No icon

Church in Pakistan

கோவிட் 19 காலம், ஒன்றிப்பை வெளிப்படுத்தும் காலம்

கொரோனா தொற்றுநோய் காலத்தில், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் எவரும் ஒதுக்கப்படாமல், பாகுபாடுகளற்ற அக்கறையுடன் அனைவரும் ஒரே குடும்பமாக கருதப்பட வேண்டும் என பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் அழைப்புவிடுத்தார்.

கோவிட்-19 நோய்க் காலம், பாகிஸ்தான் நாட்டை, ஒன்றிப்பின் நாடாக காட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறிய கர்தினால் கூட்ஸ் அவர்கள், இஸ்லாமியர்கள் பலர், ஏழை கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உதவுவதைக் காணும்போது மகிழ்ச்சி பிறக்கின்றது என்று கூறினார்.

கொரோனா தொற்றுநோய் காலத்தில், கத்தோலிக்கர்கள் திருப்பலிக்குச் செல்லமுடியாத நிலை இருப்பதைப்பற்றியும் குறிப்பிட்ட கர்தினால் கூட்ஸ் அவர்கள், கடவுளின் அன்பிலிருந்து நம்மை எவரும் விலக்கி வைக்கமுடியாது எனவும், இந்த உயிர்ப்பு காலத்தில் பல்வேறு வழிகளில் சமூகத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி விசுவாசிகளைச் சென்றடைந்த அருள்பணியாளர்ளுக்கு, தான் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான காலத்தில் துன்புறும் ஏழை மக்களுக்கு, தலத்திருஅவை தன்னால் இயன்ற வழிகளில் உதவி வருவதாகவும் கராச்சி பேராயரான கர்தினால் கூட்ஸ் தெரிவித்தார்.

கராச்சியின் இஸ்லாம் மதத்தலைவர் ஹபிஸ் நயிம் உல் ஹக்  அவர்கள், ஏழை கிறிஸ்தவர்களுக்கு உணவு உதவிகளை விநியோகம் செய்தது மற்றும், பல இஸ்லாமியர் தாங்களே முன்வந்து உதவியது பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் கூட்ஸ் அவர்கள்இச்செயல்பாடுகள், தேசிய ஒன்றிப்பின் வெளிப்பாடாக இருக்கின்றன என்று, தன் பாராட்டுக்களை வெளியிட்டார். (UCAN)

Comment