No icon

திருப்பீடத்தின் நிதி சார்ந்த முதலீடுகள் குறித்த புதிய கொள்கை

திருப்பீடம் மற்றும், வத்திக்கான் நாட்டில் மேற்கொள்ளப்படும் நிதி சார்ந்த முதலீடுகள், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகப் போதனைகளுக்கு முரணாக இருக்க இயலாது என்று, ஜூலை 19, செவ்வாயன்று வெளியிடப்பட்ட, திருப்பீடத்தின் ஒரு புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பீடம், மற்றும்  வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகளோடு ஒத்திணங்கிச் செல்வதாக இருக்கவேண்டும் எனக் கூறும் அப்புதிய கொள்கை, மனித வாழ்வின் புனிதம், மனிதரின் மாண்பு, பொது நலன் போன்றுவற்றுக்கு எதிராக இருப்பவற்றில் நிதி சார்ந்த முதலீடுகள் இடம்பெறாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருப்பீடம், மற்றும், அதனோடு தொடர்புடைய நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள், நீதியும், நிலையானதுமான ஓர் உலகை அமைப்பதற்கு உதவுவதாகவும், அவை ஓர் உறுதியான வழியில், போதுமான இலாபத்தோடு திரும்பக் கிடைப்பதாக இருக்கவேண்டும் எனவும் அம்முதலீடுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிகளில் கூறப்பட்டுள்ளனஅம்முதலீடுகள், திருப்பீடத்தின் பணிகளுக்கு உதவுவதாய் அமைந்திருக்கவேண்டும்

இப்புதிய கொள்கை, வருகிற செப்டம்பர் முதல் தேதி நடைமுறைக்கு வரும் என்றும், இது முதலீடு கொள்கை அமைப்பால் மேலாண்மை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கொள்கையை வெளியிட்டுள்ள, திருப்பீடத்தின் பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் இயேசு சபை அருள்பணி ஜூவான் அன்டோனியோ குர்ரேரோ ஆல்வ்ஸ்  அவர்கள், இதனை, திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் மற்றும், அவற்றோடு தொடர்புடைய நிறுவனங்களோடு கலந்தாலோசித்து வெளியிட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.

Comment