No icon

திருத்தந்தை

உக்ரைனில் அமைதிக்காக உண்மையிலேயே பணியாற்றுங்கள்

உக்ரைன் நாட்டில், தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் குறித்து ஜூலை 17,  ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரைக்குப்பின்னரும் கவலை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டுத் தலைவர்கள், அந்நாட்டின் அமைதிக்காக, உண்மையிலேயே பணியாற்றுமாறு உருக்கமுடன் விண்ணப்பித்தார்.

தினமும் மழையாகப் பொழிந்துகொண்டிருக்கும் ஏவுகணைகளால் சிதையுண்டு காணப்படும் உக்ரைன் நாட்டு மக்களோடு தான் எப்போதும் உடனிருப்பதை மீண்டும் உறுதிசெய்துள்ள திருத்தந்தை, முட்டாள்தனமாக நடத்தப்பட்டுவரும் போருக்கு எரிபொருள்களை அல்ல, மாறாக, அதனை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு, உலகளாவியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அழிவையும் மரணத்தையுமே கொணர்கின்ற, மக்கள் புலம்பெயரக் கட்டாயப்படுத்துகின்ற, உண்மை மற்றும், உரையாடலைக் கொலை செய்கின்றவற்றை மட்டுமே போர் உருவாக்கும் என்பதை எவரும் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்ற கேள்வியையும் திருத்தந்தை பிரான்சிஸ் எழுப்பியுள்ளார்.

உக்ரைன் நாட்டை இரஷ்யா ஆக்ரமித்ததிலிருந்து தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் நிறுத்தப்படுவதற்கு திருத்தந்தை தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment