No icon

அருள்பணியாளர் ஹென்றி யூசிபியோ

திரு அவைக்கும் இளையோருக்கும் இடையே நிலவும் உறவு

30 நாடுகளைச் சேர்ந்த 700 கத்தோலிக்க இளையோர் பிரதிநிதிகள் மற்றும் அவர்களை வழிநடத்தும் பிரதிநிதிகள் பிலிப்பீன்சில் நடத்திய 3 நாள் கூட்டம் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு வந்தது.

மனிலாவின் இயேசு சபை பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 13 முதல் 15 வரை இடம்பெற்ற இந்த கத்தோலிக்க இளையோர் பிரதிநிதிகள் கூட்டம், ‘நவீன சமுதாயத்தில் மேய்ப்புப் பணி மற்றும் விசுவாசத்தின் முதிர்ச்சியை நோக்கிய பயணத்தில் உடன் செல்லுதல்என்பதை நோக்கமாகக் கொண்டு இடம்பெற்றது.

திரு அவையில் இளையோர் பணியின் முக்கியத்துவத்தை உணரவும், வாழ்வின் அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்கவும் இந்த மனிலா இளையோர் கூட்டம் உதவியதாக இதில் கலந்துகொண்ட மரியா லியா லீ தெரிவித்தார்.

இலயோலா இறையியல் கல்வித்துறை மற்றும் தொன்போஸ்கோ இறையியல் கல்வித்துறையால் இணைந்து ஏற்பாடுச் செய்யப்பட்ட இந்த இளையோர் கூட்டத்தில், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, இந்தியா, வியட்நாம், அமெரிக்க ஐக்கிய நாடு, பிரான்ஸ், குரோவேசியா மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

திரு அவைக்கும் இளையோருக்கும் இடையே நிலவும் உறவு, மேய்ப்புப்பணி அக்கறையின் முக்கியத்துவம், திரு அவைத் தலைவர்கள் மற்றும் இளையோர் தலைவர்கள் ஆற்றும் பணி போன்றவை பற்றி விவாதித்த இக்கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இயேசு சபை அருள்பணியாளர் ஹென்றி யூசிபியோ அவர்கள், இளையோரின் மூன்று நாள் கூட்டமும் உயிரோட்டமுடையதாக, வழிநடத்துவதாக, விசுவாசப் பயணத்தில் ஆதரவளிப்பதாக இருந்தது என்றார்.

               

Comment