இலங்கை
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இலங்கை அருள்சகோதரிகள்
- Author குடந்தை ஞானி --
- Tuesday, 26 Jul, 2022
இலங்கை மக்கள் தங்கள் நாட்டின் வரலாற்றில் இவ்வளவு மிக மோசமான பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை சந்தித்திருக்கமாட்டார்கள். இருப்பினும் இந்த சூழ்நிலை எதிர்பாராத ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் உருவாக்கி இருக்கிறது என்று இலங்கையில் பணிபுரியும் கத்தோலிக்க அருள்சகோதரிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சால்வத்தோரின் சபையை சார்ந்த அருள்சகோதரி துல்சி ஏறக்குறைய 13 ஆண்டு காலமாக, சிங்களர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக பணிபுரிந்து வருகிறார். இவர், “வடக்கும் தெற்கும் ஒன்றிணைந்து விட்டது. சிங்களர்களும் தமிழர்களும் கரம் கோர்த்துவிட்டனர். பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என எந்த வேறுபாட்டையும் இங்கு காண இயலவில்லை” என்று கூறினார்.
சால்வத்தோரின் சபைதலைவி அருள்சகோதரி சிரோமா, “நான் பகல் வேலைகளில் என் சபையில் எனக்கு இருக்கும் பணிகளை முடித்துவிட்டு, இரவு நேரங்களில் வீதிகளில் போராடும் மக்களோடு என்னை இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார். திருகுடும்ப சபையை சேர்ந்த அருள்சகோதரி மரியரத்தினம், “பொருட்களை வாங்க மக்களிடம் பணமில்லை, பணத்தை சம்பாதிக்க வேலையும் இல்லை” என்று கூறினார். நல்லாயன் சபையை சேர்ந்த அருள் சகோதரி பெரேரா, “முதியோர்களுக்கும், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் இல்லங்களை நடத்தி வருகிறோம். அவர்களுக்கு உணவு சமைக்க விறகுகள் கூட வாங்குவது மிக கடினமாக இருக்கிறது” என்று கூறினார்.
அனைவரும் பகல் நேரங்களில் தங்கள் சபையில் தங்களது கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் போராடும் மக்களோடு இணைந்து அவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவது, மருத்துவ ரீதியாக பராமரிப்பது என பல பணிகளை செய்து வருகிறார்கள் என்று UCA செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளர் தாமஸ் 2022, ஜூலை 23 ஆம் தேதி கூறினார்.
Comment