No icon

அருள்சகோதரி முனைவர் B.J. குயின்சிலி ஜெயந்தி

கிராமப்புறக் கல்வியில் திருச்சி புனித அன்னாள் சகோதரிகள்

பெண்கல்வியே ஒரு தேசத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் என்றார் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி. சுதந்திரம் பெற்றதன் வைர விழாவைக் கொண்டாடும் இந்தியாவில் இன்னும் பெண்கல்வியும் பாலின சமத்துவமும் எட்டாக் கனியே.

"பட்டங்கள்ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி"

என்று மகாகவி பாரதியாரின் கனவு இன்னும் நனவாகவில்லை. பெண்கல்வி சமத்துவப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த 160 ஆண்டுகாலமாக, திருச்சி புனித அன்னாள் சகோதரிகள் தங்களின் தன்னலமற்ற கல்விப் பணி மூலம் பெண்ணுலகில் அறிவுப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி வருகின்றனர். தங்கள் பணித்தளங்களில் பெண்கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து சமூக அறத்துடன் அதனைத் துணிந்து செயல்படுத்துகின்றனர்.

திருச்சி புனித அன்னாள் சகோதரிகளின் முதன்மையான பணி கல்விப் பணி என்றால் அது மிகையன்று. எட்டுத் திக்கிலும், நகர்புறம் கிராமப்புறம் என்று வேறுபாடு ஏதுமின்றி, ஏழை எளிய பெண் குழந்தைகளின் எதிர்காலம் கல்வியில்தான் கட்டமைக்கப்படுகிறது என்று உணர்ந்து, கிராமப்புற, ஒதுக்கப்பட்ட, சமூகத்தின் விளிம்பு நிலை பெண்களின், ஏழை-எளியவர்களின், கைம்பெண்களின் குழந்தைகளின் கல்விக்கண் திறந்திட, அரும்பணியாற்றி வருகிறார்கள். மழலையர் மற்றும் தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்கள் மூலம் நூற்றி அறுபத்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், இப்பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.

மழலையர் மற்றும் தொடக்கக் கல்வி

இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார் இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய் இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?” என்ற பாரதிதாசனின் சிந்தனைதனை தாய்மொழி வழியாகவும், ஆங்கிலமொழி வழியாகவும், கிராமங்களில் அறிவுப் புரட்சி ஏற்பட புனித அன்னாள் சகோதரிகள் தங்களை அர்ப்பணித்துள்ளனர். இவர்களின் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற  அருள்சகோதரிகள் ஆடல், பாடல் மற்றும் விளையாட்டு வழி பாடங்கள் சொல்லிக் கொடுக்கின்றனர்.

நடுநிலைக் கல்வி

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்என உணர்ந்த இந்த சகோதரிகள் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்றுத் தராது, வாழ்க்கைக் கல்வியிலும் இளம் சிறார்கள் தேர்ச்சிபெற கல்வி அளிக்கிறார்கள். அக்காலத்தில் பாதையில்லா ஊர்களுக்கு கால்நடையாகவும், சாலை வசதி நிறைந்த ஊர்களுக்கு இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டுவண்டிகளிலும் வில் வண்டிகளிலும் பயணம்செய்து, ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அறிவொளி ஏற்றியவர்கள் அன்னாள் சகோதரிகள். வசதிகள் இல்லா ஊர்களில்கூட, தங்கள் வசதிகளைக் குறைத்து, ஏழை மாணவர்களின் நல்ல கல்விக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தவர்கள்.இவர்களால் துவங்கப்பட்ட பல பள்ளிகள் இன்று பொன் விழா, வைர விழா மற்றும் நூற்றாண்டு விழாவும் கொண்டாடி, தங்களது பணியின் ஆழத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.

உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி

இற்றைநாள் பெண்கல்வியாலே; முன்னேற வேண்டும் வையம் மேலேஎன்று பெண் கல்வியின் தேவையை பாவேந்தர் தமது இசையமுதில் வலியுறுத்துகிறார். கட்டணம் செலுத்தி கல்வி பயில இயலாத மாணவ மாணவியரை அள்ளி அரவணைத்து, அடைக்கலம் தந்து, பள்ளிகளில் முன்னுரிமை கொடுத்து சேவையாற்றுபவர்கள் திருச்சி புனித அன்னாள் சகோதரிகள். மாநில அரசுகள் நிதியுதவி கொடுக்கா நிலை ஏற்பட்ட போதும், பின்வாங்காது மாணவர்களிடம் குறைந்த கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்த வருமானத்திலிருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தொடங்கி, ஆய்வகக் கட்டிடங்கள் வரை அனைத்தையும் கட்டி பெண்கல்விக்கான தங்களது அயரா உழைப்பை வழங்கி வருகின்றனர்.

உயர் கல்வி

பெரியகுளம் என்ற சிற்றூரில் பெண்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக ஒரு கலை - அறிவியல் கல்லூரியினைத் துவங்கி, இளங்கலைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறார்கள் புனித அன்னாள் சகோதரிகள்.

இச்சபையால் கல்லூரி நடத்த முடியுமா? என பலர் ஐயமுற்றபோதும் 1970 களில் துணிச்சலான முடிவெடுத்து, திரு. ஜெயராஜ் குழுமத்தினருடன் இணைந்து, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியினைத் துவங்கி, இன்று தன்னாட்சிக் கல்லூரியாய் அதனை வளர்த்தெடுத்து தேசியத் தர மதிப்பீட்டில் 3.46/4.0 மதிப்பெண்கள் பெற்று, தங்கள் கல்விப்பணியில் சிகரம் தொட்டிருக்கின்றனர்.

இன்றும் தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒழுக்கமும், தரமான கல்வியும் ஒருங்கே கிடைக்கும் ஒரே கல்லூரி எனில், மக்கள் கண்முன் வந்து நிற்பது ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி தான்.

போக்குவரத்து வசதியில்லாத பல குக்கிராம மற்றும் மலைக்கிராம பெண் குழந்தைகள் தங்கிப் படித்திட விடுதிகள், கல்லூரிக் கல்வியுடன், வீட்டிலிருந்தபடியே பொருளீட்டிட தையல், தட்டச்சுப் படிப்புகள், தொழில்சார் பட்டயப் படிப்புகள், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவியருக்கு ஆண்டுதோறும் குறைந்தது 60 இலட்சத்திற்கும் அதிகமான கல்வி நிதியுதவிகள், நடுவணரசின் நிதியுதவியுடன் கூடிய சமுதாயக் கல்லூரி என இக்கல்லூரி வளாகத்தினுள் வந்து சேரும் இளம் பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்சார் கல்வி பெற்று, தங்கள் வாழ்வு வளமாகிட வழிகாட்டுகிறது இக்கல்லூரி.

இதே துறவற சபையினர் பண்ருட்டி அருகே உள்ள செட்டிப்பாளையத்தில் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளைத் தொடங்கி, இளையோர் எண்ணற்ற மாணவ மாணவியரை தொழில் வல்லுநர்களாக உருவாக்கி வருகின்றனர்; ஆசிரியர் பயிற்சிக் கல்வியியல் கல்லூரி மற்றும் சிறப்புக் கல்வியியல் கல்லூரி மூலம் பல சிறந்த ஆசிரியர்களை வடிவமைக்கும் அற்புதப் பணிதனையும் குறைவின்றி செய்து வருகின்றனர்.

நிறைவாக

மனித வாழ்க்கையை மேன்மையுறச் செய்வது கல்வியே. "அறிவிலாக் குடும்பம் நெறிகாணாது நின்றபடி விழும்" எனக் குடும்ப வாழ்விற்குக் கல்வி தேவை என பாவேந்தர் வலியுறுத்திக் கூறுகிறார். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற வேர்களாம் பெண்கள் கல்வி பெற அயர்வின்றி உழைக்கும் திருச்சி புனித அன்னாள் சகோதரிகள் வலிமையான பாரதம் உருவாக்கும் அறப்பணிதனை புனிதப் பணியாய் தொடர்கிறார்கள் என்பதே உண்மை.

திருச்சி புனித அன்னாள் சகோதரிகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள்:

கலை அறிவியல் கல்லூரி - 1

பொறியியல் கல்லூரி - 1

பாலிடெக்னிக் கல்லூரி - 1

கல்வியியல் கல்லூரி - 1

சிறப்புக் கல்வியியல் கல்லூரி- 1

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி - 1

சமுதாயக் கல்லூரிகள் - 2

தொழிற் பயிற்சிப் பள்ளி - 1

மேல்நிலைப் பள்ளிகள் - 17

உயர்நிலைப் பள்ளிகள் - 6

நடுநிலைப் பள்ளிகள் - 4

தொடக்கப் பள்ளிகள் - 18

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் - 13

மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகள் - 3

ஆங்கில நடுநிலைப் பள்ளிகள் - 2

ஆங்கில நர்சரி தொடக்கப் பள்ளிகள் - 16

மலையாள நர்சரிப் பள்ளிகள் - 7

மலையாள மேல் நிலைப் பள்ளிகள் - 2

மலையாள உயர்நிலைப் பள்ளி - 1

மலையாள நடுநிலைப் பள்ளி - 1

இந்தி மேல்நிலைப் பள்ளி - 1

தொழிற் பயிற்சி மையம் - 6

தட்டெழுத்துப் பயிற்சி பள்ளிகள் - 4

தையல் பள்ளிகள் - 3

கணிப்பொறி மையங்கள் - 2

நெசவு மையம் - 1

உடல் ஊனமுற்றோர் மையங்கள் - 2

மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகம் - 2

மாற்றுத்திறன் பள்ளிகள் - 13

செவிலியர் பள்ளி- 1

வீட்டுப் பணிப்பெண்கள் மையங்கள் - 3

Comment