No icon

தாத்தாக்கள், பாட்டிகளுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு உள்ளது

மற்றவரை எவ்வாறு நோக்கவேண்டும் என்று மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை, தாத்தாக்களும், பாட்டிகளும் கொண்டிருக்கின்றனர் என்றுதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 21, வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

ஜூலை 24, வருகிற ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளை மையப்படுத்தி, தாத்தாக்கள் பாட்டிகள் முதியோர் என்ற ஹாஷ்டாக்குடன் (Grandparents&Elderly) தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.

பேரப்பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகின்ற அதே புரிந்துணர்வு மற்றும், அன்புப் பார்வையோடு, மற்றவரை நோக்கும் முறை குறித்து மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டிய மாபெரும் பொறுப்பை நாம் கொண்டிருக்கின்றோம், அமைதியான மற்றும், பலவீனர்கள் மீது அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு வாழ்வுமுறையின் ஆசிரியர்களாகவும் நாம் விளங்கமுடியும்என்று, தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், முதியோரிடம் தன் டுவிட்டர் செய்தி வழியாக  திருத்தந்தை பிரான்சிஸ் பேசியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ம் தேதி, இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் அன்னா சுவக்கீன் விழா சிறப்பிக்கப்படுகின்றது. இவ்விழாவுக்கு அருகாமையில் வருகின்ற ஞாயிறன்று தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் உலக நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் தனிமையில் இருக்கின்ற, மற்றும், நோயுற்றுள்ள முதியோரைச் சந்தித்து அவர்களோடு உரையாடுமாறு திருஅவை அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறது.

Comment