No icon

செப்.4 -ல் அருளாளராக உயர்த்தப்படும் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

இறைஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, இவ்வாண்டு செப்டம்பர் 4ம் தேதி ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில் அருளாளராக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவிப்பார்,.

1912ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, வட இத்தாலியின் போர்னோ டி கானாலே  என்ற (தற்போதைய  கானாலே டி அகோர்டோ ) நகரத்தில் பிறந்த அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்படும் நிகழ்வு குறித்த விவரங்களை, திருப்பீட செய்தித் தொடர்பகம் ஜூலை 11, திங்களன்று வெளியிட்டுள்ளது.

இறைஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக உயர்த்தப்படுவதற்குரிய திருப்பணிகளை ஆற்றிய வேண்டுகையாளர் கர்தினால் பெனியாமினோ ஸ்டெல்லா மற்றும், உதவி வேண்டுகையாளர் திருவாளர் ஸ்டெஃபானியா ஃபாலாஸ்கா ஆகியரோடு சேர்ந்து, ஆயர் ரெனாட்டோ மரங்கோனி அவர்கள், அருளாளர் வழிபாட்டுமுறையை வாசிப்பார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளர் என அறிவிக்கப்பட்டவுடன் அத்திருத்தந்தையின் திருப்பண்டத்தை, வேண்டுகையாளர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் நன்கொடையாக வழங்குவார்கள்.

இத்திருப்பலியில் பங்குகொள்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் பாப்பிறை இல்லத்தின் தலைமைக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழிப்பு திருவழிபாடு

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு, செப்டம்பர் 3ம் தேதி சனிக்கிழமை மாலையில், உரோம் ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், கர்தினால் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள், திருவிழிப்பு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்.

உரோம் ஆயரின் தலைமைப்பீடமான உரோம் ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில், 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் தலைமைப் பணியை ஏற்றார்.

புன்னகை திருத்தந்தை

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அருளாளராக உயரத்தப்பட்டபின், அவர் சார்ந்த பெலூன்னோ பெல்தரே  மறைமாவட்டத்தில், வருகிற செப்டம்பர் 11ம் தேதி நன்றித் திருப்பலி நிறைவேற்றப்படும்.

புனித பேதுருவின் வழிவருபவராக, நவீன கால வரலாற்றில், திருஅவையின் தலைமைப்பணியை 33 நாள்களே ஆற்றிய திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தனது தலைமைப்பணிக்கு இரு பெயர்களைத் தெரிவுசெய்த முதல் திருத்தந்தையுமாவார்.

தனக்கு முன்பு திருஅவையின் தலைமைப்பணியை வகித்த திருத்தந்தையர் புனித 23 ஆம் யோவான், புனித 6 ஆம் பவுல் ஆகிய இருவர் மீது தான் கொண்டிருக்கும் நன்மதிப்பு காரணமாக, இவ்வாறு இவ்விருவரின் பெயர்களையும் தெரிவுசெய்ததாக, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் அறிவித்திருந்தார்.

1523 ஆம் ஆண்டில் திருத்தந்தை 7ஆம் கிளமென்ட் அவர்கள் தொடங்கி, இத்தாலியில் பிறந்த திருத்தந்தையர் பட்டியலில் இத்திருத்தந்தையே கடைசியானவர். “புன்னகை திருத்தந்தைஎன அழைக்கப்படும் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் வழிவருபவர்களாகதிருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல், முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் உள்ளனர்.

Comment