல் ஆகியவை இல்லையென்றால் உங்கள் பணிகள் எளிதில் அர்த்தமில்லாமல் போய்விடும் என்று எச்சரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சோர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் நாம் பலவீனமடைகிறோம் என்றும், அதனால் நமது பணிகளில் நாம் உற்சாகத்தை இழந்துவிடுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு இசைக்கச்சேரியில் தனித் தனி இசைக் கருவிகள் ஒரு பாடலுக்கு அழகு சேர்க்க முடியாது, எல்லா கருவிகளும் இணைந்து இசைக்கப்படும்போதுதான் அப்பாடல் இனிமை பெறுகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் தனித் தனியாக அல்லாமல் ஒன்றிணைந்து ஒருவர் குரலுக்கு மற்றவர் செவிமடுத்து செயல்படும்போதுதான் நமது துறவற வாழ்வில் இணக்கமும் அமைதியும் ஏற்படுகிறது என்றும் விளக்கியுள்ளார்.

மனத்தாழ்மையும் எளிமையுமே இதயத்தின் உண்மையான மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது என்றும், இதுவே உடன்பிறந்த உணர்வுநிலைக்கான நற்செய்தி அறிவிப்புப் பணியின் உண்மையான அடையாளம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துக்காட்டியுள்ளார்.

Comment