No icon

அருள்பணியாளர் அமில ஜீவன்ந்தா

இலங்கையை விட்டு வெளியேற கத்தோலிக்க அருள்பணியாளருக்குத் தடை

 இலங்கை நீதிமன்றமானது கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கும் அவரோடு போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கும் 5 முக்கிய நபர்களுக்கும்  வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்து அதிருப்தியடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மட்டுமன்றி, பல்வேறு சமயத்தலைவர்களும் போராட்டக்களத்தில் முன்னின்று போராடி வருகின்றனர். குறிப்பாக கத்தோலிக்க ஆயர்களும், அருள்பணியாளர்களும் மற்றும் அருள்சகோதரிகளும் அதிக அளவில் வீதிகளில் மக்களோடு போராட்டத்தில் உள்ளனர்.  அவ்வாறு மக்களோடு களத்தில் இருப்பவர்களுள் ஒருவர் அருள்பணியாளர் அமில ஜீவன்ந்தா ஆவார். சட்டத்துக்கு புறம்பாக கூட்டத்தை கூட்டியது, பொது உடைமைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது என குற்றம் சாட்டப்பட்டு, இலங்கையை விட்டு வெளியேற அருள்பணியாளர் அமில ஜீவன்ந்தாவிற்கும், அவரோடு போராட்டத்தில் ஈடுபட்ட 5 பொதுநிலையினருக்கும் இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்த தீர்வானது ஜூலை 25 ஆம் தேதி கொழும்பு குற்றவியல் பிரிவால் வழங்கப்பட்டது. காவல்துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றமானது இவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை முடக்கியுள்ளது. அருள்பணியாளர் அமில ஜீவன்ந்தா இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நாட்டில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து போராடி வருகிறார்.

இலங்கை கர்தினால் இரஞ்சித், “இலங்கை அரசாங்கம் மக்களின் தேவைகளை சரிவர புரிந்து அதை சரி செய்ய வேண்டும். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு இலாகாவினர், நாட்டில் நிலவி வரும் அவசரகால சட்ட நிலையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Comment