No icon

திருப்பீடம்

மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் சிறாரின் உரிமைப் பாதுகாப்பு

சிறார் பாதுகாப்பு வழிமுறைகள் பல்வேறு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டதாக இருப்பதால், டிஜிட்டல் உலகம், போரின் விளைவுகள், புலம்பெயர் வழிகள் போன்றவற்றிலிருந்தும் சிறாரைப் பாதுகாக்கலாம் என்று திருப்பீடம் ஐரோப்பிய கூட்டமொன்றில் விண்ணப்பித்தது.

மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் சிறாரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்னும் தலைப்பில், ஜூலை 18 இத்திங்களன்று, வியன்னாவில் நடந்த OSCE அமைப்பின் கூட்டத்தில் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருப்பீடம், மனித வர்த்தகப் பாதுகாப்பு பற்றி, நாடுகளுக்கு உதவும் OSCE அமைப்பின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு தன் நன்றியை வெளியிட்டது.

உலகளாவிய மாநாடுகள், நாடுகளின் இணக்க வழிமுறைகள், ஒழுங்குமுறைகள், தேசிய சட்டங்கள் போன்றவை, சிறாரைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் சிறந்த நலன்களை உறுதி செய்வதற்கும் காரணமாகின்றன எனவும், இருப்பினும் இவை அனைத்தும் போதுமான அளவில் இல்லை என்பது வருத்தமளிக்கின்றது எனவும் கவலையை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

2013ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று திருத்தந்தை அவர்கள், பொது மறைக்கல்வியுரையின்போது கூறியதுபோல, அமைதியான குழந்தைப்பருவம் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிகாட்டுகிறது, இந்த மகிழ்ச்சியான நம்பிக்கைத் துடிப்பை அடக்க நினைப்பவர்களுக்கு ஐயோ கேடு என்பதை நினைவில்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், OSCE எனும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அவைக்கான திருப்பீட பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.

உலக மற்றும் தேசியக் கடத்தல் தடுப்பு சட்ட விதிமுறைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், இதன்மூலம் பாலியல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைகேடுகளில் இருந்து, சிறார் மற்றும் இளம் வயதினர், நீடித்த, நிரந்தரமான பாதுகாப்பு பெறுவார்கள்  என்பதையும் திருப்பீட பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியது

குழந்தைகள் பாதுகாப்பிற்கு, முதலில் குடும்பத்தை வலுப்படுத்த  வேண்டும் என்றும், கொள்கைகள், திட்டங்கள், வழிமுறைகள் வழியாக குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படைக் கருவிகளை வழங்குவதன் மூலம், குழந்தைகளை அவர்களே பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்றும், அடிப்படைக் கருவிகள் என்பதில் கல்வி, நலஆதரவு, தங்குமிடம் போன்றவையும் அடங்கும் என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியுடன் தங்களது சொந்த குடும்ப சூழலில் வாழ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பெற்றோரின் முதன்மையான பிரிக்க முடியாத கடமைகளை மதிக்காமல் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்வதோ, பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்துவதோ பலனளிக்காது என்றும் திருப்பீடம் இக்கூட்டத்தில் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளது.

Comment