எதிர்காலம் எப்படி அமையும்?
அண்மையில் எத்தியோப்பியா, ஜாம்பியா, தான்சானியா, புரூண்டி, கத்தார், மௌரித்தானியா ஆகிய நாடுகளின் வத்திக்கானுக்கான புதிய தூதுவர்களைச் சந்தித்த திருத்தந்தை, “ஒவ்வொரு நாடும் தனக்கென்று தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்ற தனித்தன்மைகளைக் கொண்டிருந்தாலும், அனைவரும் மனித மாண்பில் ஒன்றுபட்டுள்ளோம். குடும்பத்தில் அன்பு, சகோதரத்துவ உணர்வு, ஒன்றிணைந்து செயல்படுதல், பகிர்தல், அக்கறை காட்டுதல் போன்ற நல்ல பண்புகளால் மனித மாண்பைக் காக்கின்றோம். ஆனால், பல நாடுகள் தங்களுக்குள்ளான மோதல், போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழ்நிலையில் இருப்பதால், புலம் பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. மக்களிடத்தில் உள்ள மனித மாண்பைப் பார்க்காமல் அவர்களை வணிகப் பொருள்களாகப் பார்க்கின்றோம். வளர்ச்சி என்று சொல்லி காலநிலை மாற்றத்திற்கு நாமே வழிவகுத்து, பொருளாதாரச் சரிநிகரற்ற நிலையைச் சமாளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், பல நாடுகளில் குழந்தைப் பிறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்காலத்திற்கு நாம் எதனை விட்டுச் செல்லப் போகின்றோம்? என்று ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு நம்பிக்கையோடு தீர்வு காண வேண்டும்” என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
Comment