No icon

நிகரகுவாவில் அருள்பணியாளர்கள் கைது

2007-ஆம் ஆண்டிலிருந்து நிகரகுவா நாட்டின் அரசுத் தலைவராக டேனியல் ஒர்த்தெகா பதவி வகித்து வருகிறார். 2021-ஆம் ஆண்டின் தேர்தலிலும் வெற்றி பெற்று 5-வது முறையாக அந்நாட்டின் அரசுத் தலைவராக இருந்து வருகிறார். உழைக்கும் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராக ஒர்த்தெகா கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக கத்தோலிக்கத் தலத் திரு அவை எழுப்பிய உரிமைக் குரலுக்காகத் தலத் திரு அவையின் தலைவர்களை ஒர்த்தெகா அரசு  கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றியவுடன் அருள்பணியாளர் குஸ்தாவோ நிகரகுவா காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களில் மட்டுமே நிகராகுவா நாட்டில் 5 அருள்பணியாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை ஓர் ஆயரும், 14 அருள்பணியாளர்களும், 2 குருமட மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நிகரகுவாவின் மனித உரிமைகள் அமைப்பு, ஒர்த்தெகா அரசு தனக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கொலை செய்தும், காயப்படுத்தியும், தடுப்புக் காவலில் வைத்தும் வருவதால், 2018-ஆம் ஆண்டிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் நிகரகுவாவிலிருந்து வெளியேறி வருவதாகக் கூறியுள்ளது. பல அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், பொதுநிலையினரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல பங்குகள் வெறிச்சோடி இருப்பதாக அந்நாட்டு தலத் திரு அவை கவலை தெரிவித்துள்ளது.

Comment