No icon

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை

உலக ஆயர் மாமன்றம் - தேசிய அளவில் இறுதி கூடுகை

அகில இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தேசிய அளவிலான இறுதி ஆவண தயாரிப்புக்கான கூடுகை  ஜூலை 26 ஆம் தேதி பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் மேய்ப்புப்பணி நிலையத்தில், சிறப்பு திருப்பலியோடு தொடங்கியது. கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் பிலிப்பி நேரி அவர்கள் இத்திருப்பலியை தலைமையேற்று வழி நடத்தினார். அவரோடு இணைந்து மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் கர்தினாலுமான ஆஸ்வால்ட் கிரேசியாஸ், கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோணி பூலா, சென்னை- மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, பெங்களூரு உயர்மறை மாவட்டத்தின் பேராயர் பீட்டர் மச்சாடோ மற்றும் பல பேராயர்களும், அருள்பணியாளர்களும், துறவியரும், பொதுநிலையினரும் இந்த தேசிய மாமன்ற தொடக்க திருப்பலியில் பங்கு கொண்டார்கள்.

திருப்பலிக்கு பின்னர் தேசிய மாமன்றத்தின் தொடக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதல் நாளில் திருத்தந்தை அவர்கள் ஆரம்பித்து வைத்திருக்கிற உலக ஆயர்கள் மாமன்றம் எவ்வாறு கத்தோலிக்கத் திரு அவையை, புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லுகிறது, இக்காலச் சூழ்நிலையில் மேய்ப்புப் பணியில் எவ்வாறு புதிய வழிமுறைகளை உருவாக்குவது, இது எவ்வாறு திரு அவையினுடைய மிகப்பெரிய பணிகளான ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் நற்செய்தி அறிவிப்பை ஊக்குவிக்கிறது என்று பகிர்ந்துகொள்ளப்பட்டது. இரண்டாம் நாளில் இறுதி அறிக்கையானது தயார் செய்யப்பட்டது. ஏறக்குறைய 60 மறைமாவட்டங்களில் இருந்து வந்திருந்த தலைவர்கள், ஒரு பக்கம் அடங்கிய தங்கள் மறைமாவட்ட கருத்துகளை பகிர்ந்து கொண்ட பின், இவை அனைத்தும் சேர்த்து இறுதி அறிக்கையானது தயார் செய்யப்பட்டது. மூன்றாம் நாளில், முதல் இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகள் சீர்தூக்கி பார்க்கப்பட்டு, முழுமையான இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டது. இறுதியாக கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றி  இந்த மூன்று நாட்கள் தேசியக் கூடுகையை முடித்து வைத்தார்.

இந்த தேசிய மாமன்றத்தில் 15 ஆயர்கள், 12 அருள் பணியாளர்கள், 10 துறவறத்தார் மற்றும் 27 பொதுநிலையினர் அடங்கிய குழுவானது CCBI-யின் இறையியல் மற்றும் கோட்பாட்டு ஆணையத்தோடு இணைந்து, இவை அனைத்தையும் கோர்வையாக தயாரித்து, இறுதி அறிக்கையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பி வைக்கும்.

Comment