No icon

திருத்தந்தை

ஃபீஜி அரசுத்தலைவர் Ratu Wiliame சந்திப்பு

ஃபீஜி நாட்டு அரசுத்தலைவர் Ratu Wiliame Maivalili Katonivere அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆகஸ்ட் 01, திங்கள் காலையில், ஏறத்தாழ 25 நிமிடங்கள்,  திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும்,  பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் அரசுத்தலைவர் Katonivere சந்தித்தார்.

ஃபீஜி தீவு நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே திருப்திகரமான நல்லுறவுகள் நிலவுவது பற்றியும், அந்நாட்டு மக்களின் வாழ்வையும், நாட்டையும் முன்னேற்றுவதில் கத்தோலிக்கத் திருஅவை சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது பற்றியும், இச்சந்திப்புக்களில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், ஃபீஜி பகுதி, மற்றும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் விவகாரங்கள், குறிப்பாக காலநிலை மாற்றத்தின் பாதிப்பு, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாப்பதன் மிகப்பெரிய கடமை, நாட்டின் மனிதாபிமானப் பணிகள் போன்றவை பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் மேலும் அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி உட்பட, தான் வெளியிட்ட பல ஏடுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் Katonivere அவர்களுக்குப் பரிசாக அளித்தார். அரசுத்தலைவர் Katonivere அவர்களும், படைப்பைப் பாதுகாப்பது குறித்த நினைவுச்சின்னம் ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

Comment