No icon

ஆயர் அல்வாரெஸ்

நிகரகுவாவில் தொடரும் கத்தோலிக்க திருஅவை மீதான அடக்குமுறைகள்

தென் அமெரிக்க நாடான நிகரகுவாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க ஆயர்கள் அத்தலத்திருஅவையுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலத்தீன் அமெரிக்க நாட்டில் அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பணியாற்றுமாறும் ஆயர் அல்வாரெஸின் விடுதலைக்காகவும், நாட்டில் அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காகவும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் பன்னாட்டு சமூகத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகரகுவா அரசிற்கும் தலத்திரு அவைக்கும் இடையிலான உறவுகள் 2018 ஏப்ரல் முதல், அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு சீர்குலைந்த நிலையில் சர்ச்சைக்குரிய 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மேலும் மோசமடைந்துள்ளது. அரசுத்தலைவர் ஒர்தேகாவிற்கு எதிராக கத்தோலிக்க ஆயர்கள் பணியாற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டும், நாடுகடத்தப்பட்டும் தொடர்ந்து பல துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், மனகுவாவின் துணை ஆயர் சில்வியோ ஜோஸ் பேஸ், 2022 ஆம் ஆண்டில், நிகரகுவாவிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் வால்டெமர் ஸ்டானிஸ்லா, ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது, மேலும் பிப்ரவரி மாதம், மதகல்பாவின் ஆயர் ரோலண்டோ அல்வாரெஸ் தேசத்துரோகம், தேசிய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், தவறான செய்திகளைப் பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

நீலம் மற்றும் வெள்ளை கண்காணிப்பு (Monitoreo Azul y Blanco) என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் ஏப்ரல் 21 ஆம் தேதி வெள்ளியன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் நிகரகுவா காவல்துறையினரால் 39 பேர் கைது செய்யப்பட்டு தனிக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comment