No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

உரையாடலை மேற்கொள்ளத் தொடங்குவோம்

ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்வது என்பது, நாம் ஒன்றாகச் சேர்ந்து சிந்திப்பதற்கும், உணர்வதற்கும், பணியாற்றுவதற்கும், ஒருவர் ஒருவரைச் சார்ந்து வாழவேண்டியவர்கள் என்ற உணர்வில் வாழ்வதற்கும் விடுக்கப்படும் ஓர் அழைப்பாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

Diálogos Fraternos அதாவது உடன்பிறந்த உணர்வு உரையாடல்கள் என்ற தலைப்பில், அர்ஜென்டீனா நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பன்னாட்டு வர்த்தகம், மற்றும், வழிபாட்டுச் செயலகத்தால் புவனோஸ் அய்ரஸ் நகரில் ஜூலை 14, வியாழனன்று வெளியிடப்பட்ட நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

மற்றவருக்குப் பணியாற்றுவதற்கு தங்களையே அர்ப்பணித்துள்ளவர்களின் அனுபவத்தையும், முன்மாதிரிகையையும் மதிப்பது, நம் வாழ்வுமுறை, உறவுகள், நிறுவனங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் வாழ்வதன் அர்த்தம் ஆகியவை குறித்து மீள்ஆய்வுசெய்ய ஊக்கப்படுத்துகின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

சமூக நட்புறவில் உரையாடல்கள் முக்கியம் என்பதை மீண்டும் கண்டுணர இவை நமக்கு உதவுகின்றன எனவும், நமக்கு மற்றவரின் உதவி தேவை என்பதையும், எவரும் தனியாக காப்பாற்றப்பட முடியாது என்பதையும் கோவிட்-19 பெருந்தொற்று உணரச்செய்துள்ளது எனவும், திருத்தந்தை அந்த அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் எந்த நாட்டை, இனத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், அவரோடு உரையாடலை மேற்கொள்கையில், நம் இதயக் கதவுகள் திறக்கப்படுகின்றன, மற்றும், ஒன்றிணைந்து வாழ்வதே படைப்பாற்றலுக்குச் சிறந்த வழி என உணர்கிறோம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்

"ஒருவர் தன்னைவிட்டு வெகு தொலைவில் இருந்தாலும், அவர் தனக்கு அடுத்திருப்பவர் போன்று, அவரை அன்புகூர்பவர் பேறுபெற்றவர்" என, அசிசி நகரின் புனித பிரான்சிஸ் பதிவுசெய்திருப்பதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, நம்மிடையே வேறுபாடுகள் இருப்பினும், ஒன்றிணைந்து நடப்பதற்கு அஞ்சாமல், உடன்பிறந்த உணர்வு உரையாடல்களை மேற்கொள்ள, இந்நூல் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நிலம், குடியிருப்பு, உணவு, வேலை போன்ற எதுவும் எவருக்கும் குறைபடாமல், சமூக நட்புறவில், அனைவரின் மாண்பு மதிக்கப்படுகின்ற, மற்றும், உடன்பிறந்த உணர்வு சொல்லில் அல்லாமல் செயலில் விளங்குகின்ற ஓர் உலகு அமைக்கப்பட அனைவரும் உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

Comment